நான் வில்லனாக இருந்த கணப்பொழுது
- மாதவி
ஒரு குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் ஒருவேலயை முடிப்பதும் அதேசமயம் எவ்வளவு வேலைகளை முடித்தோம் என்பதும் கடும் உழைப்பாளிக்கு அவசியமாகும்.
மேல் சொன்ன வரவிலக்கணத்திற்கு அமைய ஒருவன் செயல் பட முடியுமென்றால் அவனுக்கு வரவு அதிகம். அதிலும் கொஞ்சம் தந்திரம் அல்லது சுத்துமாத்து என்றும் சொல்லலாம். அதுவும் கூட இருந்தால் வரவு இரட்டிப் பாகும்.
இங்கிலாந்தில் பெமிங்காம் நகரில் ஒரு பெரும் நாற்சந்தி. அதில் உள்ள சிக்னல் லைட்டு சிவப்பு வந்தால் மீண்டும் பச்சை லைட்டு வர குறைந்தது 3 இல் இருந்து நான்கு நிமிடம் வரையாகும். இந்த 4 நிமிடத்தில் 4 பெண்கள் ஆலாய் பறந்து சிக்னலுக்கு தரித்து நிற்கும் வாகனங்களின் கண்ணாடியை நீரால் சுத்தம் செய்வார்கள்.
முன் கண்ணாடி ஊத்தையா அல்லது எமக்கு துப்பரவு செய்ய தேவை இல்லையா? என்பது பற்றி எல்லாம் கவலையில்லை. அவர்களுக்கு பச்சை எரிவதற்கு முன் தமது வேலை முடிஞ்சு நம்மிடம் காசும் வாங்கிடவேண்டும் அவ்வளவுதான். எனது நண்பர்கள் எவரும் காசு கொடுப்பதில்லை. அங்கே தெருவில் பிச்சை எடுக்காமல் தொழில் செய்கிறான் என்று கூட மதிப்பில்லை. நான் அப்படி அல்ல நல்லவன் அல்லவா!
தூரப் பயணங்களின் போது மனைவி எப்படியும் முன்னுக்கு காரில் ஏறுவாள். இரண்டு விடையங்களுக்காகவே இது
நடக்கும். ஒன்று கணவன் கார்ஓடும்போது அவர் நித்திரைவராது கதைகொடுத்துக் கொண்டு வர. மற்றது நித்திரை கொள்ள. இப்போ இரண்டாவது நடந்துள்ளது. அவள் நல்ல நித்திரை.
கார் சிக்னலில் நின்றுவிட்டது. ஒரு அழகான ஆனால் ஏழைப்பெண் ஒருத்தி ஓடிவந்து காறின் முன் கண்ணாடி யை துடைத்தாள்..முடித்தாள். கை நீட்டினாள். மனைவி நித்திரை. அவளுக்கு புரிந்துவிட்டது. இப்ப காசு கிடைக்கும். காசுமிசின்தான் நித்திரையே.
சிக்னலில் பச்சை வரும் முன் காசு வேண்ட கண்ணாடி துடைத்தவள். கையை நீட்டினாள். யன்னலைத் திறந்து ஒரு பவுண் கொடுத்தேன். எத்தனை தரம் அந்த இடத்தில் எனது நண்பர்களுடன் போனபோது அவர்களது கண்ணாடியை துடைத்து இருப்பாள். எவரும் ஒரு சதமும் கொடுத்ததில்லை. ஆனால் நான் நல்லவன் அல்லவா. கொடுத்துவிட்டேன்.
அவள் சட்டென மீண்டும் கையை நீட்டினாள். வியப்பாக அவளைப் பார்க்க. அவள் சொன்னாள் காசு நான் கொடுக்கும் போது என் காருக்கு உள்ளேயே வீழ்ந்து விட்டதாம். அவள் மீண்டும் இருப்பதை தாருங்கள் என்றாள், அவசரத்தில்.
நானும் மீண்டும் காசை எடுத்து கொடுத்தேன். இப்போ 2 பவுண். அவள் இடுப்பை குலுக்கியபடி நடந்தாள். இப்போ பச்சை எரிந்தது. நான் சிக்னலில் பச்சை என்கிறேன். மனதில் அல்ல. மனதுக்குள் நெருப்பாய் சிகப்பு எரிகிறது.
அவள் என்னை ஏமாற்றிவிட்டார். இளகின மனசு வச்சு செய்துவிட்டாள். இபபரியுது ஏன் என் நண்பர்கள் எவரும் காசு கொடுப்பதில்லை. வாகனத்தை ஓட்டியபடியே குனிந்து குனிந்து காலைப்பாக்கிறேன். வாகனம் குடிகாரன் வண்டிபோல அங்கும் இங்கும் ஓடுது.
என்னுடைய ஓட்டத்தில் மனைவி முழித்துவிட்டா. என்னப்பா களை என்றால் சைட்பண்ணி நிற்;பாட்டுங்க நான் ஓடுறேன் என்றா. நான் ஓடுகிறான் என்றேன். அவள் ஒரு சதத்திற்கும் நான் சொல்வழி கேட்கமாட்டேன் என்றாள். எனக்கு ஒரு பவுணுக்கும் என்றே கேட்டது. என்ன நடந்தது நான் நித்திரையில் இருக்க எங்கேயன் காரை முட்டிப்போட்டியளோ என்றாள், எனக்கு இருந்த விசரில். பொம்புளைகளை நம்ப முடியாது என்றேன்.
கார் 4 கியரில் இருந்து முதலாம் கியருகுக்கு போன மாதிரி இரைஞ்சாள். நான் நடந்ததை சொன்னேன். பக்கத்தில் நான் இருக்க இவ்வளவு நடந்தது என்றால், நான் பக்கத்தில் இல்லை என்றால் சொத்தையே எழுதிகொடுத்து இருப்பியள் என்றாள்.
வீடு வந்ததும் வடிவாக தேடினேன். காசு காருக்குள் வீழ்ந்து இல்லை. அவள் ஏமாற்றிவிட்டாள்! ஏமாற்றிவிட்டாள்!! என்று போன் எடுத்து உலக நாடேங்கும் சொல்லிப்போட்டேன். பச்சைக்கள்ளி. என்றுதான் திட்டினேன்.
மூன்று பவுணுக்காக வீட்டில் மூன்று நாள் கர்த்தால்.
மகள் தாய்க்கு போன்பண்ணுகுறா. பேரனை ஸ்கூல்ல போய் என்னை காரில் கூட்டிவரட்டாம். நான் ஸ்கூலுக்கு ஓடுறேன். பேரன் காறில் வந்து பின் சீட்டில் ஏறி பெல்ட் போடுகிறான்.
ஏய் ஏய். எனக்கு ஐஸ்கிரீம் வாங்க ஒரு பவுண் கண்டுட்டேன். சீட்டுக்கு கீழ் இருக்கும் ஒரு பவுண் எனக்குத்தான் தாத்தா என்றான்.
இப்ப நான் நல்லவனா! இல்லை பச்சைக்கள்ளனா!!
1,092 total views, 3 views today