வாழப் பழகிக் கொள்கிறோம் விட்டு விடாத கோவிட் !

சேவியர்

கோவிட்டே ! உயிர்களைக் குடித்து தாகத்தைப் பெருக்கிக் கொண்ட எங்கள் தலைமுறையின் இடிவிளக்கே !வூகானில் முட்டையிட்டு உலகெங்கும் குஞ்சு பொரித்து எங்களை வறுத்தெடுத்த வன்முறை வியாதியே ! பெருங்காட்டைப் பொசுக்கும் சிறு நெருப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் நீ வந்தபின்பு தான் சிறு நெருப்பு பிரபஞ்சத்தைப் பொசுக்கும் எனும் உண்மை புரிந்தோம். பேதங்களைப் புறந்தள்ளி சமத்துவச் சமாதி சமைத்தவன் நீ.

எங்களைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த சிரிப்பின் இழையறுத்து, அழுகையின் கால்வாய் வெட்டியது நீ. புன்னகையே பெருவாழ்வு என்றிருந்த எங்களின் உதடுகளை மாஸ்களுக்குள் மரணமடைய வைத்ததும் நீ தான். இடைவெளியற்ற இன்வாழ்வுக்கிடையே நிசப்தங்களை நிரப்பி நிலைகுலைய வைத்ததும் நீ தான். ஆனாலும் நாங்கள் வீழ்ந்து போவதில்லை. இலைகளை உதிர்த்தாலும் மீண்டும் துளிர்க்கும் பெரு மரமாய் மானுடம் விழித்தெழும். சட்டையை உரித்துக் கொண்டு புதிதாய் புறப்படும் பாம்பைப் போல மனுக்குலம் தொடரும்.

எத்தனையோ நோய்களின் வாள்வீச்சுகளுக்கிடையே பயணித்து வாழ்ந்த மனுக்குலம், உன்னோடு வாழவும் பழகிக் கொள்ளும். தடுப்பூசிகள் தடுக்காத நோய்களைக் கூட நாங்கள் அங்கீகரித்து நகரப் பழகிக் கொண்டோம். காரணம் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பழகிக் கொண்டவை ஏராளம் ஏராளம் !

கண்ணுக்கு முன்னால் நடக்கும் அநியாயத்தைக் கண்டாலும் காணாதது போல போகப் பழகிக் கொண்டோம். நீதியின் நிலைநாட்டலை விட அநீதியின் திரைகளுக்குள் ஒளிந்து வாழப் பழகிக் கொண்டோம். மறுக்கப்பட்ட நியாயங்களை, விதிக்கப்பட்ட வாழ்க்கை என மௌனமாய் நகரப் பழகிக் கொண்டோம். அது போலவே, உன்னுடன் வாழவும் பழகிக் கொள்வோம்.

சாதீய சாக்கடைகளுக்குள் சிக்கிக் கிடப்பதை சுகமெனக் கருதும் சமூகத்தில் சலனமின்றி நடக்கக் கற்றுக் கொண்டோம். சாதீய வன்முறைகளை சாத்தப்பட்ட சன்னல்களுக்குள் வாசித்தறியப் பழகிக் கொண்டோம். அவலத்தின் கூக்குரலை கௌரவக் கொலைகளென கூறுவோரைக் கூட கண்டும் காணாமலும் செல்லப் பழகிக் கொண்டோம். அது போலவே உன்னுடன் வாழவும் பழகிக் கொள்வோம்.

டிஜிடல் திரைகளுக்குள் குடும்பம் நடத்தி, வாட்சப் வாத்தியார்களாய், சமூக வலைத்தளப் போராளிகளாய், சமூக வீதியின் சுண்டெலிகளாய் நகரப் பழகிக் கொண்டோம். மாயைக்குள் சிறையாகி, நிஜத்தில் சிலையாகிக் கிடக்கும் வாழ்க்கையை புதுமை என நினைத்து புளகாங்கிதம் அடைகிறோம். செல்பிகளின் கூட்டுத் தொகையில் செல்லாக்காசாகிக் கொண்டிருக்கிறோம். வெளிச்சத் திரைகளுக்குள் இருட்டு வாழ்க்கை வாழப் பழகிக் கொண்டோம். பின் உன்னோடு வாழப் பழகுவதா கஷ்டம் ?

மதங்களின் பெயரால் நடக்கின்ற மனித நேயமற்ற செயல்களை அச்சத்துடன் பார்த்து, அமைதியாய் நகர்கிறோம். களிறு அலைந்த பயிர்களின் நிலையென சக மனிதன் சிதைந்து கிடக்க, பிரச்சினை வேண்டாமென பேசாமலிருக்கப் பழகிக் கொண்டோம். மனிதத்தின் சிரச்சேதத்தை,வெறும் செய்தியாய்ப் பார்த்து பெருமூச்சு விடக் கற்றுக் கொண்டோம். உன்னோடு வாழவும் பழகிக் கொள்வோம்.

எளியவர்களின் உயிருக்கு விலையில்லை என்றும், செல்வந்தன் உயிருக்கு தேசத்தையே எழுதி வைக்கலாம் என்றும் ஏற்றத்தாழ்வுகளின் உச்சத்தில் சமநிலை தடுமாறும் நிலை கண்டும் நடுங்கவில்லை. சமத்துவத்தின் குரல் வளையை சித்தாந்தங்களின் பூட்ஸ் கால்கள் நெரிக்கையிலும் நடுங்கவில்லை. எல்லாமே இயல்பெனக் கண்டு வாழப் பழகிக் கொண்டோம். உன்னோடும் வாழப் பழகிக் கொள்வோம்.

கொரோனாவே, இவையெல்லாம் வெறும் உதாரணங்கள் தான். ஒரு பானை சோற்றுக்கான சில பதங்கள். இப்படி எத்தகைய சூழலிலும் வாழப் பழகிக் கொண்டதால் தான் உன்னோடு வாழ்வதும் எங்களுக்குப் பழகிவிடும். அதொன்றும் பிரச்சினை இல்லை.

உண்மையில் நீ எங்களுக்கு சில நன்மையும் செய்திருக்கிறார். எங்கள் போலித்தனமான புன்னகைகளை புதைக்க முகக் கவசங்களை இறக்குமதி செய்தாய். இப்போது எங்கள் அவஸ்தையான புன்னகைகளின் அருவருப்பு வெளித்தெரிவதில்லை. கண்களில் மாயை பூசி மென்மையாய் கடந்து செல்கிறோம்.

என்னை ஏன் சந்திக்கவில்லை ? எனும் நட்பின் கேள்விகளுக்கும், உறவின் விருப்பங்களுக்கும் நீ சாக்குப் போக்காகிப் போனாய். அடைக்கப்பட்ட கதவுகளுக்குள் அடைந்து கிடக்கும் சூழல் எங்களுக்கு வசதியாகி விட்டது. கதவுகளென்ன, சன்னல்களும், திரைச்சீலைகளும் கூட திறக்கப்படாமல் எங்கள் சுயநல சிந்தனைகளுக்குள் சிலிர்த்துக் கிடக்கின்றன.

சத்தமில்லாமல் செய்து கொண்டிருந்த சமூக விலகலை அங்கீகாரத்தோடு செய்து கொண்டிருக்கிறோம் அவ்வளவு தான். எங்களுடைய இயலாமைகளை அங்கீகரித்து, எங்கள் பலவீனங்களை பலங்களாய் பிரகடனப் படுத்தியது நீ தான்.

உன்னோடு வாழப் பழகிக் கொள்வோம். உன்னைப் பிடிக்கும் என்பதால் அல்ல ! பிடிக்காத எதோடும் வாழ நாங்கள் பழகியிருக்கிறோம் என்பதால்.

அதற்காக உன்னை மன்னிப்போம் என நினைக்காதே ! பண்படுத்தத் தவறிய எங்கள் நிலத்தைப் புண்படுத்திப் பாழ்படுத்திய உன்னை மன்னிப்போம் என நினைக்காதே ! எனினும், வாழப் பழகிக் கொள்வோம். அழையாத விருந்தினனாய் நீ அவ்வப்போது வருவாய் என்பதை அறிந்தும் உன்னோடு சமரசம் செய்து கொள்கிறோம். உனக்கு சாமரம் வீசுவதில்லை.

வாழப் பழகுதல் மனுக்குலத்தின் அடிப்படை. ஆதியில் விலங்குகளோடும், இயற்கையின் சீற்றங்களோடும், காலநிலை மாற்றங்களோடும் வாழப் பழகினோம். பின் வலியவனின் வேட்டைக் கருவிகளின் வேகத்திலிருந்து மறைந்து வாழப் பழகினோம். பின்னர் சக மனிதனின் விரோத விரல்களை விட்டு விலகி வாழப் பழகினோம். இப்போது உன்னுடைய கண்ணுக்குத் தெரியாத தாக்குதலில் கலந்து வாழவும் பழகிக் கொள்வோம்.

நீ, பிரபஞ்சத்தின் பேரிடர்.
பேரிடர்களின் முடிவிலும் வெளிப்படும் ஒளிச்சுடர்.

1,354 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *