அடிமை வணிகத்தின் அடையாளம் – கோப்பி !?

பிரான்ஸ் கவர்னரின் மனைவி தன் கள்ளக் காதலனுக்கு
கொடுத்த பூங்கொத்தால்; பிரேசில் முழுவதும்; பரவிய கோப்பி!

பிரியா.இராமநாதன். இலங்கை

அடை மழையா ? தலை வலியா? காய்ச்சலா ? களைப்பா ? சோர்வா ? ஒரு கப் கோப்பி குடித்தால் எல்லாமும் சரியாகிவிடும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் ” என நம்மில் எத்தனைபேர் சொல்லியிருப்போம் ? அப்படிப்பட்ட இந்த கோப்பியின் வரலாற்றில் அடிமை வணிகத்தின் அடையாளமும், இஸ்லாம் மதத்தின் தாக்கமும் இருக்கிறது என்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரிந்திருக்கக்கூடும் ? உலகத்தில் அதிகமாக குடிக்கப்படும் இரண்டாவது பாணம் என்றால் அது கோப்பி . அதேபோல் உலகத்தில் அதிகமாக வணிகம் செய்யப்படும் முதல் நூறு பொருட்களுள் கோப்பியும் ஓன்று. “international coffee organization” தரவின்படி 2021 ஜூலை மாதம் 10.06 மில்லியன் கோப்பி பைகள் (ஒரு பையில் 60kg) வணிகம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு மனித சமுதாயம் கோப்பிக்கு அடிமையாகியுள்ளது.

ஆபிரிக்க கண்டத்தின் எத்தியோப்பியாதான் கோப்பியின் பிறப்பிடம். கோப்பி செடிக்கும் எத்தியோப்பிய மக்களுக்கும் ஒரு பூர்வகுடி தொடர்புள்ளது. எத்தியோப்பிய “ஓராமா” பழங்குடியினர் கோப்பி பழங்களை தமது கடவுள்களுக்கு படைத்துவந்ததுடன், அவர்களது சமூக சமய சடங்குகள் முழுவதிலும் புனிதமான ஒன்றாக கோப்பி பழங்கள் கருதப்பட்டுள்ளது. கிபி 800 ஆம் ஆண்டுகளில் அரேபியர்கள் எத்தியோப்பிய பழங் குடியினரை அடிமைகளாக பிடித்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு விற்றபோது, அப்படி பிடிக்கப்பட்டு யேமன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு சில அடிமைகள் மூலம் கோப்பி கொட்டைகள் யேமன் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது . எனினும் கோப்பி ஆரம்பத்தில் அடிமைகளின் பாணமாக இருந்தமையால், அரேபியர்கள் அதை சீண்டவேயில்லை . எதேச்சையாக அதனுடைய சுவை அரேபியர்களிடம் சென்றடைந்தபோது அது அவர்களை பெரிதும் ஈர்த்துக்கொண்டது . அதேசமயம் இஸ்லாம் மதுவை பாவம் என தடைவிதித்திருந்தமையால் மதுவுக்கு மாற்றான ஒரு பாணமாக கோப்பி கையில் கிடைத்ததும் அதை கொண்டாடித்தீர்த்தனர் அரேபியர்கள். குறிப்பாக சூஃபி இஸ்லாமிய துறவிகள் கோப்பியை அருந்துவது தவறேயில்லை என்பதுபோல் பிரச்சாரமே செய்தனர். முதன்முதலாக கோப்பியை மட்டும் தயாரித்துக் கொடுத்து அதை அருந்துவதற்கென்றே இடங்கள் உருவாக்கப்பட்டதும் மெக்கா நகரில்தானாம். உலகின் இந்த முதல் coffee shop கள் “ quhreh khaneh” என அழைக்கப்பட்டன. உண்மையில் ஆங்கில வார்த்தையான coffee என்பது அரேபிய மொழி வார்த்தையான “ qahwa“ என்பதிலிருந்துதான் பிறந்திருக்கின்றது.(qahwa எனும் வார்த்தை முதலில் வைனை (wine) குறிப்பதற்காகவே அரேபியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

குளம்பி!

மேலும் சில ஆய்வுகளின்படி எத்தியோப்பியாவின் ஒரு சாம்ராஜ்யமான “kingdom of kefa” என்கிற இந்த மநகய நகரத்திலிருந்துதான் அரேபியாவிற்கு அதிக அளவிலான கோப்பி கொட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளனர் என்றும் மநகயவிலிருந்து வந்தது என்பதே காலப்போக்கில் மருவி “உழககநந” என கூறப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது . உண்மையில் நாம் வாய்க்குவாய் கோப்பி என குறிப்பிடும் இந்த பாணத்தின் உண்மையான தமிழ் பெயர் என்ன தெரியுமா ? “குளம்பி”! கோப்பி விதைகளை எடுத்துப்பார்த்தால் அது குதிரை, மாடு போன்றவற்றின் கால் குளம்பின் அச்சு போன்றே இருக்கும் . அதனை கொண்டே தமிழில் உழககநநஐ குளம்பி என்றழைத்தனர். அதுவே நம்மால் கோப்பி என திரிபுபடுத்தி கூறப்படுகின்றது .

ஐரோப்பாவில் முதன்முதலில் கோப்பி அறிமுகமானபோது அதற்கு அவர்கள் வைத்த பெயர் “devil drink” (சாத்தானின் பாணம்). காரணம் கிறிஸ்தவர்களை அதிகமாகக் கொண்டிருந்த ஐரோப்பாவில், கோப்பி என்பது அரேபியர்களால் விரும்பி பருகப்பட்ட ஓன்று என்பதால் அவர்களுக்கிடையே அப்போதிருந்த வரலாற்று ரீதியிலான மத போர்களைஅடிப்படையாகவைத்து கோப்பி கிறிஸ்தவ கடவுளுக்கு எதிரானவொன்றாக கிறிஸ்தவர்களால் கருதப்பட்டது .அப்படி போரின்போது கைது செய்யப்பட்ட அரேபியர்களிடமிருந்து கோப்பி விதைகள் ஐரோப்பாவினுள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. என்னதான் மதத்திற்கு ஆகாது என கூறிக்கொண்டாலும், அதனை அருந்திப்பார்த்த சில கிறிஸ்தவர்களால் கோப்பியை அருந்தும் வழக்கத்தினை கைவிட இயலாமல் போக, கடைசியில் வழக்கு அப்போதிருந்த போப்பாண்டவர் 8ம் கிளமெண்ட்டிடம் (clement) சென்றது. அவரும் அதனை அருந்திப்பார்த்துவிட்டு, அதன் சுவையில் மயங்கி அது கிறிஸ்தவத்திற்கு எதிரான பாணம் அல்ல என தீர்ப்புக்கூறிய வரலாறும் குறிப்பிடத்தக்கது .

கிபி 16 நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து “baba budan “ எனும் சூஃபி இஸ்லாமியர் மெக்காவிற்கு புனித யாத்திரை சென்றபோது , கோப்பி அருந்தும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் சுவையால் ஈர்க்கப்பட்டு, அதன் விதைகளை இந்தியாவிற்குள் கொண்டுசெல்ல முற்பட்டபோது அரேபியர்களால் கோப்பி விதைகள் மற்றைய நாடுகளுக்கு கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், தன்னுடைய நீண்ட தாடிக்குள் ஏழு கோப்பி விதைகளை மறைத்து வைத்து இந்தியாவிற்குள் அவர் கொண்டுவந்ததாகவும், அவற்றை கர்நாடகாவில் உள்ள சித்மங்களூரில் பயிரிட்டு இந்தியா முழுவதிலும் பரவ வாய்ப்பு உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றும் சித்மங்களூரில் உள்ள அந்த மலைப்பகுதி “baba budhan giri” என்றே அழைக்கப்படுகிறது .

இன்று உலக அளவில் கோப்பி சாகுபடியில் முதலிடத்தில் இருப்பது பிரேசில் . ஆனால், பிரேசிலினுள் கோப்பி நுழைந்ததெப்படி? பிரான்சில் இருந்து கோப்பி விதைகளை எடுத்துவந்து பிரேசிலில் பயிரிட விரும்பிய போர்த்துகீசியர் அதற்காக அப்போதைய பிரான்ஸ் கவர்னரிடம் கோரியஅனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் போர்த்துகீசிய அதிகாரியான “Francisco de melo” என்பவர் மீது காதல்வயப்பட்டிருந்த பிரான்ஸ் கவர்னரின் மனைவி, தான் “Francisco de melo”கு கொடுத்த பூங்கொத்து ஒன்றினுள் ரகசியமாக கோப்பி விதைகளை மறைத்துவைத்து கொடுத்துவிட, அந்த விதைகளே இன்று பிரேசில் முழுவதும் பல்கிப்பெருகக் காரணமாம்.

அதேபோல் டச்சுக்காரர்கள் ஏமனில் இருந்து கோப்பி விதைகளை கடத்திக்கொண்டுவந்து அதை இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவுகளில் விதைத்தனர். அப்படி உருவாக்கப்பட்ட அந்த கோப்பி தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்வோர்க்கு கோப்பி பழங்களையோ விதைகளையே அருந்துவது தடைவிதிக்கப்பட்டு , மீறியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். ஆனால், தடைவிதிக்கப்பட்டிருந்த கோப்பியை சுவைத்துப்பார்க்க விரும்பிய அடிமைகளோ, புழுகுபூனைகள் கோப்பி பழங்களை விரும்பி உண்டபின் இடும் கழிவுகளில் செரிமானமாகாமல் அப்படியே வந்து விழும் கோப்பி விதைகளை எடுத்து கழுவி, வறுத்து பொடிசெய்து அதனை பாணமாக குடிக்க ஆரம்பித்தனர். இந்த வாசனை வெள்ளையின முதலாளிகளின் மூக்கைத் துளைக்க, உருவாக்கப்பட்டதுதான் “luwak coffe.. புழுகுபூனைகளின் வயிற்றில் நடக்கும் செரிமான ரசாயனங்களின் கலவையினால் கோப்பி கூடுதல் சுவை பெறுவதால் புழுகுபூனைகள் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு ஒரு மிகப்பெரிய வணிகமாகவே இந்த “luwak coffe” வணிகம் உருமாறியுள்ளது. இதிலும் யானைகளை அதிக அளவில் கோப்பி பழங்களை உண்ணவைத்துவிட்டு அதன் கழிவிலிருந்து உருவாகும் ” black lovory coffe ” கோப்பிதான் இன்றளவிலும் விலைகூடிய கோப்பி அதாவது இலங்கை ரூபாயின்படி கிட்டத்தட்ட நான்கு லட்சத்து தொண்ணூறாயிரம் நம்பினால் நம்புங்கள் …

844 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *