நான் வில்லனாக இருந்த கணப்பொழுது
-மாதவி – யேர்மனி
நாய்ப் பாசம்.
இந்த தலைப்பை வாசித்ததும் பலர் மனதில் தாய் பாசம் என்றுதான் உடன் நினைத்து கொள்வார்கள். சில சொற்கள் சேருமிடம் அவ்வளவு சக்திவாய்ந்தது. ஆனால் இங்கு நான் சொல்லவருவது நாய்மீது கொண்ட பாசம் பற்றியே.
நான் நாயைப்பிடித்து மடியில் வைத்து கொஞ்சுபவன் அல்ல. காரில் முன் சீட்டில் இருத்தி சுத்துபவனும் அல்ல. விடுமுறைக்கு செல்ல அதற்கும் ரிக்கற் எடுப்பவனும் அல்ல. ஏன் நாய் வளர்த்தவர் ஒருவர், தனது பென்ஸ்காரை விற்றாலும் வாங்க யோசிப்பவன் நான். இருந்தாலும் நாயில் பிடித்தது அதன் நன்றியுணர்வு. பிடிக்காதது அதன் மயிர். இந்த மயிர் பிரச்சினையே எனக்கு மேலாக இருக்கிறது.
இன்று பேரனின் பிறந்தநாள்.
இப்போ பென்ஸ்காரில் ஒரு பெரிய (German shepherd dog) யேர்மன் செப்பேட் நாய் வந்து இறங்கியது. நாய்க்கு பின்னால் டாக்டர் செல்வியும் பிள்ளைகள் மகனும் மகளும் வருகிறார்கள். நாய் ஓடி வந்து என்மீது பாய்ந்து முகர்ந்தது. நான் பயந்து விலகி ஓட செல்வி நாயைப் பிடித்துக் கொண்டா. பிள்ளைகள் வீட்டுக்குள் வர, செல்வி நாயை பின்னால் சென்று கட்டிவிடச் செல்கிறா. அவர்கள் எனது மகளின் குடும்ப நண்பர்கள்.
இது வரை அவர்களுக்காக காத்திருந்ததுபோல் அவர்கள் வந்ததும் கேக்கும் மேசைக்கு வந்தது. கொரோனா காலம் அதிகமாக ஆட்கள் இல்லை. நெருக்கமான உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே வந்திருந்தனர். கேக்வெட்டி பாட்டுப்பாடி முடிஞ்சு கேக் தீத்துவதும், அதனை உடனுக்கு உடன் படம் எடுத்து உலகெங்கும் அனுப்புவதுமாக இருந்தனர்.
உள்ளே இருந்த டாக்டர் செல்வியை காணவில்லை. பின் வாசலால் எட்டிப்பார்த்தால், நாயை மடியில் வைத்து தடவியபடி இருக்கிறா. எனது மகள் வாருங்களேன் உள்ளே என்றதும் மகனை அழைத்து நாயுடன் விட்டுவிட்டு உள்ளே வந்தா.
ஏன் வெளியில் இருக்கிறீங்கள் குளிரும் அல்லவா என்றேன். ஓம் குளிர்தான் நாய் தனிய அதுதான், அதோடு இருந்தேன் என்றா,செல்வி. மகன் இப்ப நாயுடன் இருப்பதை திரும்பி பார்த்து உறுதிப்படுத்தியபடி கேக்கை வெட்டி தீத்தினா. கொரோனாவுக்கு கழுவிய கையை, இப்போ நாய் நக்கினது போதும், என்று மேலும் கழுவவில்லை.
நாய் தனிய இருக்கிறது என்று துணைக்கு மாறி மாறி நிற்கும் இவர்கள், பெற்ற தாய் தந்தையர் தனிய என்று எண்ணுவார்களா? எனக்கு நாயை விட அவர்கள் மீதே வெறுப்பாக இருந்தது. கோவத்தில் இருக்கும் நாயின் முகத்திற்கும், இப்போது உள்ள எனது முகத்திற்கும் துளியும் வேறு பாடு இல்லை.
