சில இடங்களில் தகுதியை விட அதிகமாய், நமது தேவை முடிவுகளை எடுக்கிறது.
சேவியர்.தமிழ்நாடு
எங்கள் கல்லூரியில் ஒரு முறை கவின் கலை விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கலைவிழாவிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு அரசியல் தலைவரை தலைமை தாங்க அழைத்திருந் தார்கள். கலை கால் கிலோ என்ன விலை என கேட்குமளவுக்கு தான் அவரது கலையார்வம் இருந்தது. போதாக்குறைக்கு அவர் ஏகப்பட்ட பிகு பண்ண, அவரை தேடிப் போய் கை காலைப் பிடித்து சம்மதிக்கவைத்திருந்தார்கள். கல்லூரிக்குள் நுழையும் இடத்திலிருந்தே அரங்கம் வரை கட்டவுட்களும் பேனர்களும் வைத்து அவரை குஷிப்படுத்தினார்கள்.
‘ஏன் சார் ? அவருக்கும் கவின் கலை விழாவுக்கும் என்ன சம்பந்தம் ? எதுக்கு அவர்? “ என்று தமிழாசிரியரைக் கேட்டேன்.
“மெதுவா பேசுப்பா… காலேஜுக்கு டொனேஷன் தேவைப்படுது, அவரைக் கூப்பிட்டு ஐஸ் வெச்சு குளிப்பாட்டி அனுப்பினா தான் ஏதாச்சும் கிடைக்கும். அதனால தான் பிரின்சிப்பால் அவரை கூப்பிட்டிருக்காரு. வேற யாராச்சும் வந்தா, விழா நல்லா இருக்கும். இவரு வந்தா காலேஜ் நல்லா இருக்கும் ” என்று பஞ்ச் டயலாக்பேசி முடித்தார் தமிழாசிரியர்.
சில இடங்களில் தகுதியை விட அதிகமாய், நமது தேவை முடிவுகளை எடுக்கிறது. தலைமை தாங்குவோரெல்லாம் தலைமைத்துவம் உடையவர்கள் அல்ல, அவர்கள் தற்காலிக மரியாதைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் என்பது புரிந்தது. விழாக்களுக்குள் இருக்கும் அரசியல், விழாக்களின் அர்த்தத்தை மீறி சிரித்தது.
தலைமைக்காக சிலர் தகுதியைத் தேடுகிறார்கள், பலர் தேவைகளினால் உந்தப்படுகிறார்கள் எனும் எதார்த்தம் புரிய வந்தது. அதன்பின் காலம் செல்லச் செல்ல சிந்தனையின் சிலந்தி வலைகளில் யதார்த்ததின் பூச்சிகள் வந்தமரத் துவங்கின. கிரீடங்கள் எல்லாம் கிரீடங்கள் அல்ல எனும் உண்மையும், நாம் வணக்கம் செலுத்தாத பலரே வணக்கத்துக்கு உரியவர்கள் எனும் உண்மையும் இப்போது தெளிவாகிறது.
உலகம் எதிர்பார்ப்புகளின் அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது. மனிதர்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு ஒளிந்திருக்கிறது. ஒரு வேடனின் வலையைப் போல மனிதர்களின் புன்னகை விரிகிறது. அது சிலரைக் குறிபார்த்து விரிக்கப்படுகிறது. அந்த வலைகளின் வனப்பிலும், அதில் சிந்தப்பட்டிருக்கும் தானியங்களின் நினைப்பிலும் பலர் வலைகளுக்குள் விழுந்து விடுகிறார்கள். மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் பகிரப்படும் புன்னகையைப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகிறார்கள், உற்று நோக்குபவர்கள் வலைகளைக் கண்டு எச்சரிக்கையடைகிறார்கள்.
ஒரு விழாவுக்குத் தலைமை தாங்குவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை விட, யாரை தலைமை தாங்க வைத்தால் எனது தேவை நிறைவேறும் என்பதையே மக்கள் கவனத்தில் கொள்கிறார்கள். பதவியில் இல்லாத தலைவர்கள் சட்டென புறக்கணிக்கப்படுவதும், பதவியில் வந்து விட்டால் நிராகரிப்பில் கிடந்தவர்கள் நெருக்கமாவதும் சுயநல அரசியலில் வடிவங்கள் மட்டுமே. அதனால் இருக்கை கிடைத்தவுடன் நாம் இறைவனின் பிம்பங்கள் எனும் தற்பெருமைத் தலைகளை வளர்க்க வேண்டாம்.
அணைக்கப்பட்ட மைக்களின் முன்னால் வசவுகளே வாழ்ந்திருக்கும்
பெரும்பாலான விழாக்களில் நடக்கின்ற உரை வீச்சுகளிலும் எதிர்பார்ப்பின் பொருளுரைகள் நிரம்பியிருப்பதைக் காணமுடியும். தலைமை தாங்கிக் கொண்டிருப்பவரை விழா ஏற்பாட்டாளர் வானளாவப் புகழ்கிறார் என்றால், அதற்குக் காரணம் தலைமை தாங்குபவரின் தகுதியாய் இருக்க வேண்டுமென்பதில்லை. பேசுபவருக்கு ஏதோ காரியம் ஆக வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம். உயர்வு நவிர்ச்சி அணிகளையும், தற்குறிப்பேற்ற அணிகளையும் விழாக்களின் மைக்கள் கேட்டுக் கேட்டு சலித்திருக்கும். அணைக்கப்பட்ட மைக்களின் முன்னால் வசவுகளே வாழ்ந்திருக்கும்.
இங்கே விழாக்கள் என்பது வெறும் மகிழ்வின் நிகழ்வல்ல, ஒரு விளம்பர நிகழ்வு. அந்த விளம்பரத்தின் வெளிச்சத்தில் கணக்குகள் சரிசெய்யப்படுகின்றன. ஒரு பொருளாதாரப் பள்ளத்தாக்கு நிரப்பப்படலாம், ஒரு அங்கீகார கையொப்பம் கைவசமாகலாம், ஒரு புகழின் பதக்கம் பொறிக்கப்படலாம். அதுவே தகுதியான மௌனங்களை விட, பிரகாசமான சத்தங்கள் தேர்ந்தெடுக்கப்படக் காரணம்.
சில பத்திரிகைகளின் செய்திகளைப் பார்த்தாலும் நமக்கு இந்த நுட்பம் புரியும். சில தலைவர்கள்கொண்டாடப்படுவார்கள். அவர்களுடைய சாதனைகளின் பட்டியல் போலித்தனமாய் ஊதிப்பெருக்கப்படும். அவர்கள் ஆஜானுபாகுவாய் சித்தரிக்கப்படுவார்கள். எழுதுபவர்களின் திறமைக்கேற்ப, தலைவர்கள் தங்களுடைய கிரீடங்களை பளபளப்பாக்கிக் கொள்வார்கள். ஆனால் இவையெல்லாம் ஒருசுயநலத் தேடலின் பயணங்களே. கானகத்துப் பறவைகளெல்லாம் தனக்காகப் பாடுகிறது என நினைத்துக் கொள்ளும் தவளைகளைப் போல சில தலைவர்கள் சகதியில் சுகமாய்த் துயில்கின்றனர்.
சில சினிமா விமர்சனங்களைக் கேட்கும் போதும் சிரிப்பாக இருக்கும். அக்மார்க் வெட்டிப் படமாக இருக்கும், ஆனால் அதற்கு விமர்சனமோ வானளாவ தோரணம் கட்டும். நடிப்பின் உச்சமென்றும், குறியீடுகளின் அற்புதம் என்றும், அடுத்த தலைமுறைக்கான அற்புதம் என்றும் விமர்சனங்கள் விசிலடிக்கும். அதை நம்பி போய் படத்தைப் பார்த்தால் வெளியே வந்து தலைவலி மாத்திரை தேடவேண்டியிருக்கும். இப்படிப்பட்ட படத்துக்கு ஏண்டா இப்படி ஒரு விமர்சனம் என பார்த்தால், சுயநல முதலைகள் மூழ்கிக் கிடப்பதைக் காணலாம்.
படத்தின் தயாரிப்பாளரோ, வினியோகஸ்தரோ இவருக்குத் தேவைப்பட்டவராய் இருப்பார். அவர்களால் ஏதேனும் காரியம் ஆக வேண்டியிருக்கும். அதற்காகத் தான் அவர்களுடைய டுபாக்கூர் படத்தைக்கூட அற்புத காவியம் என கதை அளக்கிறார்கள். விமர்சனங்களையே விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பாராட்டுகளெல்லாம் உண்மையில் பாராட்டுகளல்ல, அங்கீகாரங்களெல்லாம் உண்மையில் அங்கீகாரங்களல்ல. பாராட்டுகளின் பின்னாலும், அங்கீகாரங்களின் பின்னாலும் எதிர்பார்ப்புகளின் தூண்டிகள் விழித்திருக்கின்றன. அதன் கூர்முனைகளில் நெளியும் புழுக்களின் நோக்கம் பெரிய மீனைப் பிடிப்பது மட்டுமே ! வசீகரங்களில் விழுந்து விடாத மீன்கள் அழுக்கைத் தின்றேனும் அழகாய் வாழ்கின்றன.
எனில் இது சரிதானா ?
சுயநலத்தின் தேடலுக்காக திறமையற்ற ஒருவரை திறமைசாலியாய் பிரகடனப் படுத்துவது சரிதானா ? பூனை ஒன்றை புலி என விளம்பரப் படுத்துவதும், அதற்கு சிறுத்தையின் சீற்றம் உண்டு என சிலாகிப்பதும் சரிதானா ? இவை இரண்டு விதமான கெடுதல்களைச் செய்கின்றன.
ஒன்று, உண்மையிலேயே இது புலி தான் போல என அப்பாவிகள் தங்கள் மனதில் ஒரு பிம்பத்தை வரைந்து கொள்கிறார்கள். அந்த பிம்பம் காற்றில் வரைந்த ஓவியம் போல கரைந்து விடுகிறது. இரண்டாவது, பூனைகளே “தாங்கள் புலிகள் தான் போல” என நினைத்துக் கொள்ளும் ஆபத்தும் உண்டு. இரண்டுமே ஆபத்தானவை தான்.
நமக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காக இல்லாத ஒன்றை இருப்பதாய் விளம்பரப் படுத்துவது நல்லதல்ல. முதலில் திறமையை வளர்த்துக் கொள்ளட்டும், அதன் பின் தலைமையின் இருக்கைகளை நோக்கி நகரட்டும்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு பரத நாட்டிய விழாவுக்குப் போயிருந்தேன். பல பரதக் கலைஞர்கள் விழாவைக் கண்டு ரசிக்க வந்திருந்தார்கள். பார்வையாளர் வரிசையில் அமர்ந்து நடனத்தை ரசித்திருந்தனர். சிலரோ நாட்டிய நிகழ்ச்சியின் நிறைவில் மேடையில் விழா நாயகர்களாய் அமர்ந்து உரையாற்றினார்கள். உரையாற்றியவர்கள் யாருமே நாட்டியக் கலைஞர்கள் அல்ல. விசாரித்துப் பார்த்தால் அவர்கள் ஸ்பான்சர் செய்தவர்களாம். யாருக்கு மரியாதை, கௌரவம் என்பது இங்கே பணத்தை வைத்து அளவிடப்படுகிறது.
எந்த விழாவுக்கு, யார் தகுதியானவர் என்பது ஒரு கணக்கு.
எந்த விழாவுக்கு யார் வந்தால் நமக்கு வருமானம் என்பது புது கணக்கு.
அதனால் தான் தலைமை இருக்கைகள் இன்றைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு வினியோகிக்கப் படுகின்றன. நிகழ்ச்சிகளின் தலைமை தாங்கவோ, சிறப்பு விருந்தினராய் இருக்கவோ கட்டணம் வசூலிக்கும் நிகழ்வுகள் கூட இப்போது உண்டு. இருக்கைகள், நமது கை இருப்புகளைக் கொண்டு தீர்மானிக்கப்படும் அவலம் இது.
காரியம் ஆகவேண்டுமெனில் கை கால் பிடிப்பார்கள், காரியம் ஆனபின்னே காலை வாரி விடுவார்கள் எனும் பழமொழி இந்த சூழலுக்கும் நச் எனப் பொருந்துகிறது.
இது தவறென வாதிடுபவர்களும், இது சரியே என நியாயப்படுத்துபவர்களும் எல்லா இடங்களிலும் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் ஒருவரைப் போலியாய்ப் புகழ்ந்து வேகமாய் வளர்வதை விட, நேர்மையாய்ப் பேசி நிதானமாய் நடப்பதே சிறந்தது !
1,039 total views, 2 views today