சிற்பியின் அபத்தமும் சித்தரிப்பின் கோளாறும்!
— ரூபன் சிவராஜா.நோர்வே
ஆண் – பெண் உறவில், திருமண அமைப்பு முறையில் பெண்களின் சிக்கல்மிகுந்த வகிபாகத்தைப் பேசுபொருளாகக் கொண்ட நாடகம் ஹென்றிக் இப்சனின் ‘பொம்மை வீடு’. உலகின் பல்வேறு நாடுகளிலும் மேடையேற்றப்பட்டு வருகின்றது.
திருமண அமைப்பு முறையில், சமூக அமைப்பு முறையில் பெண்களின் நிலை பற்றிய உலகளாவிய பொருத்தப்பாடு மிக்க நாடகமாக இன்றுவரை திகழ்கின்றது. இப்சனின் ‘நூரா’, கணவனையும் மூன்று பிள்ளைகளையும் விட்டுவிட்டு நள்ளிரவில் வீட்டுக் கதவை அடித்துச் சாத்திவிட்டு வெளியேறுகிறாள். 1879 இல் இற்றைக்கு 140 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பிரதி அது. இப்சனின் நாடகங்களில் மட்டுமல்ல, உலகளாவிய பெண்ணியப் படைப்புகளில் இது முதன்மையான ஒன்று. கடந்த சனிக்கிழமை நோர்வேயில் உருவாக்கப்பட்ட ‘சிற்பி’ என்ற 11 நிமிடத் தமிழ்க் குறும்படம் பார்க்க நேர்ந்தது. NT Pictures இந்தக் குறும்படத்தினை எடுத்துள்ளனர்.
உறவை முறித்துக் கொண்டு பிரிந்து செல்ல நினைக்கும் ஒரு பெண்ணுக்கும், அவளைத் தடுக்க முயலும் ஆணுக்கும் இடையிலான ஒரு உரையாடலாக இக்குறும்படத்தின் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பிரிந்து செல்வதென்பது அவள் நிதானமாகச் சிந்தித்து எடுத்த முடிவு. தன் வாழ்வைத் தானே தீர்மானிக்கும் முனைப்பும் விருப்பமும் கொண்ட ஒரு பெண் கதவைத் திறக்க முடியாதபடி ஆணினால் பூட்டிவைக்கப்படுவதை நியாயப்படுத்து கின்ற காட்சிபூர்வமான சித்தரிப்பினை இக்குறும்படம் கொண்டிருந்தது. ஒரு ஆணுடனான உறவை முறித்துக் கொண்டு தன் விருப்பப்படி வாழ நினைப்பது ‘திமிர்த்தனமாகச்’ சொல்லப்படுகிறது. தற்துணிவுள்ள அப்பெண் கதவைத் திறக்கச் சக்தியற்றவளாக, அதே ஆணிடம் உதவி கோரி அழுபவளாகக் காட்டுவதென்பது என்னவாக இருந்தாலும் இறுதியில் பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள் என்று நிறுவுகின்ற முனைப்புக் கொண்ட காட்சியமைப்பு.
கதவைத் திறந்து அல்லது உடைத்துக் கொண்டு போவதாகக் காட்டி இருக்கலாம்.. அல்லது குறைந்தபட்சம் அவர்கள் ஒருவரோடொருவர் உரையாடல் மூலம் சமரசத்தைக் கண்டடைவதாக முடித்திருக்கலாம். அல்லது இன்னும் பல யதார்த்த மற்றும் மீறல் சார்ந்த வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. அவ்வாறாயின் அதுவொரு ஆரோக்கியமானதும் யதார்த்தமாதுமான படைப்பு மனநிலையின் வெளிப்பாடாக இருந்திருக்கும். பெண்ணிய வாதியாகக் காட்டிவிட்டு, ஒரு கதவைத் திறக்க முடியாத இயலாமையுடைய பெண்ணாகச் சித்தரிப்பதென்பது, பெண்ணால் முடியாது, அடங்கிப் போக வேண்டியவள் என்ற பிரதிபலிப்பினைக் கொண்ட சித்தரிப்பு. வன்மமும் அபத்தமும் மிகுந்த சித்தரிப்பு. உண்மையில் பெண்ணிலைவாதம் என்ற கருத்தியல் பற்றியதும் பெண்ணிலைவாதிகள் பற்றியதுமான உண்மையான புரிதல் இதில் இல்லை. இவர்கள் பார்வையில் பெண்ணியவாதியென்றால் திமிராக நடந்துகொள்பவர்கள் என்பதாகவே உள்ளது.
அவள் தன்னிடமிருந்து பிரிந்து போவதற்கு பின்வரும் காரணங்களில் ஏதாவது உண்டா எனக் கேட்கிறான்:
“நான் கொடுமைப்படுத்தினேனா, நடத்தையில் சந்தேகப்பட்டேனா, அடித்துக் காயப்படுத்தினேனா, சமைத்துப் போடச் சொன்னேனா, சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினேனா” இவ்வளவு காரணஙகளுக்குள்ளும் ஏதாவது ஒன்றிருந்தால் அவள் தனியாகப் போகலாம் என்று அனுமதி வழங்குவதாகச் சொல்கிறான். அடிப்படையில் பெண்ணைக் குற்றவுணர்வுக்கு உள்ளாக்கும் கேள்விகள் இவை.
இந்தக் காரணங்களை விடப் பிரிந்துபோவதற்கு வேறு காரணங்கள் இருக்காதா? இவை அனைத்தும் உடல் அல்லது பௌதீக விடயங்களுடன் தொடர்புபட்டவை. மனத்துடன் நெருங்கிய தொடர்புடைய காதல், காமம், அன்பு, பகிர்வு, பரஸ்பரம் மதித்தல், விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை பற்றிய எதுவும் காரணமாகக் கேட்கப்படவில்லை. ‘எனக்கு உன்னைப் பிடிக்கும். ஆனால் எப்ப நான் எழுத வேண்டியதை என்னைத் தள்ளி விட்டு..நீ எழுதத் தொடங்கினாயோ அப்ப எனக்கு உன்னைப் பிடிக்காமல் போயிட்டுது’.
பால்நிலை சமத்துவத்தில், ஆணை விடப் பெண் ஆளுமையில், ஆற்றலில், தீர்மானமெடுப்பதில், தன் விருப்பப்படி வாழ்வதில், உயர்ந்து நிற்பதை ஏற்றுக் கொள்ளாத ஒரு வன்மமான ஆண் பேரினவாத மனநிலையை (Male chauvinist) வெளிப்படுத்துவதோடு, அதனை நியாயப்படுத்தவும் செய்கிறது இந்தக்குறும்படம்.
‘‘Help… Help…’ என்ற அவளின் இயலாமைக்குரல் பின்னணியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் எகத்தாளமாகச் சிரித்துக் கொண்டேயிருக்கிறான். அவள் அழுதுகொண்டிருப்பது அண்மைக் காட்சியிலிருந்து (close up) விரிந்து (long shot) தூரக்காட்சியாகிப் பெண்ணின் உருவம் சிறிதாகுகிறது. இவன் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்குள் அவளது சிறிதாக்கப்படட உருவம் கொண்டு செலுத்தப்பட்டு, புத்தகம் அடித்து மூடப்படுகிறது. இந்தக் காட்சிபூர்வச் சித்தரிப்பு எதனைச் சொல்கிறது என்பதை விளக்கத் தேவையில்லை.
‘சிற்பி’ எனத் தலைப்பிட்டிருக்கின்றார்கள் இதற்கு. கற்பனையாக அந்த ஆண் தன்னால் கட்டுப்படுத்தப்படும் பெண் பாத்திரத்தை உருவாக்குக்கிறானாம் என்று முடிக்கிறார்கள் படத்தை. யாரும் எதையும் உருவாக்கலாம். அது எதனைப் பிரதிபலிக்கின்றது என்ற கேள்வியிலிருந்தே அதன் சமூகப் பெறுமதி அளவிடப்படுகின்றது, மதிப்பிடப்படுகின்றது.
கற்பனை, பாத்திர உருவாக்கம் என்பதெல்லாம் கருத்தியல் சார்ந்து எதனை நிறுவுகின்றது, யார் சார்பாகப் பேசுகின்றது, எப்படிப் பேசுகின்றது என்பதிலிருந்துதான் படத்தின் பெறுமதி அளவிடப்படுகின்றது. படைப்பு மனநிலை மதிப்பிடப்படுகிறது. ‘சிற்பி’ என்பது செதுக்குவது. படைப்பது. செதுக்குதல் என்பது தேவையற்றதை நீக்கி புத்தாக்கம் செய்வது. மேன்மையான, உன்னதமானதொன்றை உருவாக்குதல். அடக்குமுறையை, ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதல்ல.
சமூகத்தில் நிலவுகின்ற ஆண்-பெண் உறவுச் சிக்கலையும், அதன் உளவியலையும் அப்படியே பிரதிபலிப்பதாகச் சொல்வதற்குரிய எவ்வித முகாந்திரமும் இதன் காட்சியமைப்பிலும் சித்தரிப்பிலும் இல்லை. நடைமுறை யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாயின், கற்பனையாகச் சித்தரிப்பதாகக் காட்ட வேண்டிய தேவை இல்லை. துணிச்சலும் மிடுக்கும் சுய சிந்தனையுமுள்ள பெண் உதவி கோரி அழுதுவடிக்கப்போவதில்லை. அவள் கதவைத்திறந்து தன் வழியைக் கண்டடைவாள், தனக்காகப் போராடுவாள் என்பது யதார்த்தம். காட்சியமைப்பும், சித்தரிப்பும், உரையாடலும் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் ஆணின் உளவியலைத் தொடக்கம் முதல் முடிவுவரை நியாயப்படுத்துகின்றது.
1,270 total views, 2 views today