நம்ம ஊரு அண்ணாத்த திரையுலகை அண்ணாந்து பார்க்க வைப்பாரு!
-மாதவி
அண்ணாத்த படத்தில் டி.இமான் இசையில் நாத இளவரசன் கே.பி.குமரன் நாதஸ்வரம்!
சினிமாப்பாட்டு கேட்காத பட்டிதொட்டி எங்கும் இருந்தால் சொல்லுங்கள். சரி என்னதான் அந்த சினிமா பாட்டு கேட்டாலும் அதனை நாதஸ்வரத்தில் வாசித்து கேட்க்கும் இன்பம் அலாதி. பல சமயங்களில் பாடலைவிடவும் நாதஸ்வரத்தில் கேட்பது இரட்டிப்பு சிறப்பாக இருக்கும்.
ஆலயங்களில் சுவாமி வீதி வலம் வர வடக்கு வீதியில் சனம் முந்தியடித்து இடம் பிடிப்பது எதற்காக. சினிமா பாட்டை நாதஸ்வரத்தில் கேட்கத்தான். தில்லானா மோகனாம்பாள் படத்தில் மதுரை பத்மசிறி பி. என். சேதுராமன். பி என். பொன்னுச்சாமி சகோதர்கள் வாசித்த கச்சேரியும், நலந்தானா பாடலும் , பொன்னூஞ்சல் படத்தில் ஆகாயப் பந்தலில்.. பாடலும் மனதைவிட்டு நீங்குமா.
மதுரை சேதுராமனுக்கு எந்த வகையிலும் எங்கள் நாதஸ்வர மேதை அளவெட்டி பத்மநாதன் குறைந்தவரல்ல.
ஆனால் சினிமா அது மந்திரக் கடல். அதில் தோய்ந்து எழுந்தால் உங்களை அண்ணாத்த ஆக்கிவிடும்.
இன்று ஈழத்தின் தலைசிறந்த நாதஸ்வர வித்துவான் கே.பஞ்சமூர்த்தியின் மகன் கே.பி.குமரன் அவர்கள் அகிலமெங்கும் அறிந்த நாதஸ்வர கலைஞராக திகழ்கிறார்.
தாய் மண்ணில் திருவிழாக்காலங்களில் ஒரே நாளில் பல கோவில்களில் ஓடி ஓடி வாசிப்பார். எங்கும் அவர் வாசிப்பு கேட்க கூட்டம் அலைமோதும்.
இந்திய சினிமா இசையில்
தடம்பதிக்கும் குமரன்
இவரது திறமையை கேட்ட இசையமைப்பாளர் டி. இமான், ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் பாடல் ஒன்றினை வாசிக்க அழைத்து பதிவும் செய்துள்ளார். ஈழக்கலைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில் டி. இமானுக்கே முதலிடம் கடந்த நவராத்திரி காலத்தில் இது அமைந்தது.
விஜய் சேதுபதி படத்தில் சந்தோஷ்நாராணன் இசையில் குமரன்.
அதனை தொடர்ந்து சந்தோஷ்நாராணன் இசையில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு பாடலுக்கும் நாதஸ்வரம் வாசித்து ஒலிப்பதிவு முடித்துள்ளார். சந்தோஷ்நாராணன் இல்லத்தில்; என்ஜாய் எஞ்சாமி. புகழ் சந்தோஷம் நாராயணனின் மகள் தீ, உணவு பரிமாற விருந்திலும் மகிழ்ந்துள்ளார்.
அது மட்டுமா நம்ம பெரிசு. அவர்தான் இளையராஜா, எங்க அண்ணாத்த கே.பி.குமரனை அழைத்து வீட்டில் சரஸ்வதி பூசையை கொண்டாடி உள்ளார்.
2018ம் ஆண்டில் கங்கை அமரனின் இசை நிகழ்ச்சியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடனும் இணைந்து பாடலுக்கு வாசித்தும் உள்ளார். இருந்தாலும் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு வாய்பளிக்கும் டி. இமானை ஈழத்தமிழ் இசைக்கலைஞர்கள் பாராட்டி மகிழவேண்டும்.
தீபாவளிக்கு வெளிவரும் என எதிர் பார்க்கப்படும் படம் அண்ணாத்த. நம் குமரனையும் சினிமா உலகம் அண்ணாந்து பார்க் வைக்கும் என வாழ்த்துவோம். 2016ம் ஆண்டு உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோவிலில் குமரன் பொன் ஒன்றுகண்டேன் பெண் அங்கு இல்லை… பாடலுக்கு வாசித்ததும் அராலி சிவன் கோவிலில் ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் வாசித்ததும் இன்றும் இளமையாய் இனிமையாய் கேட்கிறது. எதிர்காலத்தில் திரையுலகம் குமரனை திரைப்படத்தில் நேரடியாக நடிக்கவும் வாசிக்கவும் அழைத்தாலும் ஆச்சரியம் இல்லை. அந்த அளவிற்கு குமரன் அழகனும், சிறந்த நாதஸ்வரக் கலைஞனும் ஆவர்.குமரனுக்கு வெற்றிமணியின் இனிய வாழ்த்துகள்.
935 total views, 3 views today