ஆண்மை தவறேல்
காதலும் வீரமும் கொஞ்சி விளையாடும் சங்கத் தமிழ் தந்த வழி நின்று ஆண், பெண் என்ற அற்புத சொற்களுக்குள் கொண்டாடிக் கொண்டிருக்கிறது அகிலம். இதனைச் சார்ந்து ஆண்மை என்ற வார்த்தைக்கு பொருள் தேட முயன்றால் சற்றே கெடும். ஆண் என்ற உயிரியல் சார்ந்த தனிமனித குறிப்பில் இருந்து ஆண்மை என்ற பரந்த விழிப்புணர்வு வேறுபடுகிறது. அச்சம் தவிர் என்று ஆரம்பித்த மாத்திரத்திலேயே , பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் இரண்டாவது அடியாக வருகிறது ” ஆண்மை தவறேல் ” .
மையத்தில் சிம்மாசனமிட்டு 360 பாகைகளும் விரிந்து பரவிய பாரதியின் பார்வையில் “ஆண்மை ” என்ற ஒற்றைச் சொல்லில் பலவகைத் தன்மைகள் பரிமளிக்கின்றன.
“பக்தியினாலே கல்வி வளரும் – பல
காரியம் கையுறும் வீரியம் ஓங்கிடும்
அல்லல் ஒழியும் – நல்ல
ஆண்மை உண்டாகும் “
பக்தியினாலே கிடைக்கப்பெறுகின்ற மகத்தான விடயங்களுள் ஒன்றாக ” ஆண்மை ” யை பட்டியலிடுகிறார் பாரதி. இதனால் ஆண்மை என்பது எத்தனை தூய்மையான உயரிய விடயம் என்ற முதல் படியை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்.
“ அஞ்சேல் அஞ்சேல் என்று கூறி எமக்கு நல்
ஆண்மை சமைப்பவனை ஸ்ரீ பல வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனை – பெருந்திரள்
ஆகிப் பணிந்திடுவோம் – வாரீர்
அச்சம் தவிர்த்தால் ஆண்மை விளையும் என்று தீர்க்கமாக கூறும் அக்கினி பகவான் பாட்டின் அடிகளை நோக்குமிடத்து, அச்சம் இல்லாத இடத்தில் ஆண்மை கிடைக்கும் என்றால் , ஆண்மையை வீரம் என்று கருதலாமா ? என வினவத் தோன்றுகிறது . ஆமாம் பல வினாக்களை எழுப்பி விழிப்புணர்வைத் தந்து வினாக்களுக்கு தெளிவுற விடைகளையும் தந்து வினவக் கண் விழித்தவன் அல்லவா பாரதி.
“தொல்லை தீர்த்து உயர்வு கல்வி – வெற்றி
சூழும் வீரம் அறிவு ஆண்மை கூடும்”
என யோக சித்தியில் வரும் அடிகளை பார்க்கும் இடத்து வீரமும் ஆண்மையும் ஒன்றில்லை என்ற விடையும் கிடைக்கிறது .
“நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நலகீர்”
அப்போ ஆண்மையை வலிமை என்று கொள்ளலாமா ? இது வெறும் உடல் வலிமை அல்ல மன வலிமை . துன்பத்தையும் சோர்வையும் அச்சத்தையும் ஓட்டுகின்ற மன வலிமை .
” துன்பம் என்னும் கடலைக் கடக்கும் தோணி அவன் பெயர்
சோர்வென்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர்
அன்பென்னும் தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன் பெயர்
ஆண்மை என்னும் பொருளைக் காட்டும் அறிகுறி அவன் பெயர் “
பாலகங்காதர திலகனை போற்றி பாடும் வாழ்க திலகன் நாமம் என்பதில் ஆண்மை என்னும் பொருள் என்ன என்று பாரதி கருதும் விடயத்தில் பெரும் உண்மை புலப்படுகிறது. துன்பம் என்பதை துறத்தலும், சோர்வு என்னும் பேயை துரத்தலும், அக்கணத்தில் பூத்த பொலிவோடு மின்னும் மலர் போல எக்கணமும் அன்பெனும் தேன் ஊறித் ததும்பும் தன்மையும் ஆண்மைக்கான அறிகுறிகளாய் முன்வைக்கிறார்.
“அன்பளித்து விட்டாய் காளி
ஆண்மை தந்து விட்டாய் “
அன்பொன்றே தன் தொழிலாகி , மொழியாகி , மெய்யாகி, உயிராகி , உணர்வாகி, தெய்வமுமாகி கிடந்த பாரதியின் ஏகாந்தத்தில் ஆண்மை என்பதும் அன்பினதே.
“மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்குரைச் செய்வேன்
ஞானம் ஓங்கி வளர்ந்திடச் செய்வேன்
நான் விரும்பிய காளி தருவாள்”
ஞானத் துணிவு கொண்ட தன்மை ,பிறர் துயர் தீர்க்கும் தன்மை,
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட தன்மை , மென்மையில் மேன்மையான தன்மை ஆண்மை. பக்தி , வீரம், செம்மை , தெளிவு, அறிவு, கல்வி, வல்லமை, வலிமை , உறுதி , தன்னம்பிக்கை, பொதுநலம், போன்றவற்றின் சேர்க்கையாய் பக்தியிலும், சித்தியிலும் , புத்தியிலும் சத்தியத்தை ஏற்றி நின்று நேர்மையாக இருக்கும் வீரம் ஆண்மை.
சுருங்கக்கூறின் , பேரன்பாகி இருத்தலே ” ஆண்மை “
“அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி”
பாரதி வாழ்ந்த விடுதலை வேட்கை நிரம்பிய காலத்தில், அந்நியர் ஆட்சியில் தாய் மொழி மங்கிய காலத்தில் தமிழை உயிர்ப்பித்து ஓட்டம் அளித்து பாரத தேசத்திற்கும் பாமர மக்களுக்கும் யாவரும் சமம் என எண்ணற்ற உயிர் கவி தந்து , உலகத்தை தூக்கி நிறுத்தவல்ல நெம்புகோலாக எழுதுகோலை ஆக்கி பெண்மை வாழ்க என்று கூத்திட்ட பாரதியின் ஆண்மையை கண்டு வியந்து சொல்லத் தோன்றுகிறது ” எத்தனை கோடி இன்பம் வைத்தாய் “
2,561 total views, 3 views today