பாரதி நூறு கூத்தர் நூறு

- பேராசிரியர் சி . மௌனகுரு -இலங்கை
புதுப்புது எண்ணம் வேண்டும் வாழ்க்கையில் புதுமை வேண்டும் என்று பாடியவன் பாரதி. பாரதி “புதுமைக்கவிஞன்” என்ற சொற்றொடர் இன்று பலரது நாவிலும் பழகுதமிழ்ச் சொற்றொடராகிவிட்டது. ஆனால் பாரதி பழமை பற்றியும் மரபு பற்றியும் சரியான கருத்துக்களைக் கொண்டிருந்தான்.என்பதும், தன் எழுத்துக்களில் அவற்றினை நடைமுறைபடுத்தினான் என்பதும் இது வரை அதிகமாக அழுத்தப்படாத கருத்து.
மரபு வழி இலக்கியப் பா வகைகளான அகவல், விருத்தம் வெண்பா,கலித்துறை,போன்ற வடிவங்களுடன் சிந்து கண்ணி தெம்மாங்கு கீர்த்தனை,திருப்பள்ளி எழுச்சி நான்மணிமாலை முதலாம் பா வடிவங்களையும் இசை வடிவங்களையும் பாரதி கையாண்டான். மரபு போற்றும் பண்பு ஒரு புறமும் மரபு மாறுகிறது காலத்திற்கு ஏற்ப அதனை மாற்ற வேண்டும் என்ற கருத்து இன்னொருபுறமுமாக பாரதியின் எழுத்துக்களில் காட்சி தருகின்றன.
பழமையில் மாத்திரம் இராமல் புதுமையும் தேவை என்பதை உறைக்கச்சொன்னான். பழமை மரபு என்று அவற்றையே கட்டிகொண்டிருப்பவரால் பயனில்லை என்று கண்டே அவன்
பழமை பழமை என்று பாவனை பேசலன்றி
பழமை இருந்த நிலை—கிளியே
பாமரர் அறியாரடி என்று பாடினார்.
இவ்வண்ணம் பழமையிற் பற்றும் பழமை பற்றிய விமர்சனப் பார்வையும் பழமை மாறும் என்ற இயங்கியல் நோக்கும் கொண்டிருந்தமையினாலேதான் பழைய இலக்கிய வடிவங்களைக் கையாண்டு புதிய பொருளை மக்களுக்கு அவனால் வழங்க முடிந்தது. இன்று பாரம்பரியத்துக்குள்ளும் பழமைக்குள்ளும் சுழன்றுகொண்டிருக்கும் பெரும்பாலான பரத நர்த்தகிகள் மத்தியில் பழமையினடியாகப் புதியன புனைந்துள்ள திவ்யா நமது கணிப்பிற்குரியவர் ஆகிறார். மிக அதிகமான பரத நாட்டிய சங்கீத கச்சேரிகளைக் காண்கிறோம் கேட்கின்றோம் அனைத்தும் முன்னோர் மொழி பொருளைப் பொன்னேபோல் போற்றும் தன்மையன. எந்தப் புதுமையுமின்றி சில வேளைகளில் நம்மை அலுப்படைய வைப்பன அங்கு போலச்செய்தலே அதிகம். போலச் செய்தல் என்பது பிரதி பண்ணல் ஆகும் பிரதிபண்ணல் கலை அன்று. புதியன புனைதல் அதாவது சிருஸ்டிப்பதே கலை ஆகும் . புதியன புனைவோரே கலைஞர்.
திவ்யா முதன் முதலாக பரத மார்க்கத்தில் ஓர் புதுமை புகுத்துகிறார் அண்மைக்காலமாக இணைய வழியை நன்கு பயன் படுத்தி உலகம் வாழ் பரதநடன ஆர்வலரை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அவரது இன்றைய செய்றபாடுகளை அவதானிக்கிறேன். பெருவியப்பே ஏற்படுகிறது. அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் இனிமையாகவும் பேசும் அவரது இயல்பும், அவரது அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளும் அவரது பரத நடன நட்டுவாங்க இசைத் திறனும் அவருக்கு பரந்த ஓர் பார்வையாளர் கூட்டத்தைத் தந்துள்ளன. இதன் அடுத்த வீச்சாக கொழும்பு அபிநயக்ஷேத்ரா ஸ்தாபகரும் சிறந்த நாட்டிய விற்பன்னருமான திவ்யா சுஜேன் அவர்கள் பாரதியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஓர் நிகழ்வு அளிக்கிறார்.
பாரதி பக்தரான, அல்ல அல்ல பாரதி வெறியரான திவ்யா, இந்த நிகழ்வில் புதிய ஆத்திச்சூடி அலரிப்பினை ஆற்றுகைப்படுத்த 100 ஆடல் கலைஞர்களை ஈடுபடுத்தியதாகவும், பயிற்சியளித்ததாகவும் அறிகிறேன். மிக பெரு முயற்சி
நட்டுவாங்கம் செய்வோர் ஜதிகளை உச்சரிக்க நர்த்தகி அலாரிப்பு செய்வதே நாம் அறிந்த பரத சம்பிரதாய மாகும். சொற்களுக்கு அங்கு இடம் இல்லை. ஆனால் இங்கு திவ்யா சொற்களை ஜதிகளாச் சொல்கிறார் அதிலும் பாரதியின் புதிய ஆத்தி சூடியில் வரும் சொற்றொடர்கள். இது பரத மார்க்கத்தில் முதன் முறையாகத் திவ்யாவால் செய்யப்பட்ட ஒரு புதுமை எனவே நினக்கிறேன்.
