குதிக்கால் எலும்புத் துருத்தல்

மூஞ்சையில் இடிக்காதவாறு நீட்டினார் ‘எக்ஸ்ரே’யை “பாருங்கோ வடிவா! குதிக்காலிலை எலும்பு வளர்ந்திருக்காம். என்ன செய்யிறது? வெட்ட வேணுமே” மூச்சு விட நேரமில்லாமல் பேசினார்.

அவரது குதிக்கால் எலும்பின் கீழ்ப்புறமாக பிசிறுபோல எலும்பு சற்று வளர்ந்திருந்தமை தெரிந்தது. குதிக்காலில் வலி என ஒரு மருத்துவரிடம் காட்டியபோது அவர் மருந்து மாத்திரைகள் கொடுத்து தசைப் பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்துள்ளார். பேச்சோடு பேச்சாக குதிக்கால் எலும்பிலும் சிறுவளர்ச்சி என்று சொன்னதால் வந்த வினை.

எக்ஸ்ரேயுடன் மருத்துவர் மருத்துவராக ஓடித் திரிகிறார். குதிக்காலின் பிரதான எலும்பு கல்கேனியம் எனப்படுகிறது. உடல் எடையைப் பெருமளவு தாங்கும் எலும்பு என்பதுடன் பாதத்தின் முக்கிய தசை நாரான குதிக்கால் சவ்வு (plantarfascia) இதனுடன் இணைந்துள்ளது.

இந்தச் சவ்வு மிகவும் பலமுள்ளதாக இறுக்கமானதாகவும் இருக்கிறது. இச் சவ்வுதான் பாதத்தின் அடிப் பகுதியில் உள்ள வளைவைப் பேண உதவுகிறது. அத்துடன் நடக்கும்போதும் ஓடும்போதும் உடலின் எடையானது பாதத்தில் சமச்சீராக தாங்கப்படுவதற்கும் உதவுகிறது.

இந்த கல்கேனியம் என்ற எலும்பின் கீழ்ப்புறத்தில் கல்சியம் படிவதையே (C) குதிக்கால் எலும்புத் துருத்தல் என்பார்கள். அந்த எலும்பின் முற்புறமாக அரைஅங்குல நீளம்வரை நீண்டு அது வளர்வதுண்டு. குதிக்கால் வலியென நோயாளிகள் சொல்லும்போது மருத்துவர்கள் எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்க்கும்போது இது தெரியவரும். இருந்தபோதும் வேறு காரணங்களுக்காக எக்ஸ்ரே எடுக்கும்போதுதான் பெரும்பாலும் இந்த எலும்பு வளர்ச்சி இருப்பது
தெரியவருகிறது. இது ஆபத்தான நோயல்ல. குதிக்கால் எலும்புத் துருத்தலால் அறிகுறிகள் எதுவும் பொதுவாக ஏற்படுவதில்லை. இருந்தபோதும் அவர்களுக்கு குதிக்காலில் இருக்கக் கூடும். நடத்தல் ஓடதல்,துள்ளல், நடை போன்றவற்றின்போது வலி தெரியவரலாம். இருந்தாலும் வலி ஏற்படுவதற்குக் காரணம் குதி எலும்புத் துருத்தல் அல்ல. அருகில் உள்ள குதிக்கால் சவ்வு தசைநாரில் அழற்சி ஏற்படுவதே வலிக்குக் காரணமாக பெரும்பாலும்
இருப்பதுண்டு.

காலையில் எழுந்து காலடி வைக்க ஆரம்பிக்கும்போது குதிக்காலில் சுளீரெனக்குத்துவதுபோல வலிக்கும். அதேபோல சற்று நேரம் ஓய்வாக உட்கார்ந்திருந்துவிட்டு நடக்க ஆரம்பிக்கும்போது அதே விதமாகக் குத்துவது போன்ற வலி ஏற்படும். ஆனால் இதே விதமான அறிகுறிகள் குதிக்கால் சவ்வு அழற்சியின் (Planterfascitis) போதும் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் எழுந்திருக்கும்போது குதிக்கால் சவ்வு மிகவும் இறுக்கமாக இருப்பதால் சிறிய அசைவுகள்கூட வேதனையை ஏற்படுத்துகின்றன. ஆயினும் சற்று நடந்த பின்னர் அதன் இறுக்கத்தில் சற்று தளர்ச்சி ஏற்பட ஆரம்பிப்பதால் வேதனை சற்றுக் குறையும். இதனால்தான் காலை எழுந்து நடமாட முன்னர் பாதத்தை தங்கள் கைகளால் மசாஜ்செய்யும்படி குதிக்கால் வலி உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவர்.

குதிக்கால் சவ்வு அழற்சி மற்றும் குதிக்கால் எலும்புத் துருத்தல் அறிகுறிகள் ஒரேவிதமாக இருப்பதால் பலரும் ஒன்றை ஒன்று குழப்பிக் கொள்வதுண்டு. இருந்தபோதும் குதிக்கால்சவ்வு அழற்சி உள்ளவர்களிடட 70 சதவிகி தமானவர்களுக்கு குதிக்கால் எலும்புத் துருத்தல் இருப்பதைத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அதே நேரம் பாதத்தில் எந்த வலிகளும் இல்லாதவர்களில் 70 சத விகிதமானவர்களுக்கு குதிக்கால் எலும்பு துருத்தி இருப்பதும் உண்டு.

குதிக்கால் எலும்புத் துருத்தல் ஏன் ஏற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியாது. இதுதிடீரெனத் தோன்றுவதில்லை. படிப்படியாகவே வளர்கிறது. பாதத்தில் உள்ளதசைகளுக்கும் சவ்வுகளுக்கும் வினைப்பளு (Strain) அதிகமாதலால் அவை நீளவாக்கில் இழுபடுகின்றன. இதனால் அவை எலும்பில் பற்றியிருக்கும் மெல்லிய சவ்வுகளில் நுண்ணிய கிழிவுகள் ஏற்படுகிறது. இவற்றின் தொடர்ச்சியாகவே அவ்விடங்களில் எலும்பு துருத்தி வளர்கிறது என நம்பப்படுகிறது.

கடுமையாக ஓடுவது துள்ளுவது போன்ற பயிற்சிகளைச் செய்யும் விளையாட்டு வீரர்களில் இதன் காரணமாகவே
அதிகளவில் குதி எலும்பு துருத்தல் பிரச்சனை காணப்படுகிறது. குதி எலும்பு துருத்தி யாரில் அதிகம் ஏற்படுகிறது ஏற்கனவே குறிப்பட்டது போன்ற கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு.
நடையின் இயல்பில் பாதிப்பு உள்ளவர்களுக்கும் அவ்வாறே ஏற்பட வாய்ப்புண்டு. நடையின் இயல்பு என்றால்
என்ன? பொதுவாக நாம் நடக்கும்போது இரண்டு பாதங்களிலும் உடற் பாரமானது ஒரே விதமாக விழுமாறு நடக்கிறோம். ஒரு கால் சற்றுக் குட்டையாக அல்லது பாதத்தில் வளைவுகள் சீரற்றோ இருந்தால் ஒரு பாதத்தில் அதிக தாக்கம் ஏற்படும். இது எலும்பு துருத்தலுக்கு காரணமாகலாம்.

அதேபோல ஒரு பக்க முழங்காலில், பாதத்தில், அல்லது தொடையில் வலியிருந்தாலும் நாம் எம்மையறியாது
பாரத்தை மற்றக் காலில் அதிகம் பொறுக்கவைப்போம். இதுவும் காரணமாகலாம். கடுமையான தரைகளில் ஓடுவது துள்ளல் நடைபோடுவது போன்றவையும்காரணமாகலாம். பொருத்தமற்ற காலணிகள் மற்றொருமுக்கிய காரணமாகும். தேய்ந்த காலணிகளும் அவ்வாறு எலும்புத்துருத்தலுக்கு வழிவகுக்கலாம்.

உடல் எடை அதிகமான குண்டு மனிதர்களுக்கும் வாய்ப்பு அதிகமாகும். வயது முதிரும்போது குதிக்கால் சவ்வினது நெகிழ்வுத்தன்மை குறைந்து போகிறது. அத்துடன் பாதத்திற்குப் பாதுகாப்பைத் தரும் கொழுப்பின் அளவு குறைந்து போவதும் காரணமாகலாம்.

நீரிழிவு நோயுள்ளவர்களின் பாதத்தின் நரம்புகளும் தசைகளும் பவீனமடைவதாலும் ஏற்பட வாய்ப்புண்டு. வேறு சிலருக்கு பாதத்தின் வளைவு அதீதமாக இருப்பதுண்டு. இவர்களுக்கும் குதிக்கால் எலும்புத் துருத்தல் ஏற்படக்கூடும்.
சிகிச்சை: குதிக்கால் சவ்வு அழற்சி மற்றும் குதிக்கால் எலும்பு துருத்தல் இரண்டும் வேறு வேறான நோய்களாக இருந்தபோதும் அவை ஏற்படுவதற்கான காரணங்களும் அவற்றின் அறிகுறிகளும் ஒரே விதமானவைதான் எனவே சிகிச்சையும் ஒரே மாதிரியானதுதான்.

1,828 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *