பனம்பழஞ் சூப்பி


யூட். பிரகாஷ்- (அவுஸ்ரேலியா)

யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி செந்தூரன் தபாலில் அனுப்பிய பொதி நேற்று பத்திரமாக மெல்பேர்ண் வந்தடைந்தது.

மறந்தும் மறவாத மண்ணின் வாசனையை தாங்கிவந்த அந்தப் பொதிக்குள், பருத்தித்துறை வடை, வல்வெட்டித்துறை வடகம், பருத்தித்துறை பப்படம், வல்வெட்டித்துறை எள்ளுப்பா, கன்னாதிட்டி மோர் மிளகாய், பனங் குட்டான் இவற்றோடு கற்பகம் நிறுவனம் தயாரிக்கும் பனம் சொக்கலேட்டும் (Pயடஅ ஊhழஉழடயவந) இருந்தது. அடுத்த முறை பினாட்டும் புளுக்கொடியலும் அனுப்பச் சொல்லோணும்.

கிட்டத்தட்ட அந்தக் கால புளூட்டோ டொபியை ஞாபகப்படுத்திய பனம் சொக்கலேட்டை வாயில் போட்டு கடிக்கும் போது, ஏனோ சிறுவயதில் சூப்பிய சுட்ட பனம்பழத்தின் ஞாபகம் வந்து தொலைத்தது.
ஒவ்வொரு முறை யாழ்ப்பாணம் போகும் போதும், தவறவிடும் இரண்டு விடயங்களில் ஒன்று இந்த பனம் பழம் சூப்புவது, மற்றது பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் அப்பம் சாப்பிடுவதும் தான்.

யாழ்ப்பாணத்தில் பனம் பழஞ் சூப்பிய நாட்களை மீண்டும் இரை மீட்ட, இன்று மத்தியானம், யாழ்ப்பாணத்தில் இருக்கும் நண்பன் டாக்குத்தர் கோபிஷங்கருக்கு அழைப்பெடுத்தேன். “மச்சான்.. பிஸியா இருக்குறியா?” “ஓமடா.. இன்றைக்கு வாநயவசந நாள்.. ஒரு ஒபரஷேனை முடிச்சிட்டு.. அடுத்ததுக்கு றயவை பண்ணுறன்.. சொல்லு” “உனக்கு முந்தி பனம் பழம் சூப்பின ஞாபகம் இருக்கா?”

பேந்தென்ன…..
யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களிற்கான ஓய்வறையில் இருந்து கொண்டு, அடுத்த அறுவை சிகிச்சைக்கு ஓட முதல், டாக்குத்தர் கோபி பனம்பழக் கதை சொல்லத் தொடங்க, அந்தக் காலத்தில் பனம் பழம் சூப்பிய நாட்கள் மனத்திரையில் மீண்டும் விரியத் தொடங்கியது.

“மரத்தால விழுந்த பனம் பழத்தை காலம்பறயே போய் பொறுக்கிடோணும், இல்லாட்டி பழத்துக்குள் கொசு, வண்டு பூந்திடும். பனம் பழங்களால தான் ஊரில கொசு சீஸன் களைகட்டுறது.

ராத்திரியே பனம் பழம் விழும் சத்தம் “பொதக்…பொதக்” என்று கேட்கும். அப்பவே எத்தனை பழங்கள் பனம் பத்தைக்குள் விழுந்திருக்கு என்று ஓரளவு கணக்கு போட்டிடலாம்.
நல்ல காத்துக்கு பனங்கீற்று உராசும் சத்தம் பயங்கரமாத் தான் கேட்கும். தென்னங் கீற்று மாதிரி பனங்கீற்றில் தென்றல் வந்து மோதாது.

“தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும்.. என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்” என்று பாட்டு எழுதேக்க பனங்கீற்றை விட்டிட்டு தென்னங்கீற்று என்று எழுதினது அதால தான்.

