ஆதாரங்களை சேகரிக்கும் செயலகம் அமைக்கப்படுமா?

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் ஜெனிவாவில் தெரிவித்திருப்பதைப் போல சாட்சியங்களைச் சேகரிப்பதற்கான செயலகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்குமா? என்ற கேள்விதான் ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பமானபோதே எழுப்பப்பட்டது. உள்நாட்டுப் பொறிமுறையின் மூலமாகவே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நியூயோர்க்கில் ஐ.நா. செயலாளர் நாயகத்துடனான பேச்சுக்களின் போது திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதேகருத்தைத்தான் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ{ம் ஜெனிவா கூட்டத் தொடருக்கு கானொலி மூலமாக நிகழ்த்திய உரையில் சொன்னார்.

ஆக, இலங்கையின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களையும், சாட்சியங்களையும் சேகரிப்பதற்கான செயலகத்தை மனித உரிமைகள் பேரவையால் அமைக்க முடியுமா என்ற கேள்விதான் ஜெனிவா கூட்டத் தொடர் இம்முறை எழுப்பியிருக்கும் பிரதான கேள்வியாகும்.

சுமார் 15 பணியாளர்களுடன் செயற்படவுள்ள இந்தப் பணியகத்துக்குத் தேவையான நிதியில் கணிசமான தொகை ஏற்கனவே கிடைத்துவிட்டது. அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகியன அதனைக் கொடுத்திருக்கின்றன. மேலதிகமாகத் தேவையாகவுள்ள நிதியை உறுப்பு நாடுகள் வழங்க வேண்டும் என ஆணையாளர் தனது உரையில் அழைப்பு விடுத்திருக்கின்றார். இவ்வருட இறுதிக்குள் இந்த செயலகம் அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.

இந்த செயலகத்திலுள்ள ஆவணங்களைப் போர்க் குற்ற விசாரணைகளுக்குப் பயன்படுத்துவதானால் அது சர்வதேச விசாரணையாக இருந்தால் மட்டுமே நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், அரசாங்கம் அதற்குத் தயாராகவில்லை. உள்நாட்டு விசாரணை ஒன்று நியாயமானதாக நடைபெறும் எனவும், அதனால் சர்வதேச விசாரணை தேவையில்லை எனவும் அரசாங்கம் சொல்கின்றது. இதற்கு சர்வதேசம் செவிசாய்த்தால், அவர்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் இலங்கை அரசின் கைகளுக்குப் போய்ச் சென்றுவிடும் அபாயம் உள்ளது.

தமிழ்த் தரப்பினர் போட்டி போட்டுக்கொண்டு பல கடிதங்களை அனுப்பிவைத்த போதிலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆணையாளர் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கை கடுமையானதாக இருக்கவில்லை. சில விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவரது அறிக்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. பதிலாக, “ஐ.நா.வுடன் இணைந்து செயற்படத் தயார்” என்ற வகையில் ஜூன் மாதத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து ஒன்றை சுட்டிக்காட்டிய ஆணையாளர், அதனை வரவேற்றிருக்கிறார். அதனை செயலில் காட்டுமாறும் கேட்டிருக்கிறார். இது ஒருவகையில், இலங்கை அரசுக்கு கால அவகாசத்தைக் கொடுப்பது போல அமைந்திருக்கின்றது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பேரவையின் 48 ஆவது அமர்வைப் பொறுத்தவரையில், ஆரம்ப நாளான செப்ரெம்பர் 13 ஆம் திகதி வெளியான ஆணையாளரின் அறிக்கைகையும், அதற்கு அடுத்த நாள் இடம்பெற்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் அறிக்கையும், பிரதான நாடுகள் வெளியிட்ட கருத்துக்களும்தான் எமக்கான செய்திகள். இதனைவிட, இந்தத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை குறித்த தீர்மனங்கள் எதுவும் இல்லை. கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான பிரதிநிதிகள் மெய்நிகர் மூலமாகவே கலந்துகொள்கின்றார்கள். அதனால், பக்க நிகழ்வுகளும் இல்லை. அடுத்த வருட அமர்வுகள்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் முக்கியமானதாக இருக்கும்.

அடுத்த வருடத்துக்கான நகர்வுகள் எவ்வாறு அமையும் என்பதற்கான சில சமிஞ்ஞைகளை தற்போதைய அமர்வு வெளிப்படுத்தும் என்பதால்தான் இம்முறை அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.இலங்கை குறித்து ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அநுசரணையிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக இலங்கை கடந்த வருடம் அறிவித்திருந்தது. “நல்லாட்சி” அரசாங்கத்தின் காலத்தில் வழங்கப்பட்ட அந்த இணை அநுசரணையைத் தொடர்வது என்பது தற்போதைய கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கு கடினமானதகவே இருந்திருக்கும் என்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான்.

ஏனெனில், முழுமையாக பௌத்த – சிங்கள தீவிரவாத பாதையில் செல்லும் அரசுக்கு அது கடினமானதுதான். பொது ஜன முன்னணியின் முகத்தையே அது மாற்றிவிடும். பொதுஜன பெரமுனவின் கோட்பாடுகளை வடிவமைத்துக்கொடுப்பவர்களாக இருக்கும் “வியத்மக” அமைப்பினர்தான் கடந்த சில வருடங்களாக ஜெனிவாவில் பிரசன்னமாகி குழப்பங்களை ஏற்படுத்தியவர்கள். அவர்களுடைய அழுத்தம் காரணமாகவே ஜெனிவா தீர்மானததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கடந்த வருடம் அறிவித்தது. அதேவேளையில், சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் அடையாளமாகவுள்ள தினேஷ் குணவர்த்தன வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டர்.

ஆனால், சர்வதேச ரீதியாக அதிகரித்த அழுத்தங்களும், பொருளாதார ரீதியாக உருவாகியிருக்கும் கடுமையான நெருக்கடியும் ‘வியத்மக’வின் நிகழ்ச்சி நிரலிலிருந்து விலகிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை கோட்டாபய அரசுக்கு ஏற்படுத்தியது. ஜூனில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து அதன் பிரதிபலிப்புத்தான். அதேபோல, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டார். மேற்கு நாடுகளைக் கையாளக் கூடிய ஒருவராகவே பீரிஸ் கருதப்படுகின்றார். விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய காலத்திலிருந்து இராஜதந்திர ரீதியான அனுபவத்தைக் கொண்டவராக பீரிஸ் இருக்கின்றார். ஜெனிவாவில் உருவாகக்கூடிய அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு அவர்தான் பொருத்தமானவர் என ராஜபக்‌ஷ அரசாங்கம் அடையாளம் கண்டிருக்கின்றது.

மார்ச் மாத அமர்வில் ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒரேயடியாகத் தூக்கி எறிந்த கோட்டாபய அரசு, இப்போது தமது போக்கை மாற்றியுள்ளது. உள்நாட்டுப் பொறிமுறை மூலம் பொறுப்புக் கூறத் தயாராக இருக்கின்றோம் என்ற வகையில் வெளிவிவகார அமைச்சினால் அனுப்பப்பட்ட கடிதமும், ஜனாதிபதி ஜூன் மாதத்தில் வெளியிட்ட அறிவிப்பும் இதனைத்தான் பிரதிபலிக்கீன்றது. என்னென்ன விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தி அமைச்சர் பீரிஸ் நிகழ்திய ஜெனிவாவிலிருந்து முழுமையாக வெளியேற முடியாத நிலையில் இலங்கை இருப்பதை உணர்த்துகின்றது.

ஆணையாளரின் அறிக்கையைப் பார்க்கின்ற போது, இறுதிப் போருக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என ஆரம்பமான ஜெனிவா பொறிமுறை இப்போது அதிகளவுக்குத் தென்பகுதி விவகாரங்களைப் பேசத் தொடங்கியிருப்பதைக் காட்டுகின்றது. குறிப்பாக பொருளாதார அவசரகால நிலைப் பிரகடனம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவதல், கைது செய்யப்பட்ட முஸ்லிம் கவிஞரின் விடுதலை என பல விடயங்களையும் பேசுகின்றது. ஆனால், தமிழ்க் கட்சிகளால் அனுப்பப்பட்ட கடிதங்களில் சொல்லப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை, காணிப் பறிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பன ஆணையாளரின் அறிக்கையில் காணமல் போயுள்ளது.

தமிழ்த் தரப்பினருக்கு இது கடுமையான ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கின்றது. தமிழர் தரப்பிலிருந்து இம்முறை 80 வரையிலான கடிதங்கள் ஆணையாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன. இதில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களால் அனுப்பப்பட்டவை. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்குப் பொறுப்புக் கூறப்படுதல், அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர்களுடைய பாரம்பரிய பிரதேசங்கள் அபகரிக்கப்படுதல் ஆகிய மூன்று விடயங்களும்தான் முக்கியமாக இடம்பெற்றிருந்தன. இருந்த போதிலும், ஆணையாளரின் கவனத்தை இந்த விடயங்கள் பெற்றுக்கொள்ளாமைக்கு காரணம் என்ன?

ஜெனிவா என்பது அரசுகளின் அரங்கமாக இருப்பதால் அதன் சார்பில் முன்வைக்கப்படும் அறிக்கைகள் அதிகளவுக்கு ஆணையாளர் அலுவலகத்தின் கவனத்தைப் பெற்றுக்கொள்கின்றது. அதனைவிட, பல சிங்கள அமைப்புக்களும் தமது அறிக்கைகளை அனுப்பிவைக்கின்றன. அதேவேளையில் முஸ்லிம் அமைப்புக்கள், மனித உரிமை நிறுவனங்கள் அனுப்பிவைக்கும் அறிக்கைகளும் கவனத்தைப் பெற்றுள்ளன. இவ்வாறு அனுப்பப்படும் அறிக்கைகளுக்கு மேலாக, ஆணையாளர் அலுவலகம் சொந்தமாகச் சேகரிக்கும் தகவல்களும்தான் ஆணையாளர் தயாரிக்கும் அறிக்கைக்கான உள்ளீட்டமாக உள்ளன.

பல விடயங்களில் ஆணையாளர் தமது கவலையைப் பதிவு செய்திருக்கின்றார். ஆனால், வெறுமனே கவலையைப் பதிவு செய்வது மட்டும் பிரச்சினைக்கான தீர்வாகிவிடாது. அதேவேளையில், ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கும், வெளிவிவகார அமைச்சினால் கொடுக்கப்பட்ட அறிக்கையையும் அவர் சாதகமான ஒன்றாகவே பார்க்கின்றார். அதனை செயலில் காட்டுங்கள் எனவும் கூறியிருக்கின்றார். இது அரசாங்கத்தின் காலம் கடத்தும் உத்திக்கு கிடைத்த ஒரு பரிசாக இருக்கலாம். அடுத்த வருடமும் அதே போக்கு தொடரலாம்.

1,145 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *