“பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்”
கலாசூரி திவ்யா சுஜேன்.இலங்கை
அமர வாழ்வு எய்துவோம்
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பாடிய பாரதி, காடும் மழையும் கூட எங்கள் கூட்டம் என்று சொல்லி உயிர் இல்லாதனவற்றையும் தன்னோடு இணைத்துக் கொள்ளும் தன்மையினால் அவன் உயிரினைக் கடந்தது நிற்கிறான்.
“பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்”
ஆதலால் அவன் பிரபஞ்ச கவிஞன் ஆகிறான். அது போலவே இன்று பாரதி நினைவு நூற்றாண்டில் தமிழ் பேசும் மக்களிடையே மட்டும் அன்றி மொழி கடந்தும் பாரெங்கும் பாரதி, பார்க்கும் இடமெல்லாம் பாரதி என்று கொண்டாடிக் கூத்தாடிக் கொட்டித் தீர்க்கின்றனர் பாரதி அன்பர்கள்.
யுகக் கவிஞன் பாரதியைக் கொண்டாட பாரதி யுகமாக மாறுகிறது காலம். இந்திய அரசு செப்டம்பர் 11 ஆம் திகதியை மகாகவி நாளாக பிரகடனப்படுத்தி மரியாதை செய்தது. இந்திய பிரதமர் பாரதி வரிகளை உணர்வெழப் பாடுகிறார். துணை பிரதமர் தலைமையில் டெல்லியில் வானவில் பண்பாட்டு மையம் மாபெரும் விழா எடுக்கிறது. அதே போல இலங்கையில் இணைய வழியினூடாக இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஆதரவுடன் அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளி ” பாட்டினால் அன்பு செய் ” என்ற பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு நிகழ்வினை நடாத்தியது.
- சூடுக ஆத்தி ஆடுக ஆத்தி என்ற நிகழ்வு முதல் அங்கமாக அமைந்தது. அதில் 1௦௦ ஆடல் கலைஞர்கள் உலகளாவிய ரீதியில் இருந்து பாரதியின் புதிய ஆத்திச்சூடி வரிகளை சுமந்த அலரிப்பினை ஆற்றுகைப் படுத்தினார்கள்.
- தெய்வம் நமக்கு துணை பாப்பா என்ற நூல் இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக் களத்தினால் வெளியிடப்பட்டது. பாரதியின் வாழ்க்கை குறிப்பை ஓவியங்களாக வரைந்து இலகு தமிழில் தொகுக்கப்பட்டு இருந்தது.
- வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் வழக்கறிஞர் ரவி கல்யாணராமன் அவர்களுக்கு ” பாரதி ஏந்தல் ” விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
- ” கம்பவாரிதி ” ஜெயராஜ் அவர்கள் பாரதியை பிரபஞ்ச கவிஞன் எனப் போற்றி வணங்கி சிறப்புரை ஆற்றினார். இந்தியாவில் இருந்து வீ. கோ. பூமா அவர்கள் இவ்விழா பல சிறப்புகளை பொருந்திய பாரதி சங்கமம் என வியந்து தன் உரையினை நிகழ்த்தினார். அவர் பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூல் வடிவாகுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பாரதியின் நினைவு நூற்றாண்டு விழாவிற்கு பாரதி வம்சத்தவர்கள் கலந்து சிறப்பித்த நிகழ்வு இது. கொள்ளுப் பெயரன் ராஜ்குமார் பாரதி அவர்களும், எள்ளுப் பெயரன் நிரஞ்சன் பாரதி அவர்களும் கலந்து சிறப்பித்து உரையாற்றினார்கள். அதே போல பாரதியின் தங்கை வழி உறவான சுவாதி ஆத்மநாதன் அவர்களும் காசியில் இருந்து இணைந்து கொண்டார்.
இன்று அநியாய மரணங்கள் பல நிகழும் பேரிடர் காலத்தில் பாரதியின் வார்த்தைகளை பொன்மொழிகளாக சுமந்து கொண்டாடுவதும்
“ அநியாய மரணமெய்தல் கொடுமை அன்றோ ? தேனான உயிரை விட்டுச் சாகலாமோ ?” என்று பாரதி சொல்லும் மரணம் கடந்த நிலையை அறிய முற்பட்டதன் விளைவாக கூட இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆக , மரணம் கடந்த நிலை என்றால் என்ன ? ” இத்தரை மீதிலே இப்போதே முக்தி சேர்ந்திட நாடி சுத்த அறிவு நிலையில் களித்திட சொல்லுகிறார். அதாவது அமர வாழ்வினை ஒவ்வொரு கணமும் இப்பொழுதே அனுபவித்தல். எவ்வாறு அமர வாழ்வு எய்துவது ? என்ற கேள்விக்கான பதிலாக 110 ஆத்தி சூடி அடிகளை தருகிறார் பாரதி. குழந்தையும் உச்சரிக்கும் இலகு மொழியில் ஆழ்ந்த கருத்தை பொதித்து வழி காட்டுகிறார்.
இத்தகை பொக்கிஷமான சொற்களை, சொற்கட்டுகளுக்குள் உள்வாங்கி அலாரிப்பு என்னும் நாட்டிய உருப்படிக்குள் அமைத்து என்னை ஒரு கருவியாக்கி இன்று 100 ஆடல் கலைஞர்களுக்கு கற்றுக்கொடுத்து பாரதி நூற்றாண்டு சமர்ப்பணமாக ஆற்றுகை படுத்த என்னுள் நின்றாடும் பாரதியே அருள் செய்திருக்கிறான்.
” நலிவுமில்லை சாவுமில்லை கேளீர் கேளீர்
நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை
அச்சத்தை வேட்கை தன்னை அழித்து விட்டால்
அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் “
மனிதன் அமரத் தன்மை அடைவதை தான் உணர்ந்தது மட்டுமல்ல, நூற்றாண்டு கடந்தும் நாம் இன்று உணரும் வகை செய்த பாரதியின் எழுத்து தெய்வம் என்றே கருதலாம். நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கொண்டு அத்வைத நிலை கண்டால் மரணம் இல்லை என்று கற்றுத் தந்த ஐயனின் வழி நின்று சாகா வரம் பெறுவோம்.
930 total views, 3 views today