ஆணாதிக்கமும் தேசவழமையும்

- டிலோஜினி மோசேஸ்- (சட்டம் பயிலும் மாணவி) வடமாகாணம்;. இலங்கை
விக்கிபீடியாவை வாசித்து விட்டு தேசவழமை சட்டம் ஆணாதிக்கத்தின் உச்ச வெளிப்பாடு என்று வாதம் செய்பவர்கள் தயவு செய்து கொஞ்சம் ஆழமான ஆய்வுகளை செய்து இலங்கையில் உள்ள ஏனைய சட்டங்களையும் வாசித்து அறிந்த பிறகு பேச தொடங்குவது நியாயமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
குறிப்பாக “வரதட்சனை ” என்ற வார்த்தை பிரயோகமே தேச வழமை சட்டத்தில் இல்லை. நாங்கள் பேசுகிற சீதனத்துக்கும் நீங்கள் தென்னிந்திய தமிழ் சினிமாவில் பார்க்கும் வரதட்சனைக்குமிடையில் மிக தெளிவான வேறுபாடுகள் உண்டு. இந்திய சினிமா உங்களுக்கு இலகுவில் கிடைக்கும் ஒரு பண்டமாக இருப்பதால் மட்டும் அது பேசும் விடயங்கள் அத்தனையும் அட்சரம் பிசகாமல் உங்கள் சமூகத்திலும் இருப்பதாக நம்புவது குழந்தை தனம்.
தேச வழமை சட்டம் என்றால் என்ன?
தேசம் + வழமை என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டாக உருவாக்கப்பட்ட இச்சொல்லின் பொருள் (தேசம்) நிலத்தின் (வழமை) மரபுகள். அதாவது வடபிராந்தியத்தில் உள்ள மரபுகள் அல்லது வழமைகளின் தொகுப்பாக அவர்களது சொத்துரிமை , திருமணம், வாரிசுரிமை போன்ற பலதரப்பட்ட விடயங்களை ஆளுகை செய்யும் இச்சட்டம் ” அயடயடியச inhயடிவையவெள” ஏன்று சொல்லப்படும் வடக்கில் வாழும் தமிழர்களை ஆளுகை செய்யும் ஒரு பிரத்தியேக சட்டமாகும். மேலை நாட்டவர்களின் வருகைக்கு முதலே இப் பிராந்தியத்தில் வாழ்ந்த மக்களிடையே இருந்த வழக்காறுகளை ஒல்லாந்தர்கள் தொகுத்து அதற்கு எழுத்துருவாக்கம் கொடுத்து சட்ட மூலம் ஆக்கினர். தேச வழமை தவிர்த்து கண்டிய சட்டமும்,முஸ்லீம் சட்டமும் கூட இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவுக்குள் மாத்திரம் பிரயோகம் செய்யப்படும் சட்டங்களாககும்.
தேசவழமை சட்டம் பல்வேறு விடயங்கள் பற்றி பேசினாலும் அண்மைக்கால பூச்சிய வெளி உரையாடல்களிலே தேச வழமை சட்டம் ஆணாதிக்கத்தின் ஒரு உச்சபட்ச வடிவமாக சித்தரிக்கப்படுவதோடு அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்ற சாயையிலான வாதங்களையும் காண முடிந்தது. குறிப்பாக இரண்டு காரணங்களினடிப்படையிலேயே இவ் வாதம் முன்வைக்கப்பட்டது. இவற்றுக்கான பதில்களை “பெண் விடுதலை” என்ற வட்டத்துக்கு வெளியிலான சிந்தனையோடு இந்த சட்டங்களை ஓரளவு அறிந்து வைத்திருக்கும் ஒரு சட்ட மாணவியாக நான் எப்படி பார்க்கிறேன் என்பதுதான் இப்பதிவு.
முதலாவது: தேசவழமை சட்டத்தினால் ஆளுகை செய்யப்படும் ஒரு பெண் தன் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முற்படும்போது கணவனின் அனுமதியை பெற வேண்டும் என்ற விதியை நிறைய பெண்ணிய வாதிகளும் செயற்பாட்டாளர்களும் எதிர்க்கிறார்கள். அதன் வழி தேசவழமை சட்டம் ஒழிக்கப் பட வேண்டும் என்று வாதிடுகிறார்கள்.
இரண்டாவது: தேசவழமை சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சீதனம் கொடுக்கும் முறையை காரணம் காட்டியும் அதனை இல்லாமல் செய்ய வேண்டும் என்று வாதிடுகிறார்கள்.
இதில் முதலாவது விடயத்தோடு நானும் உடன்படுகிறேன். ஒப்பீட்டளவில் தன் கணவனை விடவும் உலக அறிவும், ஆளுமையும், நிர்வாக திறனும் உள்ள ஒரு பெண் கூட தனக்கான சொத்தொன்றை விற்கவோ வாங்கவோ முனையும் போது கணவனின். சம்மதத்துக்காக காத்திருப்பதும் அதுவே கணவனுக்கு எந்த மட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதும் ஒரு வகையில் அநீதியும் அபத்தமும் கூட என்ற அடிப்படையில் நானும் அது சார்ந்த சரத்து திருத்தம் செய்யப்படுவதையோ அல்லது தேவையேற்படின் நீக்கப்படுவதையோ ஆதரிக்கிறேன்.
இரண்டாவது விடயமான சீதனம் பற்றி பேசும் போது அது சார்ந்த சட்ட ரீதியான பின்புலத்தை தெளிவு படுத்துவது பொருத்தமாக இருக்கும்.ஒல்லாந்தர் (1806) தொகுத்தளித்த பிறகு முறையே 1869, 1911, 1947 ம் ஆண்டுகளிலே தேசவழமை சட்டமானது திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டது. இந்த திருத்தங்களுக்கு உட்பட்டு தேச வழமை மூன்று விதமான சொத்துரிமையை பற்றி பேசுகிறது.
- சீதனம் 2. முதுசம் 3. தேடியத்தேட்டம்
சீதனம் என்பது ஒரு பெண் தனது தாயிடமிருந்து பெற்றுக்கொண்ட பரம்பரை சொத்துரிமையை தன் மகளுக்கு அவளது திருமணத்தின் போது பகிர்ந்து கொடுக்கும் முறைமை. இதன் படி தாய்வழி சொத்துரிமை நிலைநாட்டப்படுகிறது.
ஆரம்பகாலங்களில் (பாரம்பரிய) தேச வழமையின் வழக்காற்றுப்படி முதுசம் என்பது ஒரு தந்தை தன் பரம்பரை சொத்துரிமையை தன் மகனுக்கு பகிர்ந்து கொடுப்பது. ஆனால் யாழ்ப்பாண திருமண வாழ்க்கை உரிமைகள் மற்றும் மரபு வாரிசுரிமை சட்டத்தின் படி இன்று ஆண், பெண் இருபாலாரும் இச் சொத்துக்கு உரிமை உடையவர்கள்.
தேடியத்தேட்டம் என்பது திருமண ஒப்பந்தம் நிகழ்ந்த நாளிலிருந்து அது வலிதாக உள்ள நாள் வரை கணவன் மனைவி தேடிக்கொள்ளும் ஆதனங்களை குறிக்கும்.
இந்த அடிப்படையில் தான் தேச வழமை பேசும் சீதனம் தென்னிந்திய தமிழ் சினிமா பேசும் வரதட்சனையிலிருந்து மாறுபட்டு ஒரு பெண்ணை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகிறது.
சீதனம் என்பது கணவனுக்கு கொடுக்கப்படும் சொத்து கிடையாது என்பதும் அது மனைவிக்கே உரியது என்பதும் ஒரு வேளை விவாகம் இரத்து செய்யப்படும் இடத்தில் மனைவியின் சீதனச் சொத்தும் தேடிய தேட்டத்தில் ஐம்பது வீதமும் மனைவிக்கு வழங்கப்படுவதோடு மனைவி உயில் எழுதாமல் மரணமடையும் போது அவளது சொத்துக்கள் அவள் வழி உருவாக்கப்பட்ட பெண் பிள்ளைகளை சேரும் என்பது பாரம்பரிய தேச வழமை சட்டம். ஆயினும் இன்றைய நடைமுறையில் ஆண் பெண் இருபாலாரும் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
தவிர கணவன் உயில் எழுதாமல் இறக்க நேரும் போது மனைவியின் சீதனச்சொத்தும் தேடியத்தேட்டத்தில் அவளுக்கு சொந்தமான அரைப்பங்கும் கணவனுக்கு சொந்தமான அரைப்பங்கில் அராவாசியும் (1ஃ4) எல்லாமாக தேடிய தேட்டத்தில்75 வீதமும் சீதனம் முழுமையாகவும் மனைவிக்கே கிடைக்கிறது.
எனவே என்னளவில் சீதனம் என்பது ஒரு பெண்ணை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதற்காக, பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடை முறை. ஆனால் அது பலவந்தமாகவோ அல்லது இந்த அளவு கொடுக்கப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினடிப்படையில் வாங்கப்படும் போதோ தான் பிரச்சினைகள் உருவாகின்றன.
மிக முக்கியமாக இலங்கையில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் செல்லுபடியாக கூடிய திருமண உற வொன்றுக்கு வெளியே பிறந்த குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் பங்கு கோரும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆனால் தாயினுடைய சொத்தில் பங்குரிமை கோரலாம் என்ற அடிப்படையில் இன்றைக்கு பலராலும் ஆதரிக்கப்பட்டு வரும் டiஎiபெ வழபநவாநச என்ற திருமணம் செய்யாமல் கூடி வாழும் ஆண் பெண்ணால் பிறப்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கான குறைந்த பட்ச சொத்துரிமையை என்றாலும் நிலைநாட்டுவதற்கு இந்த சீதன முறைமை உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஆக திருத்தியமைக்க கூடிய அல்லது எங்களது அடிப்படை புரிதல்களாலேயே இலகுவாக மாற்றம் செய்யப்படக்கூடிய சில விடயங்களுக்காக ஒட்டு மொத்த தேச வழமை சட்டமும் இல்லாமல் செய்ய பட வேண்டும் என்று வாதம் செய்வது சிறு பிள்ளைத்தனம்.
குறிப்பாக அரசியல் பின்புலத்தில் நோக்கும் போது தொல்பொருள் திணைக்களத்தை வைத்து செய்ய எத்தனிக்கப்படும் நில அபகரிப்பை அரச இயந்திரம் நேரடியாக செய்ய முடியாத அளவுக்கு எங்கள் தாயக நிலங்களுக்கான ஒரு கவசமாக இருக்கக்கூடியதும் தேச வழமைச் சட்டமே என்ற தார்ப்பரியத்தையும் கொஞ்சம் கருத்தில் எடுத்துக் கொண்டு பொது வெளி உரையாடல்களில் ஈடு படுவோம்.
1,388 total views, 2 views today