மெய்ப்பாடு

டோட்முன்ட் நகரத்துக்குச் சென்று சரக்குச் சாமான் வாங்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் இணைந்து பொருட்களைப் பட்டியல் போடுவார்கள். இடையிலே மனைவி அந்தப் புடவைக்கடையில் மலிவு விற்பனையாம் வெற்றிமணி பத்திரிகையில் விளம்பரம் போட்டிருக்கின்றார்கள்.

அடுத்த நாள் டோட்முண்ட் போக வேண்டும். புடவைக்கடையைக் கடக்கிறார்கள். கண்ணாடிக்குள்ளால் ஒரு பார்வை, போகும் போது திரும்பித் திரும்பி ஒரு பார்வை. வா உள்ளே போய்ப் பார்ப்போம். ~~சீ.. சீச்சி வேண்டாம். வேண்டாம் என்பது உள்ளே போவோம் என்பது போல் இருக்கும். போவார்கள் கையிலே ஒரு புடவையுடன் ஒரு புன்னகையுடனும் வெளியேறுவாள் மனைவி.

நகைக்கடையுள் சும்மா பார்ப்போம் என்பது போல் சென்று ஒவவொரு நகையாகப் பார்த்து இது நல்லா இருக்குதில்ல என்று காட்டுவாள். அப்படியென்றாள் வாங்கு என்று கணவன் சொன்னால், இல்லை சரியான விலையாக இருக்கிறது. சும்மாதான் பார்த்தேன் என்பாள். ஆனால், அடிக்கடி அந்த நகைக்கு கண் போகும். ஒவ்வொரு நகையாகப் பார்த்து அந்த நகையை அடிக்கடி போட்டுப் பார்ப்பாள். இதைவிட சைகை மொழியை உணர்த்த வேண்டுமா? அ;பபாவிக் கணவனும் அதை எடு என்று வாங்கிவிடுவான். வேண்டாம் என்பது வேண்டும் என்பதே அர்த்தம் என்பதை அறிந்த தலைவனையே கலிங்கத்துப்பரணியிலே சயங்கொண்டார் அடையாளப்படுத்துகின்றார்.

விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி
வெகுளி மென் குதலை துகிலினைப்
பிடிமின் என்றபொருள் விளைய நின்றருள்செய்
பெடைந லீர்கடைகள் திறமினோ.

தன்னுடைய ஆடையைப் பற்றும் தலைவனை விடுங்கள் விடுங்கள் என்று தலைவி சொல்வது பிடியுங்கள் பிடியுங்கள் என்பது போல் இருக்குமாம்.

அந்தப் பார்வை, நடத்தை கணவனுக்கு செய்தியை உணர்த்துகின்றது. இதுவே மெய்ப்பாடு என்பார்கள். மெய் என்பது உடம்பு. பாடு என்பது படுதல் அதாவது தோன்றுதல். உடம்பிலே தோன்றுகின்ற சைகை மொழி. உள்ளத்து உணர்வுகளை சைகை மொழி புலப்படுத்தும். இதற்கு உடல் உறுப்புகள், செய்கை துணை போகின்றது. தன் காதலை வெளிப்படுத்தும் காதலியின் மெய்ப்பாட்டை இப்பாடல் வரிகளில் சுவைக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

ஒரு பக்கம் பாக்குறா ஒரு கண்ண சாய்க்கிறா
அவ உதட்ட கடிச்சி கிட்டு மெதுவாக சிரிக்கிறா
காலாலே நிலத்திலே கோலம் போடுறா
கண்களை மூடிமூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கறந்த பாலைநான் கொடுத்தா கையைத் தொட்டு வாங்குறா.

எத்தனை பேருடைய சைக்கிள் செயின் எத்தனை பேருடைய வீட்டின் முன் பழுது பார்க்கப்பட்டுள்ளது என்பதை யாழ்ப்பாணத்து இளையவர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கூட்டுக் குடும்பத்தில் வேலை விட்டு வீட்டுக்குத் திரும்பும் எத்தனையோ புது மாப்பிள்ளைக்கு தலைவலி தானாகவே வரும். அத் தலை தடவ ஒரு கை தானாகவே ஏங்கும். திருமணத்தின் பின் தலைவலி இப்படியே மெய்ப்பாடாகத தலையெடுக்கின்றது.

சேர, சோழ, பாண்டியர்கள் மீது ஒவ்வொரு மன்னர்களின் மீது 900 பாடல்கள் வீதம் 2,700 பாடல்களாகப் பாடப்பட்ட பாடல்களே முத்தொள்ளாயிரம் எனத் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பாடலில் வீதியுலா வருகின்ற கிள்ளிவளவனைக் காண ஆசைப்படுகின்றாள் ஒருத்தி. வாசற்கதவை நாடி அவனைக் காண ஆசைப்படுகின்றாள். காணக் கண்கள்; துடிக்கின்றன. ஆனால், நாணம் தடுக்கின்றது. அப்பெண் ஒரு மூங்கிற் குழாயினுள் சிக்கிக் கொண்ட ஒரு எறும்பானது, அம்மூங்கிற் குழாயின் இரு பக்கமும் தீப்பிடித்துள்ளது. அதைப் போல் இருபறமும் போக முடியாமல் அனலிடைப்பட்டுத் துடிக்கும் எறும்மைப் போல் நள்ளிரவில் நான் துடிக்கின்றேன் என்று பாடுகிறாள். இது தன் விருப்பத்தைப் பெண் மறைத்தலுக்குள் அடங்குகின்றது.

நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற – யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என தொல்காப்பியர் மெய்ப்பாட்டை வகைப்படுத்துகின்றார். இவற்றின் பொருண்மை பற்றி 32 வகை மெய்ப்பாடுகள் உள்ளன.
அதில் ஒன்றான மருட்கை என்பது பெருமையாகும். இது புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்ற 4 வகையான பொருண்மைகளிலே பிறக்கின்றது.

உதாரணமாகக் குறுந்தொகையிலே ஒரு பாடல். தலைவியைத் திருமணம் புரியாது தலைவன் இருப்பதை அறிந்த தோழியானவள் அவன் தலைவியைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனைப் பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு பற்றித் தோழிக்குப் பின்வருமாறு உரைக்கின்றாள்.

நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,
நீரினும் ஆரளவின்றே – சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

என் தலைவனொடு நான் கொண்ட நட்பானது, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது, கடலை விட ஆழமுடையது என பெருமை என்ற பொருண்மையில் மருட்கை என்ற மெய்ப்பாட்டை வெளிப்படுத்துகின்றாள்.

இவ்வாறு மனிதன் வாழ்க்கையின் இயல்புகளைப் புலப்படுத்த மெய்ப்பாடு துணைபுரிகின்றது.

1,210 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *