‘கோடை’ நாடகம் -1979

எனது நாடக அனுபவப் பகிர்வு – 12
ஆனந்தராணி பாலேந்திரா
கடந்த இதழில் யாழ்ப்பாணத்தில் 1978இல் நாடக அரங்கக் கல்லூரி தனது நாடகப் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்தது பற்றியும் அதில் பயிற்றுனராகவும் பங்காளராகவும் எனது பங்களிப்பு பற்றியும் அங்கு பயிற்சிக்கு வந்திருந்த பெண்கள் சமூகத்தின் கேலிப்பேச்சுகளுக்கு அஞ்சி ஒவ்வொருவராகப் பயிற்சியில் இருந்து விலகிவிட இறுதியில் நான் மட்டும் தனித்துவிடப்பட்டது பற்றியும் எழுதியிருந்தேன்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றிய பெண்களில் ஹேமாவை எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அவர்தான் சில வாரங்கள் ஒழுங்காக வந்த ஒருவர். நாங்கள் இருவரும் சிநேகிதிகளானோம். சில காலத்தின் பின்னர் நடந்த ஹேமாவின் திருமணத்திற்கு அவருக்கு நான் ஒப்பனையாளராகவும் இருந்தேன். நான் கலந்துகொண்ட முதலாவது பிராமண முறைப்படி நடைபெற்ற திருமணம் அது. அவர்களுடைய திருமணச் சடங்கு முறைகள் பல வித்தியாசமானது. நான் அவற்றை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்தது அதுவே முதல் தடவை. காசியாத்திரை, ஊஞ்சல், நலங்கு என்று மணமக்கள் விளையாடும் விளையாட்டுகளை எல்லாம் நேரில் பார்த்தது எனக்கு ஒரு புதிய அனுபவம்.
ஹேமா தற்போது கொழும்பில் இருக்கிறார். 2020 ஜனவரியில் நான் இலங்கை சென்றபோது மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் அவருடன்; தொலைபேசியில் கதைத்தேன். அந்த நாள் நினைவுகளையெல்லாம் இரை மீட்டோம். அவரை நேரில் சந்திக்க முடியாமல் போய்விட்டது. ஹேமாவின் மகன் ஜெயபிரகா~; சர்மா நாடகத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றவர். நானும் பாலேந்திராவும் கொழும்பில் நின்றபோது எம்மை வந்து சந்தித்து எங்கள் இருவரையும் ஒரு நேர்காணலும் செய்திருந்தார்.
60, 70களில்; நாடகக் கலைஞர்களை எமது சமூகம் எப்படிப் பார்த்தது என்று அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும். குறிப்பாக திருமணம் ஆகாத தமிழ்ப் பெண்கள் மேடையில் ஏறி ஆண்களுடன் சேர்ந்து நடிப்பதை எள்ளிநகையாடிய காலம் அது. துணிந்து நடித்த பெண்கள்கூட ஓரிரு மேடையேற்றங்களுடன் நடிப்பதை நிறுத்திவிட்டனர். பொதுவாக யாழ்ப்பாணத்தில் பாடசாலை, பல்கலைக்கழக வட்டத்திற்கு வெளியே பெண்கள் ஆண்களுடன் இணைந்து நடிக்கும் வழக்கம் இல்லாத காலம் அது. ஆண்களே பெண் வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்தார்கள். இந்தப் பின்னணியில்தான் நான் பாலேந்திரா நெறிப்படுத்திய நவீன நாடகங்களில் அப்போது தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தேன்.
1979ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நாடக அரங்கக் கல்லூரியினர் அதன் முதலாவது நாடகமாக ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் ‘கோடை’ நாடகத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். ‘கோடை’ நாடகத்தில் தாய், மகள் என இரண்டு பெண் பாத்திரங்கள். செல்லம் என்ற தாய் பாத்திரத்தில் நடிப்பதற்கு குழந்தை சண்முகலிங்கம் மாஸ்டர் என்னை அணுகினார். நான் ஏற்கனவே பாலேந்திராவின் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபடியால் அவர் தைரியமாக என்னை அணுகினார்.
அந்த வேளையில் நான் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்திருந்தேன். அதேவேளை பாலேந்திரா நெறிப்படுத்தி நான் ஏற்கனவே நடித்த ‘கண்ணாடி வார்ப்புகள்’, ‘பசி’ போன்ற நாடக மேடையேற்றங்களுக்காக கொழும்பு, பேராதனை பயணங்கள், இலங்கை வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக கொழும்பு பயணங்கள் என வார இறுதி நாட்களிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தேன். அத்தோடு அந்த வேளையில் பாலேந்திரா நெறியாள்கை செய்துகொண்டிருந்த யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் நடித்த ‘ஒரு பாலை வீடு’ நாடக ஒத்திகைகளுக்கும் பாலேந்திராவிற்கு உதவியாகப் போய்வந்துகொண்டிருந்தேன்.
‘கோடை’ நாடகத்தில் வரும் தாய் பாத்திரம் மிக முக்கியமான ஒரு பாத்திரம். நிறைய ஒத்திகைகளுக்குப் போகவேண்டியிருக்கும். நேரமின்மை காரணமாக எனக்குள் ஒரு தயக்கம். சண்முகலிங்கம் மாஸ்டர் மிக அமைதியான சுபாவம் கொண்டவர். பண்பான மனிதர். மிக ஆறுதலாகத்தான் கதைப்பார். அவர் கதைத்த விதத்தில் என்னால் மறுப்புச் சொல்லமுடியவில்லை. சரி நடிக்கிறேன் என்று கூறினேன்.
‘கோடை’ நாடகத்தை எழுதியவர் மஹாகவி என்ற புனைபெயரில் நன்கு அறியப்பட்ட அளவெட்டியைச் சேர்ந்த உருத்திரமூர்த்தி அவர்கள். ஈழத்தின் கவிதை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர். இவர் நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த முக்கிய கவிஞர்களுள் ஒருவர். ‘கோடை’ நாடகத்தை இவர் 1966ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.
‘கோடை’ முழுநீள பா நாடகமாகும். இந்தக் கதை 1937ல் நடைபெறுவதாக எழுதப்பட்டுள்ளது. விடுதலை உணர்வு சாதாரண மக்களிடையே எவ்வாறு கொளுந்துவிட்டெரிந்தது என்பதை மஹாகவி நுணுக்கமாகக் காட்டும் நாடகம் இது. ஒரு நாதஸ்வரக் கலைஞரின் வாழ்க்கையில் ஒரு நாளில் இடம்பெறும் நிகழ்ச்சியைக் காட்டுகிறது இந்த நாடகம். ஏழைக் கலைஞர்களின் வாழ்க்கையும் சமூக அந்தஸ்தும் அதிகாரத்தின் இழுப்புகளும் நாடகத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.
மிகுதி அடுத்த இதழில்…..
2,971 total views, 6 views today