நம்ம ஊர் தைப் பொங்கல்!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.

தைப்பொங்கல் திருநாள் வரும் போதெல்லாம் அங்கங்கு ஊரில் ஒலிக்கும். இந்தக் குரல்களே இப்போதும் எனக்குக் கேட்டுக் கொண்டிருக்கும். அந்த மகிழ்ச்சியின் குரல்கள் எப்போதும் கேட்க வேண்டும் என்பதே விருப்பமும் கூட. ஆனாலும் ஏக்கம் ஒன்று இருந்து கொண்டேதான் இருக்கிறது. 1984ம்; ஆண்டு எனது இறுதிப் பொங்கல் எங்கள் வீட்டு முற்றத்தில்.இப்போது நினைத்தாலும் பொங்கலை விடஅதிகமாக இனிக்கிறது.

அப்பு இருந்த காலம்வரை அவர்தான் பொங்கலுக்குச் சொந்தக்காரன்,அவர் போனபின்,நாம்; பாரமெடுத்தோம். இம்முறை யார்? முதலில் பொங்குவதென்று எங்கள் கிராமத்தில் நண்பர்களிடையே போட்டி வேறு நடப்பதுண்டு. அதிகாலை எழுந்து அம்மா முற்றத்தைக் கூட்டி வட்டமாக மண்ணை வழித்து சாணத்தால் மெழுகி கோலம் போடுவா. அதனைச்சுற்றி வட்டமாக மாவிலைத் தோரணத்துடன்,கும்பமும் வைத்து மலர்களால் அலங்கரிப்போம்.மடையில் வாழைப்பழம்,மாம்பழம் நிறைந்திருக்கும்.கொழுத்திவிடும் சாம்பிராணி வாசம் அந்தப் பிரதேசத்தையே புனிதமாக்கும். பொங்கல் பானையை மாவிலையாலும்,வெற்றிலையாலும்,செவ்வரத்தைப் பூக்களாலும் சுற்றிக்கட்டி,விபூதி பூசி சந்தணம்,குங்குமப் பொட்டு வைத்து அலங்காரமாக,மண்ணில் வெட்டி வைத்த அடுப்பில் தூக்கி வைக்கும் போது,எதையோ சாதித்த மனநிறைவு எனக்குள் வருவதுண்டு.

தைமாசம் மூசிப் பனிப்பெய்யும் அதிகாலை முழுக வேண்டும்.தண்ணீர் சில்லென்று இருக்கும்.ஒரு வாளி அள்ளி அரோகரா என்று தலையில் ஊற்றிவிடுவேன்.அடுத்தடுத்து குளிக்கும் போது அவ்வளவாக குளிர் தெரியாது.சோப் போட்டபின் இன்னும் குளிராது.தொடர்ந்து குளிக்கவே சொல்லும்.

முன்பெல்லாம் எங்களுக்கு மாட்டுப்பட்டி இருந்தது.அங்குதான் சாணம் அள்ளுவோம்.மாதாளை என்ற எருமையும்,ஈஸ்வரி என்ற பசுவும் என் பாசத்தை பங்கு போட்ட சீவன்கள். இப்போதும் நினைக்கையில் கண்ணீர் வரும். ஆதவன் கிழக்கில் எழுந்து வரும்போது பொங்கல் பானையிலிருந்து கிழக்குப் பக்கமாக பால் பொங்கி வழியவேண்டும் அப்படி வழிந்தால் அது ஒரு மகிழ்ச்சியான பொங்கலாக அமையும்.என்ற நம்பிக்கையும் எங்களூரில் உண்டு.

வன்னியச் சேர்ந்தவன் என்ற வகையில்,வயலோடு வாழ்ந்த சந்தோசமும் எனக்கு உண்டு. உழவனே பொங்கலுக்கு உரித்தானவன். வன்னிமக்களின் பிரதான தொழிலே விவசாயமாகும்.அதனால் ஒட்டுமொத்த வன்னி மக்களும் கொண்டாடும் சிறப்பான பண்டிகை பொங்கலாகும்.அப்படியென்றால் பட்டினங்களில் வாழ்பவர்கள் ஏன்? கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வியும் வரும்தானே. உண்மைதான் அவர்களின் அத்திவாரம்,பல தலைமுறைக்குமுன் மண் கிண்டி வாழ்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.அதுவே அவர்களுக்கு வழக்கமானது.

ஒவ்வோர் ஊரிலும் இதற்குத் தனித்தனி சிறப்புண்டு.பொங்கும்போது ஏற்படும் சந்தோசம் வெடிச்சத்தமாக ஊரெல்லாம் கேட்கும். சத்தம் வரும் திசை அறிந்து இது எந்தவீடு என்பதைச் சொல்லலாம். சூரியனைப் பார்த்து முதல் நீரைத் தெளித்துவிட்டு,பொங்கலோ!பொங்கல் என்று உரத்துக் குரல் எழுப்ப,வீட்டு அங்கத்தவர்கள் அவரைத் தொடர்ந்து திங்களே திங்கள் என்று வீட்டைச் சுற்றி தெளித்து வர,முகத்தில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். நினைக்கவே மனம் நிறைவைத்தருகிறது.கொஞ்சத்தைக் கோவிலுக்கும்,மிகுதியை எங்கள் வயலிலும் தெளித்து வருவோம்.

இதனை 1984ம்; ஆண்டு நானே செய்தேன்.அப்போது நினைக்கவில்லை.நான் வெளிநாடு வருவேனென்று. பொங்கலோடு படைப்பதற்காக அம்மா பூசணிக்காய் கறிவைப்பா.அதோடு பொங்கலைச் சேர்த்துச் சாப்பிட அந்த மாதிரி சுவையாக இருக்கும். வாளையிலையில் படையல் வைச்சு சுற்றிவர இருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி என்றுமே வராது.

அப்போது அம்மா இருந்தா.அதுவே எமது பெரும் சந்தோசம்.இன்று அம்மாவும் இல்லை.ஆசையாகப் பொங்கல் வைக்கக் காலமும் இல்லை. ஊரில் எந்த வீட்டில் இழவு விழுந்ததோ அந்தவீட்டில் பொங்கல் நடைபெறாது.அந்த வீட்டிற்கு எல்லாவீட்டில் இருந்தும் பொங்கல் போய்ச்சேரும். கிண்டினவன் பொங்கலைவிட தெண்டினவன் பொங்கல் அதிகம் என்பார்கள்.பொங்கலுக்குச் செங்கரும்பு மிக முக்கியமானது. அந்தப் பிரச்சனை எங்களுக்கு இருக் கவில்லை.கரும்பு கிணற்றடியில் எப்போதும் நிற்கும்.

குடும்ப உறவுகள் சேர்ந்து கலந்து கொள்ளும் இனிப்பான நாளென்று பொங்கலுக்கு ஒரு பெருமையுண்டு. அடுத்த நாள் மாட்டுப் பொங்கல்.இதனைப் பட்டிப் பொங்கல் என்றும் அழைப்போம். பட்டியடியில் தான் இந்தப் பொங்கலைப் பொங்குவோம். முன்பு தனி எருமைப்பாலில் தான் பொங்கு வதுண்டு.ஆறு லீற்றர் பாலில் ஒரு சுண்டு அரிசி போட்டு ,கொஞ்சமாய் சக்கரையும் பயறும் போட்டு அவிய விட்டால் பொங்கல் பானை நிறைய வரும். காரமான மாங்காய்ப் பச்சடியுடன் சாப்பிட்டால்,புளியும் உறைப்பும் சேர்ந்து சுர்ரென்று வாயில் எச்சில் ஊறும். இந்தப் பொங்கலில் தான் எனக்கு அதிக விருப்பம்.ருசித்தவர்க்கே இதன் சுவை தெரியும்.உறவுகள் வீடுகளுக்குச் செல்வதும் ஒவ்வொரு வீட்டுப் பொங்கலைச் சுவைப்பதும் ரசனைதான்.

மாட்டுப் பொங்கல் அன்று எங்களூரில் இன்னொரு பொங்கலுமுண்டு.இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. மார்கழி மாதம் பிறந்தால் எங்களூரில் பருவமடைந்த பெண்கள் சாணத்தால் பிள்ளையார் செய்து அதிகாலை எழுந்து முற்றத்தைக் கூட்டி கோலம் போட்டு சூரிய நமஸ்காரம் செய்வார்கள். இது மாதம் முழுவதும் நடைபெறும். மாட்டுப்பொங்கல் நாளில் அழகான பெட்டிகளில் முழுப்பிள்ளையார்களையும் வைத்து,வாழையிலைக்கு மேலால் சுவையான பொங்கலால் நிறைத்திருப்பார்கள். இந்தப் பெட்டிகளுடன்,வீடு வீடாகச் சென்று சுற்றிவரக் கும்மி அடிப்பார்கள்.மாலையில் கோவிலில் வைத்தும் கும்மி அடிப்பார்கள்.அழகான வண்ண நீளப் பாவாடையில் பெண்களைப் பார்க்க அழகாகவே இருக்கும். பெட்டியைத்தூக்கிக் கொண்டு கோவில் வாசலில் வர மச்சான்,முறையான வாலிபர்கள் புக்கைப் பெட்டியை பறிச்சுக் கொண்டு காடு நோக்கி ஓடுவார்கள்.அவர்களைப் பறிக்கவிடாமல் பெண்கள் இறுக்கிப் பிடிப்பார்கள்.

பறிச்ச பெட்டிகளை எங்களிடம் இருந்து பறிப்பதற்கு ஊர்ப்பெடியள் துரத்திக் கொண்டு வருவார்கள்.நாங்கள் விரைவாக ஓடி பற்றைக்குள் இருந்து பொங்கலைச் சாப்பிட்டு விட்டு பிள்ளையாரையும்,வெறும் பெட்டியையும் திருப்பிக் கொண்டு வந்து கொடுப்போம். எனக்கும் பக்கத்து வீட்டில் இரண்டு மச்சாள் மார் இருந்தார்கள். அவர்களை இப்போதும் நினைக்கிறேன்.. இன்னும் எழுதலாம்……மீண்டும் சந்திப்போம். வெற்றிமணி வாசகர்களுக்கு,இனிப்பான பொங்கல் வாழ்த்துகள்.!

915 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *