அச்சம் தவிர்
பாரதியின் புதிய ஆத்திச்சூடி என்னை அதிகம் கவரக் காரணம் பல உண்டு. சுருங்கக் கூறின் ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குமான சூத்திரம் இந்த ஆத்திச்சூடி. வெற்றி என்றால் என்ன ? அதுவும் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். தனி மனித வெற்றி, செயல்திறன் வெற்றி, சிந்தனை வெற்றி, சமுதாய வெற்றி என எவ்வைகையான வெற்றிக்கும் வழிகாட்டுகிறது. இவ்வாறு வெற்றியை பலர் பலவகையாக நினைத்துக் கொண்டாலும், ஆன்ம வெற்றியே உண்மையானது எனவும் நாம் அறிவோம். அதனைத் தான் பாரதி தன் 110 ஆத்தி சூடி அடிகள் மூலம் தர முயல்கிறார்.
இந்த 110 அடிகளில் சொல்லப்பட்ட வகையில் நாம் வாழ்ந்தால், பிறகென்ன நாம் இருக்கும் இடம் தான் சுவர்க்கம் என்று ஆகி விடும். சுவர்க்கத்தில் வாழ்கிறோம் என்றால் நம் வாழ்க்கை எத்தனை இனிதான கொண்டாட்டமாக இருக்கும். தேவர்கள் போல வாழ்வோம் இல்லையா? அதனைத் தான் அமர வாழ்வு என்று பாரதி பலமுறை குறிப்பிடுவார்.
ஆக,இந்த 110 ஆத்திச்சூடி அடிகள் மூலமாக அமர வாழ்வைக் காட்டித் தந்து பரிசளிக்கிறார் பாரதி. இந்த அமர வாழ்வை ஒவ்வொரு மனிதனும் இம்மண்ணில் வாழும் போதே பெற வேண்டும் என்பதே பாரதியின் பெரும் ஆசையும் நோக்கமும்.
அன்றிலிருந்து இன்று வரை பெரும் ஞானிகளும், ஞான குருவாக இருப்பவர்களும், தத்துவவியலாளர்களும் போதனை செய்ததும் இதனைத் தான். இவ்வாறான போதனைகளை வழங்க இன்று எத்தனை எத்தனை மையங்களும், குருமார்களும், பெரும் திரள் மக்களும் குவிகின்றனர். ஆனால் நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் பாரதி மிக இலகுவாக ஆத்திச்சூடி மூலம் தெளிவு தந்துவிட்டார். பாரதி எப்பேர்ப்பட்ட ஞானகுருவாக இருந்திருகிறார் என்பதனை உணர இது ஒன்றே போதும்.
அமர வாழ்வு எய்தலாம் என்று சொல்லிவிட்டு தான் 110 அடிகளையும் சொல்ல ஆரம்பிக்கிறார். அதன் முதல் அடி ” அச்சம் தவிர் “
மனிதனிடத்தே அச்சம் என்பது ஒருவித அடிப்படை உணர்வாகி விட்டது. உணர்ச்சி என்பதே மனம் சார்ந்தது தான் அது உங்கள் இயல்பல்ல என்று பல அறிஞர்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளனர்.
விழிப்புணர்வற்ற பயம் எவ்வித ஆக்கத்திற்கும் எதிரி தான். முயற்சிகள் அனாதையாகிக் கிடப்பதற்கும் மூல காரணம் பயம் தான். தோல்விக்கான பயம் என்பது ஒரு வகையில் ஆணவத்தின் வெளிப்பாடே. இச்சை இருந்தால் அச்சம் வரும். அச்சம் தவிர்க்க வேண்டுமானால் இச்சை ஒழி என்று பாரதியின் கொள்ளுப் பெயரன் ராஜ்குமார் பாரதி ஐயா தெளிந்து சொல்வார்.
இச்சை ஒழி அச்சம் தவிர் – ராஜ்குமார் பாரதி
“ Life begins Where fear Ends “ – ஓஷோ
வாழ்வில் பயம் என்ற ஒரு விடயத்திற்குத் தான் பயப்பட வேண்டும் வேறு எதற்கும் அல்ல என்று ஓஷோ சுவையாகக் குறிப்பிடுவார். பயம் அர்த்தமற்றது என்று உணர வேண்டும். பாரதியின் பல கவிகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அச்சத்தை தவிர்க்கச் சொல்லிக் கூறப்பட்ட வரிகளை படித்துப் பார்ப்போம்.
” ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித்த திளைப்பவர்க்கு அச்சமும் உண்டோடா ?
” அச்சமுடையார்க்கு அரணில்லை “
” அஞ்சுதல் இலார், துஞ்சுதல் இலார் “
” அச்சமும், பேடிமையும், அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டாரடி – கிளியே ஊமைச் சனங்களடி “
“ஆவி பெரிதென்று எண்ணி – கிளியே
அஞ்சிக் கிடந்தாரடி”
“அஞ்சி அஞ்சிச் சாவார் – அவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே”
“நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்”
” அச்சப் பேயைக் கொள்ளும் படையும்
வித்தை தேனில் விழையும் காளியாய்
வாராய் நிலவே வா “
” அச்சமில்லை அமுங்குதலில்லை நடுங்குதலில்லை நாணுதலில்லை “
“அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம் “
“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே
இச் ஜெகத்துள் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதும்
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதும்
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதும்
இச்சை கொண்ட பொருளிலெல்லாம் இழந்து விட்ட போதும்
கச்சணிந்த கொங்கை மாந்தர் கண்கள் வீசும் போதும்
நச்சை வாயிலே கொணர்ந்தது நஞ்சை ஊட்டும் போதும்
பச்சை ஊனியைந்த வேற்படைகள் வந்த போதிலும்
உச்சி மீது வான் இடிந்து வீழ்கின்ற போதிலும் “
“யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம் “
” பொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை. மையல்,வீண் விருப்பம்,புழுக்கம்,அச்சம்,ஐயமென்னும் பேயையெல்லாம் ஞானம் என்னும் வாளாலே அறுத்துத் தள்ளி “
” பயம் என்னும் பேய் தன்னை அடித்தோம் “
” அச்சத்தை எரித்து அதன் சாம்பலையும் இல்லாமல் எரித்து விட்டோம் “
” அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்”
அடடா அச்சத்தை தவிர் என்று பாரதி முழங்கி, பாடி, வலியுறுத்தியளவு யாரும் செய்திருக்க மாட்டார்கள்.ஏனெனில் தான் பெற்ற இன்பத்தை பிறர்க்கு அள்ளி அள்ளி வழங்குவதில் வள்ளல். எனவே அச்சத்தை நீக்கி அவர் வாழ்ந்த அமர வாழ்வினை எமக்கும் அறிமுகம் செய்து வழிகாட்டுகிறார்.
ஆத்திச்சூடியில் சொல்லப்பட்ட ஏனைய அடிகளை பின்பற்ற வேண்டும் என்றால் முதலில் அச்சத்தை ஒழிக்க வேண்டும். இல்லையேல் மிகுதி உள்ள 109 மந்திரங்களையும் பின்பற்றுவது சாத்தியப்படாது.
ஆனந்தமான , வெற்றிகரமான அமர வாழ்வின் முதற் படி ” அச்சம் தவிர் ” என்ற தாரக மந்திரத்தை தினமும் முழு நம்பிக்கையுடன் கருத்தூன்றி உணர்வுடன் உண்மையாக ஓதி வந்தால் புத்துணர்வு பிறக்கும். புது வாழ்வு கிட்டும்.அடிமைத் தனத்திற்கும், ஆக்கமின்மைக்கும், அறிவு மயக்கத்திற்கும், அமைதியின்மைக்கும்,அழிவிற்கும் அடிப்படையான அச்சத்தைத் தவிர்ப்போம். உயர்வின் உச்சத்தை எட்டுவோம்.
1,266 total views, 3 views today