அலாரிப்பிற்காக திவ்யா தெரிவு செய்த பாரதியாரின் புதிய ஆத்திசூடிச் சொற்றொடர்கள் திவ்யாவின் பாரதி ஈடுபாட்டை மாத்திரமன்றி அவரது கருத்தியலையும் உலகப் பார்வையையும் முற் போக்கு சிந்தனைகளையும் எமக்குணர்த்தியது. இது ஓர் அருமையான கற்பனைச் சிருஸ்டியாகும், நடன ஆசிரியரின் கற்பனை வளத்தை இலக்கியப் புலைமையை பரத நடன பாண்டித்தியத்தை, வாசிப்பை தேடலை காணுகின்றோம். இம்மரபு வடமோடிக்கூத்தில் உண்டு என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் ! அதனை விடத் துணிகரமான முயற்சி இந்நிகழ்வுக்கு அவர் பாரதி நூறு கூத்தர் நூறு எனபெயரிட்டுள்ளமை. பாரதி, ஆட்டம் மீது மிகுந்த ஈர்ப்புடையவர். அவரது காளி ஆடும் ஊழிக்கூத்து நம்மை மிகவும் பாதிக்கும் ஓர் கவிதை. அன்னை அன்னை ஆடும் கூத்து எனக் கூறிக்கூறி அகமகிழ்ந்து போகிறார். பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே பரத நாட்டியக் கூத்திடுவீரே என பரத நாட்டியக் கூத்து என ஓர் புது சொற்றொடரையே உருவாக்கி விடுகிறார்.
இதனைவிட இன்னோரு சிறப்பான செய்தி கூத்தர் என்ற இந்த வார்த்தையை நாவலித்து வரவேற்று அதற்குக் கூத்தர் நூறு என்றே பெயரிடுங்கள் எனக் கூறியுள்ளனர் பாரதியின் கொள்ளுபேரனான நிறைஞ்சன் பாரதி
கூத்தில் ஈடுபாடுகொண்டு அதனை அறிய முனையும் நர்தகிகளில் திவ்யா சுஜேனும் ஒருவர். அவர் தான் நடத்தும்,உரைத்தொடரில் என்னைப்பேச அழைத்ததுடன் கூத்து ஜதிகளை அறிமுகம் செய்து வைக்கவும் உதவினார். நான் நடத்திய கூத்து பற்றிய உரைத் தொடரில் அவர் கலந்து கொண்டு கூத்தின் ஜதிகளைத் தனக்கேயுரிய முறையில் மிக அழகாகச் சொல்லியும் காட்டினார். ஆற்றுகைகலைஞர்களுக்கு ஆற்றுகைத் திறன் இருப்பது அவசியம் பலரிடம் அது உண்டு ,ஆனால் தாம் செய்யும் கலைபற்றிய ஞானம் உள்ளவரே பெரும் பாய்சல்களைப் பாய முடியும். பல்துறை அறிவு ஞானத்தை இன்னும் ஆழமாக்கும். திருவளர் வாழ்க்கை கீர்த்தி தீரம் நல்லறிவு வீரம் மருவு பல்கலையின் சோதி வல்லமை என்பன எல்லாம் வருவது ஞானத்தாலே எனப்பாரதியே கூறியுள்ளான். திவ்வியாவின் ஞானத்தையும் அவர் பரத மார்க்கத்தில் ஓர் பாய்ச்சல் பாய்ந்துள்ளார் என்பதையும் அறிகிறோம்.
புதுமையைத் தமிழுக்குக் அறிமுகம் செய்த புதுமைக்கவிஞன் பாரதியின் புதிய ஆத்திசூடி பாடல்களையும் தமிழரின் ஆடல்மரபான கூத்தையும் தனக்கு துணையாக் கொண்டு இதனை செய்தாரோ என எண்ணத் தோன்றுகிறது அவர் துணையாகக் கொண்ட பாரதி வலிமையானவன் கூத்து மரபும் வலிமையானது. இரு பெரும் வலிமைகளின் துணையுடன் மரபு மாறாது புதுமை புரிகிறார் திவ்யா.
பாரதி நினைவுநாளில் அதுவும் நூற்றாண்டு நாளில் அவர் கனவுகண்ட பரத நாட்டியக் கூத்து நடைபெறுவதும் பரத நர்த்தகிகள் தம்மை கூத்தர் என அழைப்பதும், தமிழ்ச் சமூகம் தன் அடையாளம் பற்றிசிந்திக்கத் தொடங்குகிறது எனப் பொருள் கொண்டு மகிழ்வோம்.
1,596 total views, 4 views today