உடல் மற்றும் மனதின் கழிவகற்றலின் அவசியம்
கரிணி .யேர்மனி
அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கலுக்கு முதன் நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவார்கள். வீட்டிற்குள்ளும், வெளியிலேயும் அடைந்து கிடக்கின்ற தேவையற்ற விடயங்களை அகற்றி அவற்றை தீயிலிட்டு கொழுத்தி விடுவார்கள். இது ஒரு நினைவில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்ற செயன்முறையே தவிர தேவையற்ற கழிவுகளை அகற்ற போகிப் பண்டிகை வரை காத்திருக்க வேண்டியதில்லை.
கழிவகற்றல் என்பது உண்ட உணவு கழிவுகளை அகற்றல் மட்டுமே எனப் பொருளாகாது. தேங்கியிள்ள தேவையற்ற விடயங்கள் அகற்றப்பட வேண்டிய கழிவுகளே. எப்போதும் எம்மையும், எம் சூழலையும் கவனித்து சுத்திகரிக்காவிடில் கழிவு தேங்கி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
மனதில் சேரும் தேவையற்ற விடயங்கள் செம்பிற்களிம்பு போல, செம்பு பாத்திரத்தை உபயோகப்படுத்தாமல் வெறுமையாக வைத்திருந்தாலும் கூட புறச்சூழலில் தாக்கம் புரிந்து களிம்பு ஏறி விடுகின்றது. எனவே அவ்வப்போது அதனை சுத்தம் செய்தல் வேண்டும். அது போலவே மனம் புற மற்றும் அகக் காரணிகளால் எம்மை அறியாமலே மாசடையக் கூடும். கோபம், குரோதம், கள்ளம்கபடம், பேராசை, வஞ்சகம், தீராக்கவலை, தாழ்வுமனப்பான்மை, பாதிப்புக்குள்ளான விடயங்களின் நினைவுகள் போன்ற பல விடயங்கள் மனதை பாதித்து விடக்கூடிய மனக்கழிவுகளாகும். பழி உணர்வு பல பாவச்செயல்களுக்கு காரணமாக இருக்கிறது. வேட்டைக்கு தயாரான விலங்கு போல் பல்வேறு பாவச் செயல்களை செய்ய உள்ளிருந்து தூண்டுதல் செய்தவண்ணம் இருக்கும். இந்த உணர்வு ஏற்படும் போது உடனடியாக அந்த தன்மைக்கு உரிய காரணிகளை களைந்து மனதிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும். இல்லாவிடில் அதனைச்சூழவும் அழுக்குகள் பற்றிக்கொண்டு கோரமாக வளரத் தொடங்கிவிடும்.
மனச்சோர்வு என்பது உள்ளிருந்துகொண்டே மெல்லக் கொல்லும் விசம். பல பாரிய நோய்களுக்கான அடிப்படை இதுவே. இதுவரை நேர்ந்த துன்பங்களை இழுத்து வைத்து மனதை அழுத்துவதும், இதுவரை நிகழ்ந்திராத விடயங்களையும் எண்ணி கற்பனையில் கலங்குவதும் இலகுவில் மனச்சோர்வை ஏற்படுத்திவிடும். உடல் ஓரிடத்தில் அமைதியாக இருந்தாலும் மனம் அழுத்தப்பட்டு எதிர்மறையாக இயங்கிக் கொண்டே இருப்பதனால் மூளை சோர்வுற்று மந்த கதியை அடைகிறது. மூளையை நம்பியிருக்கும் ஏனைய உறுப்புகளின் செயற்பாடுகளும் தேக்கம் அடைகின்றன. எனவே தகாத உணவை உட்கொண்டால் உடல் எவ்வாறு தடுமாறுமோ அதுபோல் தகாத சிந்தனைகளின் தேக்கத்தினால் மனதோடு கூடிய உடலும் பாதிப்புக்குள்ளாகும். மனக்கழிவுகளான இந்த சிந்தனைகள் தோன்றினால் அவற்றை எப்படியாவது நீக்கிவிட வேண்டும். ஒரு பாத்திரத்தை ஏதாவது பொருளால் நிரப்பி விட்டால் அங்கே வெற்றிடம் தோன்றுவதில்லை ஆகவே எம் மனதுக்கு பிடித்த புத்துணர்வு தரும் விடயங்களில் மனதை செலுத்தி ஆனந்தமாக வைத்துக் கொண்டால் அங்கே இடைவெளி ஏற்படுவதுமில்லை அத்தோடு தேவையற்ற விடயங்களும் உள்நுழைவதில்லை. மனதினை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்ள தியானம், அறநூல்களை மீண்டும் மீண்டும் படித்தல், நல்லோர் நட்பு, சுயபரிசீலணை, உடல் மனம் ஒருமித்த நோன்பு, பிரார்த்தனை போன்ற நல்ல விடயங்களில் நாட்டம் இருக்க வேண்டும்.
மனச்சிக்கல் அற்று உறங்கச் செல்ல வேண்டும், மலச்சிக்கல் அற்று எழுந்து கொள்ள வேண்டும். உண்ட உணவு உடலிலே தங்கிவிட்டால் அதுவும் நஞ்சுப் பொருளே. ஏற்கனவே உண்ட உணவு செரிமானம் அடைந்துவிட்டது என்பதை அறிந்து அடுத்த உணவை உண்டு வந்தால் இவ்வுடலுக்கு அதனை பாதுகாக்கும் மருந்து தேவைப்படுவதில்லை என்பது ஆன்றோர் வாக்கு. மலசலத்தை அடக்குதல், தகுந்த தருணங்களில் கழிக்க வேண்டும் போல் உடல் ஏற்படுத்தும் உணர்வு நிலையை அலட்சியம் செய்தல், போதிய நீர் அருந்தாமை என்பன பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும். நீண்ட நேர பணியாளர்கள் சிறுநீர் கழிப்பதில் அலட்சியம் காட்டி வருவதனால் அதிகளவில் இன்று சிறுநீரக செயலிழப்பு காணப்படுகிறது. உடல் தன்னிச்சையாகவே தன்னால் முடிந்த அளவு கழிவகற்றி தன்னை தானே சுத்தப்படுத்த முனைகிறது. உடல்மொழியாகிய இந்த உணர்வுகளை கருத்திற் கொண்டு ஆரோக்கிய விடயங்களில் ஒத்துழைத்தாலேயன்றி மருந்து மாத்திரைகள் கூட பயனளிக்காது போய்விடும்.
காலையில் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்பாக நேராக படுத்தபடி இரண்டு முழங்கால்களையும் வயிற்றை நோக்கி மடித்து இரண்டு கைகளாலும் முழங்கால்களை கட்டிப்பிடித்துக் கொள்ளல் வேண்டும். இதனை ‘பவனமுத்தாசனம்’ என யோகாசனத்தில் அழைப்பர். இதனால் அடிவயிறு அழுத்தப்படும் பெருங்குடல் உணவுக் கழிவுகளை முற்றாக அகற்றுவதற்காக தூண்டப்படும், சிறிது நேரத்தில் மலங்கழிக்கும் உணர்வு ஏற்படும். தாமதிக்காது காலைக்கடனை முடித்துவிட வேண்டும். உணவை தேர்வு செய்து உண்பதனாலும், எமது மரபணுவுக்கு பழக்கப்பட்ட பாரம்பரிய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதனாலும், காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவதாலும், தொடைப்பகுதிகள் அடிவயிற்றை அழுத்தும்படி அமர்ந்திருந்து மலம் கழிப்பதனாலும் உணவுக் கழிவுகள் சீராக வெளியேற வழிசெய்யும். மலச்சிக்கலானது முகத்தில் அதிக பருக்கள், தோல்வியாதிகள், மனதில் மந்தத்தன்மை, அடிக்கடி நேய்வாய்படுதல், கட்டிகள், புண்கள் போன்ற பற்பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. தேங்கிய கழிவுகள் இரத்தத்தில் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை பயணிப்பதை மறக்க கூடாது. மேற்பூச்சுக்கான சிகிச்சையை முதன்மைபடுத்தாது அடி ஆழத்தில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
மனக்கழிவு, உடல்கழிவு அறிந்திருக்கின்றோம் ஆனால் மூச்சுக்கழிவு என்ற ஒன்று மிக பிரதானமாக இருக்கிறது. மூச்சே உயிர்வாழ்தலின் ஆதாரமும், அடையாளமும். பிராண வாயுவை உடலுக்குள் செலுத்தி உடல் சூட்டோடு எரித்து சக்தியை உடலில் சேர்த்து பின் அதன் கழிவுகளை கரியமில வாயுவாக வெளியேற்றுகிறது மூச்சு. அதன் வழிப் பாதை அற்புதமானதும் பாதுகாப்பானதுமாகும். மூக்கினுள்ளே தூசிகள் புகாதபடி உரோமங்களையும், ஈரப்பத்த்தையும் கொண்டு பாதுகாப்பாக காற்றை நுரையீரலில் உள்ள கோடிக்கணக்கான சிற்றறைகளில் நிரப்பி அந்த சிற்றறைகளின் சுவர் வழியாக இரத்தத்தோடு தொடர்பு கொண்டு உடல் முழுவதும் பயணித்து பலனளிக்கிறது. உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் சுவாசிக்கிறது. புகைத்தல், மதுபானம் அருந்துதல், தட்பவெப்ப நிலையில் கவனமற்று இருத்தல், உண்ணத்தகாத உணவை உட்கொள்ளல், கிருமித் தொற்று போன்ற விடயங்கள் நுரையீரல் சிற்றறைகளின் சுவர்களில் படலங்களை ஏற்படுத்தி சுவாசம் அந்த சுவர் வழியாக இரத்தத்தில் தொடர்புபடும் நிகழ்வை தொந்தரவு செய்கின்றன. இதனால் உடலுக்கு போதிய பிராண வாயு கிடைக்கப் பெறாமல் மூச்சுக்கழிவு அகற்றப்படாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்பு ஏற்படும் அபாயமும் நிகழ்கிறது. எப்போதும் காற்றோட்டமான சூழல், உடல் தட்பவெப்பத்தில் கவனமெடுத்தல், சுவாசப்பயிற்சி, காலநிலைக்கேற்ற தேர்வுசெய்யப்பட்ட உணவு, அமைதியான மனநிலை, தியானம், தூய்மை என்பன சீரான ஆரோக்கியமான சுவாசத்திற்கு வழிவகுக்கும்.
பஞ்ச பூதங்களாலான இந்த உடலை பூத சுத்தி செய்து கொள்ள முடியும். நிலத்தில் வெறுங்கால்களோடு நடத்தல், இயற்கை சார்ந்த நீர் நிலைகளில் நீராடுதல், தூய நீரினை அருந்துதல், நெருப்பை அருகாமையில் பயன்படுத்தல், விளக்கு ஏற்றல், சூரிய வெப்பத்தோடு தொடர்புபடுதல், காற்றோட்டமான இடத்தில் பிரணாயாமம் (சுவாசப்பயிற்சி) செய்தல், சுத்தமான காற்றை சுவாசித்தல், தியானம் செய்தல் ஆகிய பஞ்ச பூதங்களோடான நேரடித் தொடர்புகளை தூய நேர்மறையான உள்ளத்தோடு அமைதியாக அணுகும் போது சக்தி தேக்கம் சமநிலைப்படுத்தப்பட்டு தாமாகவே உடல் மற்றும் உள்ளக சக்தி நிலையில் பூத சுத்தி ஏற்படுகிறது. ஒளி தரும் விளக்கினை கூட இடையிடையே சுத்தப்படுத்தாவிட்டால் அது களிம்பு படிந்து கரிப்புகையால் மங்கிப்போய்விடும். உடலும், மனமும் அடிக்கடி தூய்மைப்படுத்தப்பட்டு அனுதினமும் புத்துணர்வோடு புதிதாய் பிறந்து கொள்ளல் வேண்டும். தூய என்பது தோற்றத்தால் தூய்மையானது மட்டுமல்ல சுத்தப்படுத்தப்பட்டதும் தூய்மையானதே.
958 total views, 3 views today