எனது நாடக அனுபவப் பகிர்வு ‘கோடை’ நாடகம் -1979


ஆனந்தராணி பாலேந்திரா

1975ஆம் ஆண்டு பாலேந்திரா தயாரித்த நவீன நாடகமான ‘பிச்சை வேண்டாம்’, பின்னர் 76ல் பாலேந்திரா நெறியாள்கை செய்த ;மழை’, 77இல் ‘நட்சத்திரவாசி’, 78இல் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் என நான் நடித்துக் கொண்டிருந்த வேளையில்தான்; நாடக அரங்கக் கல்லூரி 1978இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு தனது பயிற்சிப் பட்டறைகளை நடத்த ஆரம்பித்தது. பிரபல நாடக எழுத்தாளரும் நடிகருமான குழந்தை ம. சண்முகலிங்கம் மாஸ்டரின் முன்னெடுப்பில் நாடக அரங்கக் கல்லூரி இயங்க ஆரம்பித்தது. யாழ். நாடக அரங்கக் கல்லூரியின் தூணாக இயங்கியவர் அவர்.
பயிற்சிப் பட்டறைகள் ஆரம்பித்த சில மாதங்களில்;; குழந்தை சண்முகலிங்கம் மாஸ்டரும்; நாடகர் அ. தாசீசியஸ் அவர்களும் நான் வசித்த கொக்குவில் வீட்டிற்கு வந்தார்கள். தாசீசியஸ் அவர்கள் 1975ஆம் ஆண்டு நான் நடித்த “பிச்சை வேண்டாம்” நாடகம் மூலம் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அந்நாடகத்தை பாலேந்திரா கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்திற்காகத் தயாரிக்க, தாசீசியஸ் அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார். சண்முகலிங்கம் மாஸ்டரை அன்றுதான் முதன்முதலாக சந்தித்தேன்.

இருவரும் என்னிடம் நாடக அரங்கக் கல்லூரி பற்றிக்கூறி அங்கு நாடகப் பயிற்சி மட்டுமல்லாது நாட்டுக்கூத்து போன்றவற்றிலும் பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருப்பதாவும்; என்னை பரதநாட்டியம் பயிற்றுனராக வரமுடியுமா என்றும் கேட்டார்கள்.
நான் சிறுவயதில் இருந்தே பரதநாட்டியம் முறைப்படி பயின்று 1973ஆம் ஆண்டு அரங்கேற்றமும் செய்திருந்தேன். அத்தோடு எனது நடன ஆசிரியை கார்த்திகா கணேசர் அவர்கள் தயாரித்த ‘இராமாயணம்’, எல்லாளன் – துட்டகாமினி’, ‘கிரு~;ண லீலா’ போன்ற பல நாட்டிய நாடகங்களிலும் பங்குபற்றியிருந்தேன்.

;இருவரும் கேட்டபோது நான் ஒத்துக்கொண்டு நாடக அரங்கக் கல்லூரியில் பரதநாட்டிய அடவுகளைப் பயிற்றுவிக்க ஆரம்பித்தேன். அப்போது இந்தப் பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாட்களில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தின்னவேலியில் அமைந்திருந்த இந்து இளைஞர் மன்றக் கட்டடத்தில் நடைபெற்று வந்தன. பிரபல நாட்டுக்கூத்துக்கலைஞர் பூந்தான் யோசேப் அவர்கள் அங்கே நாட்டுக்கூத்துப் பயிற்சி கொடுத்தார். நாடகர் தாசீசியஸ் அவர்கள் நாடகப் பயிற்சியை வழங்கினார். நான் பரதநாட்டிய அடவுகள், முகபாவம் போன்றவற்றைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். ஆண்கள் மட்டுமே அப்போது பயிற்சிகளில் பங்குபற்றினார்கள்.

இவ்வேளையில் சண்முகலிங்கம் மாஸ்டர் என்னிடம் நீங்கள் பயிற்றுவிப்பாளராக இருப்பதோடு பயிலுனராகவும் வந்தால் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்தும் வெளியில் இருந்தும் சில பெண்களை நாங்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் இணையுமாறு கேட்கலாம். நீங்கள் ஏற்கனவே பல நாடகங்களில் நடித்த முன் அனுபவம் உள்ளவர் என்பதால் அவர்களை இணைத்துக் கொள்வது இலகுவாக இருக்கும் என்று கூறினார். அவர் கேட்டதற்கிணங்க அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கோடு நானும் சரி என்று சம்மதித்தேன். நான் கொழும்பில் வசித்த காலத்தில் பிரிட்டி~; கவுன்சில், அமெரிக்கன் சென்ரர் போன்றவை நடத்திய நாடகப் பயிற்சிப் பட்டறைகள் சிலவற்றுக்கு பாலேந்திராவுடன் போயிருக்கிறேன். இவை தமிழ், சிங்களக் கலைஞர்களை உள்ளடக்கிய ஆங்கிலமொழியில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறைகள்.

யாழ். நாடக அரங்கக் கல்லூரியில் பெண்கள் கலந்துகொண்ட முதல் பயிற்சியின்போது சுமார் 10 பெண்கள் வரை வந்;தார்கள். நாடகப் பயிற்சிப் பட்டறை நடந்த கட்டடத்தில் நிறைய ஜன்னல்கள் இருந்தன. நாங்கள் பெண்கள் குனிந்து தரையில் படுத்து எழும்பி பலவிதமான ஒலிகளை எழுப்பிப் பயிற்சிகளைச் செய்துவிட்டு நிமிர்ந்தபோது ஜன்னல்கள் முழுக்க ஒரே தலைகள். சந்தைக்கு வந்தவர்கள் ஜன்னல்கள் வழியாக எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் ஆண்கள்தான். சில பெண்களும் இருந்தார்கள்.

அவர்களுக்கு நாங்கள் இப்படிப் பயிற்சி செய்வது விநோதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஆண்களுடன் சேர்ந்து பயிற்சி செய்துகொண்டிருப்பது கேலியான ஒரு விடயமாகப் பட்டிருக்க வேண்டும். எங்கள் காதுபட “இஞ்சை பாருங்கோ! உந்தப் பொம்பிளைப் பிள்ளையள் ஆம்பிளையள் மாதிரி காற்சட்டையும் போட்டுக் கொண்டு விழுந்தெழும்பிக் கூத்தடிக்குதுகள்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

அடுத்த வாரம் மூன்று நான்கு பெண்கள் வரவில்லை. நின்றுவிட்டார்கள். பயிற்சி தொடர்ந்தது. ஜன்னல்களில் தலைகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போனது. கிண்டல் பேச்சுகளும் அதிகரித்தன. ஒவ்வொரு வாரமும் பெண் பயிற்சியாளர்கள் தொகை குறைந்தது. இறுதியில் எல்லாப் பெண்களுமே நின்றுவிட்டார்கள் என்னைத் தவிர. யன்னல்களில் வந்து நின்று பார்த்தது மட்டுமல்ல சிலர் இந்த இளம் பெண்களின் குடும்பத்தவர்களுக்கும் இது பற்றி முறைப்பாடு சொல்லியிருக்கிறார்கள். சமூகத்தின் கேலிப்பேச்சுக்கு அஞ்சி அவர்கள் தமது மகள்மாரை நிறுத்திவிட்டார்கள்.

1,240 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *