ஆமை புகுந்த வீடும், இனவாதம் பிடித்த நாடும்
எழுபதுகளில் தமிழ் இளைஞர்கள் தனி நாடு ஏன் கேட்டார்கள் என்பதற்கான காரணத்தை அறியாத அல்லது அறிய விரும்பாத இளம் தலைமுறைக்கு இந்த தலையங்கம் கன பாடங்களை சொல்லித் தரும். இப்படி ஒரு தலையங்கத்தை பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட எண்ணக்கருத்தே இக்கட்டுரையாகும்.
1948ல் காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனையே ஆட்சியாளர்களை நிர்ணயிக்கும் பிரதான மூலகாரணியாகியது.
ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஆளும் ஐதேகவில் இருந்து பிரிந்து வந்த SWRD பண்டாரநாயக்க 1957ல் ஆட்சிக்கட்டிலேற எடுத்த ஆயுதம் பொருளாதார வளர்ச்சியல்ல, ஆட்சியேற்றதும் 24 மணித்தியாலங்களில் சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்குவேன் என்ற அறைகூவல் தான்.
சிங்கள இனவெறி அலையில் ஆட்சியை பிடித்தத்தும், பண்டா தமிழர்களிற்கும் முழு நாட்டிற்கும் தான் இழைத்து விட்ட பெருந்தவறை உணர்ந்து, தந்தை செல்வாவுடன் அதிகாரப் பரவலாக்கலிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். உடனே ஐதேகவின் JR ஜெயவர்தன அதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து கண்டிக்கு யாத்திரை போய் அந்த ஒப்பந்தத்தை கிளிந்தெறிய வைத்தார்.
பிறகென்ன, ஐதேகவும் சுகவும் மாறி மாறி சிங்கள பௌத்த பேரினவதாத சிந்தனைகளில் சவாரி செய்து, தமிழர்களை அடக்குவதில் கவனம் செலுத்தி, பிரிட்டிஷார் விட்டுச் சென்ற நாட்டின் சிறந்த சமூக பொருளாதார அடித்தளத்தையே ஆட்டம் காண வைக்கத் தொடங்கினார்கள்.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 17 ஆண்டுகளிற்கு பின்னர் விடுதலையடைந்தது இலங்கைக்கு அண்மித்த குட்டித் தீவான சிங்கப்பூர். சிங்கப்பூர் சுதந்திரம் அடையும் போது அதன் நிலைமை படுகேவலம். சிங்கப்பூரை இலங்கையை போல் ஆக்கிக் காட்டுகிறேன் என்று தான் சிங்கப்பூரின் அதிபர் லீ குவான் யூ சபதமெடுத்து ஆட்சிக் கட்டிலேறினார்.
சிங்களத் தலைவர்களை போலல்லாமல், மலாய், தமிழ், ஆங்கிலம், சீனம் என்று சிங்கப்பூரின் பிரதான மொழிகளிற்கு சம அந்தஸ்து வழங்கி, அனைத்து இனத்தவரையும் பொருளாதார வளர்ச்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி லீ நெறிப்படுத்தினார்.
தமிழர்களின், குறிப்பாக பிரிட்டிஷார் காலத்தில் சிங்கப்பூரிற்கு அழைத்துவரப்பட்ட, யாழ்ப்பாணத் தமிழர்களின் மூளை வளத்தை, லீயின் சிங்கப்பூர் அரசு நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது.
2017ல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் “Jaffna holds special significance for Singapore” என்று சொன்னதும், சிங்கப்பூரின் முதலாவது வெளிவிவகார அமைச்சராக (1965-80) கடமையாற்றிய சின்னத்தம்பி ராஜரத்தினத்தின் குடும்ப இல்லத்திற்கு அவர் சென்றதும், யாழ்ப்பாண தமிழர்கள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்கை அந்த நாடு இன்றும் மறவாமல் இருப்பதற்கான அடையாளங்களே.
ஆனால் இலங்கையிலோ, தமிழர்களை அடித்து விரட்டுவதிலே ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தினார்கள். தென்னிலங்கையில் கலவரங்களை தூண்டியும், பாரம்பரிய தமிழ் நிலங்களில் அடாத்தாக சிங்களவர்களை குடியேற்றியும், தரப்படுத்தலால் பல்கலைக்கழகங்களில் இருந்தும், சிங்களத்தை கட்டாயமாக்கி அரச சேவையில் இருந்தும் தமிழர்களை சிங்கள அரசாங்கங்கள் அடித்து விரட்டத் தொடங்கின.
சிங்களவர்களினம் அடிவாங்கி முதலில் ஓடத் தொடங்கிய தமிழர்கள், பின்னர் நின்று நிதானித்து, ஆயுதம் தூக்கி திருப்ப அடிக்கத் தொடங்கிய வரலாறு தான் தமிழர்களின் ஆயுதப் போராட்டம்.
ஆற்றல் மிகு அந்த தலைமுறைகளின் ஒரு பகுதி, காடுகளில் இருந்து போராடத் தொடங்க, இன்னுமொரு பகுதியினர் வெளிநாடுகளிற்கு புலம்பெயரந்து போராட்டத்திற்கான நிதிவளத்தையும் சர்வதேச ஆதரவையும் சேர்க்கத் தொடங்கினார்கள்.
இன்னுமொரு வளமாக சொல்லப் போனால்,அரசியல் ஆதாயத்திற்காக பேரினவாத சிந்தனையை கிளப்பி விட்டு, சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்குவதில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கிய இலங்கை ஆட்சியாளர்களில் நம்பிக்கையிழந்த ஆற்றல்மிகு தமிழ் இளைஞர்கள்,
எங்கட பாட்டை நாங்க பார்க்கிறோம், எங்களை தனிய போக விடுங்கோ, நீங்க எக்கேடாவது கெட்டு போங்கோ என்று தான் தனிநாட்டிற்கான போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்று சொல்லலாம்.
அந்த ஆற்றல் மிகு தமிழ் இளைஞர்கள் தங்கள் நோக்கத்தை அன்று அடைந்திருந்தால்,
இன்று சிரிலங்காவை விட்டு ஓடும் சிங்கள இளைஞர்கள், வவுனியா எல்லையிலோ இல்லை வாழைச்சேனை பாலத்திலோ தமிழீழத்திற்குள் வர விசா கேட்டு கியூவில் நின்றிருப்பார்கள்
இலங்கையின் இன்றைய பொருளாதார வங்குரோத்து நிலைக்கு அடித்தளமாக இருப்பது அவர்களது பேரினவாத சிந்தனை தான். இதனை சிங்கள சமூகம் உணர்ந்து தன்னைத் தானே திருத்தாத வரை இலங்கைத் தீவு அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டே இருக்கும். ஆமை புகுந்த வீடும், இனவாதம் பிடித்த நாடும்
1,115 total views, 2 views today