மரக்கொப்பை ஒருபோதும் நம்பி வாழாத பறவைகள்
-கோகிலா மகேந்திரன்- இலங்கை
கடந்த இரண்டு வருடங்களாகவே கோவிட் 19 மனித குலத்தைப் பூச்சாண்டி காட்டி வருகிறது. 5 மில்லியனுக்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தி இன்னும் அடங்காமல் ,”அந்த நாட்டில் குறைகிறது.இந்த நாட்டில் கூடுகிறது.புதிய ”மாறி” வீரியத்துடன் வந்துவிட்டது ”என்று தன்னைப்பற்றியே மனித இனம் எப்போதும் நினைக்கும் நிலையை உருவாக்கி வலம் வந்துகொண்டிருக்கிறது. அது உருவாக்கப் போகும் நீண்ட காலப் பின்விளைவுகள் பற்றி ஒருவருக்கும் தெரியாது. ஆயினும் சமூக விலங்கான மனிதரைத் தனிமைப்படுத்தி அது ஏற்படுத்தியிருக்கும் உளத்தாக்கம் பற்றிப் பல ஆய்வுகள் வரத் தொடங்கிவிட்டன.
மரக்கொப்பில் ஆனந்தமாக அமர்ந்திருக்கும் அந்தப் பறவையைப் பாருங்கள். கொப்பு முறிந்துவிடும் என்று ஒருபோதும் அது பதற்றப்பட்டதுமில்லை. வேதனைப் பட்டதுமில்லை. ஏனெனில் அது மரக்கொப்பை ஒருபோதும் நம்பி வாழ்ந்ததில்லை. தன் சொந்த இறக்கைகளையே நம்பியிருக்கிறது. கொப்பு முறிந்தால் இலகுவாக வேறோரிடம் மாறிவிடும்.நோய் வந்தாலும் மருத்துவர்களையோ, மருந்துகளையோ,வக்சீன்களையோ நம்பியதில்லை.அடிப்படைத் தேவைகளும் தானும் என்று இயல்பாக வாழ்ந்துவிட்டுப் போய்விடும்.
மகாத்மா காந்தியின் வாழ்வு பற்றி எழுதுகிற மு.வ அவர்கள் பின்வருமாறு கூறுவார் .”என்ன இடையூறு வந்தாலும் தளராமல் என்ன வரினும் வருக என்று அஞ்சாமல் வாழ்வதே வாழ்க்கை ” மனிதனோ கூர்ப்பின் உச்ச விலங்கு. மூளையின் அபரிமித விருத்தி காரணமாகப் பல விடயங்களைக் கண்டுபிடித்தான்.பேராசைப் படுகிறான் பயன் படுத்துகிறான். உளவியலிலும் பலவிடயங்களைப் புதிது புதிதாக அறிந்திருக்கிறான்.
மிகக் கஷ்டமான நிலைமைகளில் பயன்படக்கூடிய முதலுதவி முறைகளில் சில இவை.
1.உடல் வெப்பநிலையைக் குறைத்தல்.
2.உடலுக்கு அதிக வேலை கொடுத்தல்.
3.ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்தல்
4.தசைத் தளர்வுப் பயிற்சி செய்தல்
நெருக்கீடு கூடிய ஒரு காலகட்டத்தில் சொல்லக்கூடிய அல்லது நினைக்கக் கூடிய வசனங்களாகச் சிலவற்றைப் பார்க்கலாம்.
ழூஇப்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன்
ழூஇந்தநிலை எப்படியோ மாறும் என்று தெரியும்
ழூஎனக்குள் இப்போது நடப்பது – இந்த எண்ணங்கள்,உணர்வுகள் – மிக இயல்பான நெருக்கீட்டுஎதிர்த்தாக்கம் மட்டுமே.
ழூஎனது உயிருக்கு இப்போது எந்த ஆபத்தும் இல்லை
ழூ.நான் சுவாசிக்கப் போதிய வளி இருக்கிறது இப்போது
இப்படி வலிந்து நேர் எண்ணங்களை வரவழைத்துக் கொண்டாலும் மறை எண்ணங்கள் தாமாக விரைந்து ஓடி வரத்தான் செய்யும். அவற்றை எடுத்துக் கையாள்வது நரம்புத் தொகுதியின் வேலைதானே !.அப்படியானால் அந்த மறை எண்ணங்களை என்னதான் செய்யலாம்? அவற்றைப் பரவலடையச் செய்யலாம். உதாரணமாக ”என்னால் எதுவும் முடியாது ”என்பது எண்ணமாயின் முதலில் அந்த வசனத்திற்கு ஒரு மெட்டுப் போட்டுப் பாடிக்கொண்டு திரியலாம்.காலப்போக்கில் அதை ”என்னால் எதுவும் முடியுமே ‘என்று மாற்றிப் பாடிப் பார்க்கலாம் குறிப்பிட்ட எண்ணத்துக்குப் பெயர் வைப்பதும் அப்பெயரால் அழைப்பதும் இன்னொருவழி.மேலே சொல்லப்பட்ட எண்ணத்துக்கு ”முடி ”என்று பெயர் வைக்கலாம்.
”முடி ”இப்போது என் மனதில் வந்திருக்கின்றார்
அந்த எண்ணம் வரும் நேரங்களை அடையாளம் கண்டு,”முடி ”இப்போது என் மனதில் வந்திருக்கின்றார் என்று நினைத்துச் சிரித்துக் கொள்ளலாம். அதே எண்ணத்தை ”புதிதளித்தல் ”முறையில் நாடகமாக்கலாம். வெவ்வேறு விலங்குகளின் ஒலிகளோடு குறித்த வசனத்தை இணைத்துச் சொல்லி ரசிக்கலாம்.இவ்வாறெல்லாம் செய்யும்போது எண்ணம் செறிவும் வலிமையும் குறைந்து பரவலடைந்துவிடும்.
கடந்த காலத்தில் எம்மால் முடியுமாயிருந்த சிறுசிறு விடயங்களை எண்ணிப் பார்க்கலாம் .பின்னர் முடியாது என்று நினைத்ததைச் சிறு சிறு இலக்குகளாக்குவோம்.அவற்றை மெதுவாகச் செய்து முன்னேறும்போது எம்முடனே மட்டும் எமது ஒப்பீடுகளை வைத்துக்கொள்வோம். கடந்தகாலச் செயற்பாடுகளில் எமக்கு உதவியோருக்கு மனம் திறந்து நன்றி சொல்வோம் இவை எல்லாம் கோவிட் கால உள ஆரோக்கிய மேம்பாட்டில் உதவும். செய்துதான் பார்ப்போமே!
1,404 total views, 3 views today