லண்டனில் உலகக் கலைஞர்களுக்கான விருது விழா!

கிரிபின் கல்லூரி சர்வதேச கல்விப் பேரவை நுண்கலைத் தேர்வு ஆணையம் வழங்கிய உலகக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா 23/10/2021 இலண்டன் மாநகரில மிகச் சிறப்பாக நடைபெற்றது. உலகெங்கும் பரந்து வாழும் கலைஞர்கள் ஒன்றுகூடி தமது கலை விருதுகளை பெற்றுக் கொண்டார்கள்..
இவ்விழாவில் தமது வாழ்நாளில் புரிந்த கலைச் சாதனைகளைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ‘ஆச்சாரிய கலாசாகர” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். அத்தோடு நாட்டிய துறையில் விற்பன்னர்களாக விளங்கும் கலைஞர்களுக்கு கலைச்சேவையை பாராட்டி “நிர்த்திய சிரோன்மணி” விருது, “நாட்டிய கலா விபஞ்சி” விருது, என்பவை வழங்கப்பட்டன. இசை,வாத்தியங்களுக்கான விருதாக ‘கான கலாதரா”விருது “வாத்திய கலாதரா” விருது “சங்கீத இரத்னா” விருது என்னும் விருதுகள் வழங்கி உலக கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஐக்கிய இராச்சிய வாழ் கலைஞர்கள் சேவையைப் பாராட்டி விதுஷி,வித்துவான் விருதாக “நிருத்திய இரத்னாகர” விருது, மற்றும் “கந்தர்வ கலா இரத்னா” விருதுகளும் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
இவ்விழாவில் மருத்துவத் துறை பேராசிரியர் திரு.நிர்மலன் மகேசன் அவர்களும்,பேராசிரியை திருமதி நிரோஷினி நிர்மலன் அவர்களும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்திருந்தார்கள். கிரிபின் கல்லூரியின் நிறுவனர் கலாநிதி திருமதி பத்மா ராகுலன்,இயக்குனர் திரு நாதன் ராகுலன்,இயக்குனர் கவுன்சிலர் திரு பரம் நந்தா, இங்கிலாந்து ஒருங்கிணைப்பாளரும் உலகளாவிய செயற்பாட்டு அதிகாரியுமான திருமதி சுகந்தினி சுதாகரன், உலகலாவிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செல்வி சாஸ்கிய யோகராஜா ஆகியோரின் கடின உழைப்பு போற்றுதற்குரியது. அத்தோடு கிரிபின் கல்லூரியின் ஆசிரியர்களும் குறிப்பிடத் தக்க தமிழ் பாடசாலைகளின் ஒத்துழைப்பும் கிரிபின் நலன் விரும்பிகளும் அனைவரும் இணைந்து மிகச் சிறப்பான முறையில் நடத்தியுள்ளார்கள்.