கல கல கல கல என்று சந்திரமுகி படத்தில் நாயோடுவரும் வேட்டையன் ரஜினியானேன். நான் அவர்கள் முகம் நேருக்கு நேர் காணும் போதெல்லாம் என்முகம் வேட்டையன் போலவே வேணும் என்றே வைத்துக்கொள்வேன். ஒரு வரை வார்த்தைகள் ஏதும் இல்லாமல் தாக்குவது எப்படி என்று, என்னால் வேட்டையன் என்ற பெயரில் ஒரு யூட்ரியூப் சனலே ஆரம்பிக்க முடியும். ஆனால் நான் நல்லவன் என்ற நம்பிக்கையை கெடுக்ககூடாது அல்வா.
திரும்பி பார்க்கிறேன் செல்வி நாய் பிள்ளைகள் யாவரும் பைசொல்லிக்கொண்டு வீடு போகிறார்கள். பிறந்தநாள் கொண்டாட்டம் ஓய்கிறது. மகள் வராதவர் வீடுகளுக்கு கேக் பலகாரம் பக்பண்ணி கொடுப்பதற்கு ஒழுங்கு செய்கிறா.
அப்பா வாருங்கள் இவற்றைக் கொடுத்துவிட்டு வருவோம் என்றா. நானும் மகளுடன் ஒவ்;வொரு வீடாகச் சென்று, நான் காரில் இருக்க மகள் கொடுத்திட்டு வந்தா.
இப்போ செல்வி வீட்டுக்கு முன்னால் கார் நிற்கிறது. நான் மகளைப் பார்த்து குலைத்தேன். என்ன விசரா அவர்கள் இப்ப வந்திட்டல்லவா போகினம். பிறகேன் அவர்களுக்கு என்றேன். சொல்லி முடியவில்லை வாசலில் செல்வி நின்று உள்ளே வாங்க அங்கிள் என்றா. ஒன்றும் செய்ய முடியாது மகளுக்கு பின்னே சென்றேன். என்னை அன்போடு இரு கரம் கூப்பி வரவேற்றார்கள் செல்வியின் அம்மாவும் அவர் கணவரும். தாய் வீல்செயரில் இருந்தபடி மகள் கொடுத்த கேக்கை வாங்கினா. சொறி மருமகன் வரமுடியவில்லை நான் தனிய என்று அவர் வரவில்லை. யாரோ ஒருவர் மாறி மாறி என்னோடு நிற்பினம். என்றா.
எனக்கு நாய் தனிய என்று செல்வி நடந்தவிதம்,என்னை எப்படி எல்லாம் மாற்றியது.
நாய் என்னை மோந்து பார்க்காமல் அப்போ என்னைக் கடித்துக் குதறியிருந்தாலும் தப்பில்லை என்று எண்ணத் தோன்றியது. எதுக்கு எடுத்தாலும் ஒரு மாற்றுக் கேள்வி கேட்டு கேட்டுப் பழகிப்போச்சு.
யாரும் ஊரிலை கோவிலுக்கு காசு கொடுத்தால். உந்த காசை ஏழைகளுக்கு கொடும்கலாமே என்பது. யாரும் ஏழைகளுக்கு உதவினால் இவர்கள் பவர்காட்ட என்பது. பிள்ளைகளுக்கு படிக்க உதவினால் அது பேஸ்புக்கில் படம் போட என்பது, இப்பிடியே என்வாழ்வு குதக்க கேள்விகளால் கும்மியடிக்குது.
இப்போது செல்வி வீட்டு நாய் என்மீது பாயாமல் என் காலுக்கு கீழ்வந்து குடைந்து படுக்குது. செல்வி சொல்கிறா இது யெர்மன் செப்பேட் ஒருக்கா மோந்து பார்த்தால் போதும், அவரை ஞாபகம் வைத்திருக்கும்.
இப்போ செல்வி மட்டுமல்ல யெர்மன் செப்பேட்டும் என்னை அங்கிள் என்றே அழைக்குது.
932 total views, 3 views today