பன மரத்தால விழும் போதே பனம் பழத்தை சுத்தியிருக்கிற அந்த கறுப்பு நார் பழத்தில் இருந்து வெடித்து சாதுவா கழறத் தொடங்கிடும். நார் வெடித்து சிதறிய பனம் பழத்தை அப்படியே கொண்டு போய், தணலில சுடப் போடோணும். தணலில சுட்டுச் சாப்பிடுறது யாழ்ப்பாண சமையலின் ஒரு தனித்துவமான முறைமை, அதை சுட்டுச் சாப்பிடுறது என்று சொல்லுறவ.

சுட்டுச் சாப்பிடுறதுக்கும் ஒரு முறை இருக்கு, கண்டபாட்டுக்கு கண்டதையும் சுடுறேல்ல. இராசவள்ளிக் கிழங்கை தணலுக்க உள்ளே போட்டுச் சுடுறது.
பனம் பழத்தை அப்படி சுடுறேல்ல. பனம் பழத்தை தணலுக்கு மேல போட்டு சுடோணும். ஒவ்வொரு பக்கமாக உருட்டி பிரட்டி தணலுக்கு மேல வைத்து தான் பனம் பழத்தைச் சுடுறது.

பனம் பழம் பின்னேர சூரியனின் நிறத்திற்கு வரும் வரை தணலில் சுடோணும். பனம் பழம் தங்கம் மாதிரி தகதகக்காது. கருக்கலில் மறையும் சூரியனின் நிறத்திற்கு வந்திட்டுது என்றால் சிங்கன் பதத்திற்கு வந்திட்டார் என்று அர்த்தம். பனம் பழத்தை தணலுக்கால எடுத்து, உச்சியில ஓங்கி ஒரு குத்து குத்தினா, சுத்தவர சூடா இருக்கிற நார், நைஸா கழறத் தொடங்குவார்.

நாரை கையால இழுத்தும் பல்லால பிய்த்தும் பிடுங்கி எடுத்தால், சுடச் சுட பனம் பழம் இரண்டு கைகளிலும் தவழும். சுட்ட பனம் பழத்தை ஒரு கையால பிடிக்க ஏலாது. அதை சூப்பச் சூப்ப நார் நாரா வரும். அதோட முகம் கை எண்டு எல்லா இடமும் பனம்பழச் சாறு பிரட்டிச் சாப்பிடுறது உண்மையான சம்பிரதாயம்.

பனங்கொட்டையைச் சுற்றி இருக்கிற பனஞ்சாறை அப்படியே சூப்பி உறிஞ்சத் தொடங்க, கையால பனஞ்சாறு வடியும். மாங்காய் சாறு மாதிரி கையெல்லாம் வழிஞ்சோடாமல், பனம் பழச்சாறு கைக்குள்ளேயே தேங்கி, சின்னி விரலால வடிஞ்சு முழங்கை வரை வடியும்.

முழங்கை வரை வடிஞ்ச பனஞ்சாறை நாக்கால அப்படியே வழித்துக் கொண்டு வந்து, திரும்ப பனம் பழத்தை அடைவதில் தான் பனம்பழஞ் சூப்பும் அனுபவம் முழுமையடையும். பனம் பழம் சூப்பின கையின்டை மணம் மூன்று நாலு நாளைக்கு நிக்கும் எண்டும் சொல்லிறவை. பனம் பழத்தை எந்த மனுசராலும் முழுசாக உறிஞ்சி சாப்பிட ஏலாது. பனம் பழத்தை முழுசா உறிஞ்சி சாப்பிட மாடுகளால் மட்டுமே ஏலும்.
அதால தான் “மாடு சூப்பிய பனம்பழம்” என்ற சொல்லாடல் வழக்கில் வந்தது.”

என்று கமுக்கமாக, ஆனால் நிறைவாக, கற்பனையில் மீண்டும் என்னை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு போய், பனம் பழஞ் சூப்ப வைத்து விட்டு, டாக்குத்தர் அடுத்த அறுவை சிகிச்சைக்கு பறந்தோடினார்.
படங்கள்.ஜோ.சாந்தி.

981 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *