ஆன்று தொய்யில் என வரைந்தது இன்று Tattoo கலையாக மாறியுள்ளது.


-கௌசி.யேர்மனி.

தோல் பேர்த்திய உடலிலே வகைவகையான வண்ணங்களில் பிடித்தவர்களின் உருவங்கள், காதலர்களின் பெயர்கள், குறியீடுகள் என்று உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு வலம் வருகின்றவர்களை இன்று உலகம் முழுவதும் காணுகின்றோம். காதல் தோல்வி ஏற்பட்டுவிட்டால், பச்சை குத்திய காதலியின் பெயரை அழிக்க முடியாது அதற்கு மேலே கீறிக் கிழித்துக் கொண்டு வாழுகின்றவர்களையும் அறிகின்றோம்.

இது இன்று நேற்று வந்த வழக்கமில்லை. எனது பாட்டியினுடைய கையிலே ஒரு பச்சை குத்தப்பட்டிருந்தது. இதைத்தான் அழிக்கமுடியாதே! குத்தும் போது இத்தனை வேதனையுடன் இதன் குத்தத்தான் வேண்டுமா என்று கேட்டதற்கு இறந்த பின் கடவுள் எங்களிடம் எனக்கு என்ன கொண்டு வந்தாய் என்று கேட்டால் காட்டுவற்காகத்தான் பச்சை குத்துவார்கள் என்று சொன்னார். அக்காலத்தில் குறவர் என்றொரு இனத்தவர்கள் மார்பு, கை, கால், முன்னங்கை, புயம் போன்ற இடங்களில் பச்சை குத்துவார்கள். அவர்கள் மஞ்சள்தூளையும் அகத்திக்கீரையையும் தீயிலே எரித்துக் கரியாக்கி அக்கரியை நீரிலே குழைத்து மையை தயாரிப்பார்கள். இந்த மையை கூர்மையான ஊசி அல்லது கத்தியால் தொட்டுத் தொட்டுத் தோலில் குத்திக்குத்தி உருவங்களை வரைவார்கள். ஒருமுறை குத்தினால், குத்திய பச்சை வாழும் காலம் வரை எம்முடன் தொடர்ந்து வரும்.

இப்பச்சைக் கலாசாரத்தின் முன்னோடிகளாக ஜப்பான் சுதேசிகளான அயனுகளும் நியூசிலாந்தின் பழங்குடியினரான மவோரிகளும் காணப்படுகின்றார்கள். அவர்களிடமிருந்து மங்கோலியரிடமும் அங்கிருந்து ரோமரும் கிரேக்கரும் உலகமெங்கும் பரவவிட்டனர் என்று சொல்லப்படுகின்றது.

ஜெர்மனியக் கப்பல் ஒன்று ஒஸ்ரியா வந்து அங்கிருந்து உலகச்சுற்றுலா மேற்கொள்வதற்காக சென்றபோது ஐஸ் இல் உறைந்து கிடந்த ஒரு உடலை 1991 புரட்டாதி மாதம் 19 ஆம் திகதி ötztal Alps மலைத்தொடரில் கண்டெடுத்தனர். சுருங்கி வற்றிப்போன இந்த உடலை ஒஸ்ரியா பரிசோதனைக் கூடத்திலே வைத்து உலக மருத்துவர்கள் எல்லோரும் ஆராய்ச்சி செய்தபோது இந்த உடம்பானது கி.மு 3350 – 3105 காலப்பகுதி எனக் கண்டறியப்பட்டது. அத்துடன் அந்த உடலிலே 61 இடங்களில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இது கண்டெடுக்கப்பட்ட இடம் இத்தாலிக்கு அருகாமையில் இருந்ததனால், இந்த உடல் எங்களுடையது என்று உரிமை கொண்டாடிய இத்தாலியர்கள், அந்த உடலை எடுத்துக் கொண்டு போய்த் தம்முடைய அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்கள்.

இவ்வாறு உலகமெங்கும் பரந்து கிடக்கும் இந்தப் பச்சை குத்துதல் என்னும் கலை பழந்தமிழ் இலக்கியங்களிலே தொய்யில் என்று அழைக்கப்பட்டது. இந்தத் தொய்யில் அழிக்கக் கூடியது. சந்தனம், குங்குமம், செம்பஞ்சுக் குழம்பு, பச்சைக் கருப்பூரம் ஆகியவை தொய்யில் எழுதப் பயன்பட்ட மூலப்பொருட்களாகக் காணப்பட்டன. சித்திரங்கள் போன்ற உடலோவியம் வரையப்படும். காதலனோ கணவனோ கூடுதலுக்கு முன் பெண்ணின் மார்பின்மீதும், தோளின் மீதும் இத்தொய்யில் வரையும் மரபு அக்காலத்தில் இருந்தது.

நக்கீரனாரின் அகநானூற்றுப் பாடலில் தலைவிக்குப் பொட்டிட்டு, மலர்களின் மகரந்தத்தை மார்பில் அப்பி, தொய்யில் வரைந்து மலர் பரப்பிய படுக்கையில் பகற்பொழுதிலும் தலைவன் கூடியிருந்ததாகவுள்ளது. இப்பொழுதுபோல் அக்காலத்திலும் பல வண்ணங்களில் வரையப்பட்டிருந்தது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியின் தோள்களில் இருந்த தொய்யில்; வெள்ளை நிறத்தில் இருந்ததாக நெடுநல்வாடையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களைத் தழுவுவதிலும் காண்பதிலும் நுகர்வதிலும் இன்பம் காணும் ஆண்கள் பலவகை நறுமணம் கலந்த தொய்யிலைப் பெண்கள் மார்பு, மேனிகளில் வரைவது வழக்கமாக இருந்தது.

கண்ணகியின் மார்பிலே அவளுடைய பணிப்பெண்கள் ஏன் பெரியமுத்து மாலையைச் சூட்டியுள்ளார்கள். தொய்யில் எழுதினால் போதுமே என்று ஓரிடத்தில் கோவலன் கூறுகின்றான்.
~~அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப,
பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ,
என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்:
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ ? உள நாள்,
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதுஅரோ,
சென்ற இளமை தரற்கு!

காதலி காதலனுக்கு அறிவுரை கூறுகின்றாள். தண்ணீர் உண்ணத் தாகம் எடுப்பது போல, பொருள் தேடவேண்டும் என்னும் ஆசை துரத்துகிறது என்பதற்காக காதலனே என்னைப் பிரிந்து வாழ எண்ண வேண்டாம். விருப்பத்தோடு என் தோளில் தொய்யில் எழுதினாயே அதை எண்ணிப்பார். அது உன் மார்பில் கோடுகளாகப் பதிந்துள்ளது அதையும் எண்ணிப்பார். சென்றவர்கள் எல்லாம் கொண்டு வரப் பொருள் கொட்டிக் கிடப்பதில்லை. அதேபோல் பொருளீட்டாதவர்கள் உண்ணாமல் பட்டினி கிடப்பதுமில்லை. இளமையும் காமமும் இணையப் பெற்றவர் விரும்பும் செல்வம் வேறேதாவது இருக்கிறதா? உயிரோடு உள்ள வரையில் ஒரு கையால் துணைவரைத் தழுவிக்கொண்டு, மற்றொரு கையால் கூறுபட்டுக் கிடக்கும் ஆடையை உடுத்திக்கொள்ளும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை. இளமை போய்விட்டால் திரும்ப வராது. எனவே இளமையைப் பாதுகாத்துக் கொள் என்கிறாள்.

பாகுபலி படத்திலே கதாநாயகன் கதாநாயகிக்குத் மயில் இறகால் தொய்யில் வரைவதை அழகாகக் காட்டியுள்ளார்கள். நற்றிணை, கலித்தொகை, மதுரைக்காஞ்சி, சீவகசிந்தாமணி;, மேருமந்திரபுராணம், கம்பராமாயணம்;, அம்பிகாபதிக் கோவை போன்ற பல இலக்கியங்களில் பேசப்பட்ட தொய்யில் கலையானது 15ஆம் நூற்றாண்டிற்குப்பின் அழிந்து போனது. பின் பச்சை குத்துதலாக உருமாறி பின் இன்று Tattoo கலையாக மாறியுள்ளது.

1,987 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *