இரசித்தல் என்பதும் ஒரு கலையே

ஏலையா க.முருகதாசன்-யேர்மனி

இரசித்தல் என்பது ஒரு சுவையான உணர்வு. அதுவும் ஒரு கலை உணர்வே. பார்ப்பவரின் கேட்பவரின் இரசிக்கும் தன்மையைப் பொறுத்து அவை வேறுபடும். அசையும், அசையாத பொருட்களாக அவை எதுவாக இருந்தாலும் அவறிறின் மீது எமது பார்வை சென்றவுடன் அதனை இரசிக்கத் தொடங்குவோமாயின் எம்மையறியாமலே அதன் மீது நாட்டமும் விருப்பமும் ஏற்பட்டுவிடுகின்றது. அசையாத பொருட்களாக உயிரற்ற பொருட்களும் தம்மிருப்பிடத்தைவிட்டு நகராத பொருட்களாக இருப்பவையும்,அசையும் பொருட்களாக மனிதர்கள், விலங்குகள் பறவைகள் என நாம் வகுத்து வைத்திருக்கின்றோம். உயிரற்ற பொருட்களின் ஒரு உதாரணமாக ஒரு மேசையை எடுத்துக் கொண்டால் அது செய்யப்பட்ட வடிவமைப்பில் உள்ள அழகிய வேலைப்பாடுகளைப் பார்த்தவுடன் „ ஆகா“ என்று இரசிக்கத் தொடங்குகின்றோம்.

அந்த மேசையின் வடிவமைப்பு வேலைப்பாடுகளில் காணப்படும் கலையழகு எம்மை ஆட்கொண்டு இரசிக்க வைக்கின்றது.பின்னர் அது பற்றி விதந்துரைக்க விரும்புகிறோம். இப்படி உயிரற்ற பொருட்களின் மீதான இரசிப்பு அதன் மீது விருப்பாக மாறுகின்றது. மழைநீர் சிறு சிறு நீளத் துளிகளாக விழும் போது அதனின்று எழும் குளிர்ச்சியும் அழகும் அதையும் ஒரு கலையாக பார்த்து இரசிக்கத் தோன்றி அதுவே விருப்பாக மாறுகின்றது. கரைபுரண்டோடும் வெள்ளம்,சலசலத்தோடும் ஆற்று நீர், மலையினின்றும் நீர்வீழ்ச்சி நீர்ப்புகையாகியும் நீர்த்துளியாகியும், மடித்து மடித்து ஒரு பெண்ணின் அடிவற்றில் அழகாக செருகிய வெள்ளைச் சீலைபோல தோற்றம் கொண்டு, மண்மடியைத் தழுவித் தளர்ந்துருகி பரவிப் பரந்து செல்கையில் அதன் அழகை மனம் இரசித்து கலை உணர்வைத் தோற்றவிக்கின்றது. மலைமுகடில் வெள்ளைப்பனி முடி தரித்து நிற்கும் அழகை அதன் கம்பீரத்தைப் பார்க்கும் போது இரசிக்கத் தோன்றுகின்றது அதுவும் ஒரு கலையாக எம்மனதை அலங்கரிக்கின்றது.

வானத்தின் அழகையும் விதம் விதமான மேகப் பொதிகளின் அழகையும் இரசித்து ஒப்பிட்டுக் கற்பனை கொள்கின்றோம்.மரங்களின் கம்பீரமும் அதனை ஆரத்தழுவிச் சுற்றிச் சுற்றி நிற்கும் கொடியையும், தன்னைத் தழுவ இடம் கொடுத்து நிற்கும் மரத்தையும் கொடியையும் பார்க்கும் போது இரசிக்கத் தோன்றுகின்றது அதிலும் கலையைக் காண்கிறோம்.தரையில் படர்ந்தும் நிமிர்ந்தும் நிற்கும் புற்களின் நாநுணியில் தூங்கிடும் பனித்துளி பகலவனின் வெளிச்சத்தில் எங்கள் கண்களுக்கு விருந்தாகி இரசிக்கத் தோன்றுகின்றது.தூங்கிய பனித்தளிபுல்நாநுணி விட்டகன்று சிதறி விழுகையில் அங்கொரு அழகு தோன்றுகின்றது,உற்றுக் கவனிக்கை அதனையும் இரசித்து உள்ளம் உவகை கொள்கின்றது.மெய்தடவிச் செல்லும் தென்றலின் சுகத்தை உடல் உணர்ந்து மெய்மறந்து இரசிக்கின்றோம்.

சின்னச் சின்ன காற்று பூவிதழை நோகாதசைக்க,பூவிதழின்றும் வரும் சிறு காற்றில் தனது சிறு இறக்கைகள் தடுமாற உன்னைப் பருக வந்த எனக்கு உன் வாசனையால் கிறங்க வைக்கிறாயே என பூவிற்கும் தேனீக்குமான கூடலுக்கான ஊடலில் அதனைக் காண்கையில் இசையாகி நிற்கும் தேனீயின் ரீங்காரத்தை பூ இரசித்தும் இரசிக்காத மாதிரி போக்குக் காட்டுகையில் மன்மதக் கலையின் பரிமாணத்தை அங்கெம் கண்கள் இரசிக்கையில் ஆகா என மனம் குதூகலிக்கின்றது.

ஓவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு அழகிருக்கின்றது, கம்பீரமிருக்கின்றது.ஒவ்வொரு பறவைக்கும்,ஒவ்வொருவகை ஊர்வனவற்றிற்கும், எறும்புகளுக்கும் அழகிருக்கின்றது கம்பீரமிருக்கின்றது.சின்னஞ்சிறு சிட்டக்குருவியைக்கூட உற்றுப் பார்த்தால் இரசிக்கத் தோன்றும், இயற்கை இப்படி ஒரு கலை வடிவத்தை இக்குருவிக்கு கொடுத்திருக்கிறதே என வியக்கத் தோன்றும். சிங்கத்தின் அலட்சியமான நடையையும், புலியின் பாய்ச்சலையும், யானையின் பூமியை அழுத்தி நடக்கும் அதன் தன்னம்பிக்கையான நடையையும் கவனிக்கையில் அவற்றை இரசிக்கத் தோன்றுகின்றது. வரிக்குதிரையின் வரிவரியான தோலழகும் நடக்கையில் அவ்வரிகள் சுருங்கியும் விரிந்தும் வித்தை காட்டும் அழகை இரசிக்கத் தோன்றுகின்றது.இயற்கை எல்லாவற்றையும் இரசிக்கத்தக்கவாறு கலையுணர்வுடன் படைத்திருக்கின்றதே என அதிசயிக்கத் தோன்றுகின்றது.குதிரை கம்பீரமாக நடக்கையில் அதன் பிட்டத்தின் தசைகளும் முழு உடலின் தசைகளும் தோலையும் அசைய வைத்து, தோலை மூடிய மயிர்களின் மினுமினுகக் வைக்கையில்,நிமிர்ந்த உயர்ந்த உடலழகு கொண்ட பெண்ணொருத்தி போல நினைத்து இரசிக்க முடிகின்றது.தெருவில் குப்பைகள் பரவி நிற்கையில் இயந்திரமொன்று அதனைச் சுத்தம் செய்து செல்கையில், சுத்தமான தெருவைப் பார்க்கையில் கண்ககள் சுத்தத்தை இரசித்து இரசித்து மகிழ்கின்றது.

இசையை, பாடலை செவிகள் உள் வாங்குகையில் அவற்றை இரசிக்கத் தோன்றுகின்றது.அதன் கலைத் தோற்றமுணர்ந்து இசைக்கலை என்று பெயரிட்டல்லவா மகிழ்கிறோம்.மழலையின் மொழியில் மயங்கி அம்மொழியின் சுவையை இரசித்து இரசித்து உள்வாங்குகையில் இதுவல்லவோ உலக இன்பத்தின் உச்சம் என இரசித்துக் குதூகலிக்கின்றோம்..இதுவும் மழலைமொழிக் கலை என இதயம் இதமாகின்றது. முலை கொடுத்து, மழலையின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே பாலூட்டுகையில் மழலையின்; பஞ்சு போன்ற பிஞ்சிதழ் உந்தி உந்தி பால் குடிக்கையில் தாயின் வாஞ்சை முகத்தினில் பரவ, மழலையின் களிப்பு அம்மழலையின் வதனங்களில் குடியிருக்க தாய் சேய் பிரிக்க முடியா பாசத்தைக் காண்கையில் அதையும் கண்ணியமாக இரசிக்க முடிகின்றது பாலூட்டுவதிலும் கலையைக் காணலாம்.சுவை சுவையாகச் சமைத்து நேரந் தவறாது உணவு கொடுத்து உடல் நலம் காத்து,கண்ணின் மணிகளாய் எண்ணி பாச இமைகளால் காப்பது போல காத்து வளர்க்கும் தியாக வடிவான அம்மாவின் பாசத்தை இரசிக்க முடிகின்றது, காதலன் காதலியைத் தெரிவு செய்வதிலும், காதலி காலனைச் தெரிவு செய்வதிலும் முதலில் இரு பாலரும் எதிர்ப்பாலினரை இரசிப்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது.குமரிகள் பலவிதமான உடல்வாகிலும் முகத் தோற்றத்திலும் இருப்பார்கள்.அது போலவே இளைஞர்களும் இருப்பார்கள். எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்திழுக்கும் குமரிப் பெண்கள் சிலரைக் கவரவே மாட்டார்கள். இவளையா நீ காதலிக்கிறாய் எனக் கேலி செய்யும் பெண்ணின் அழகினையும் ஒரு காளை இரசிப்பான். முகமெல்லாம் பருக்கள் போட்டு இருக்கும் குமரிப் பெண்ணின் அந்தப் பருக்கள்கூட அவன் பார்க்கும் பெண்ணிற்கு அழகாக இருக்கிறது என அவளை அவன் இரசிப்பான். பிரபஞ்ச வெளியில் நின்று பூமியை கையிலேந்திப் பாருங்கள் அதனை இரசித்து மகிழ்வீர்கள். இரசித்தல் என்பது ஒரு கலை உணர்வே.

1,366 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *