“பசி” நாடகம் – 1978

எனது நாடக அனுபவப் பகிர்வு – 14
ஆனந்தராணி பாலேந்திரா
இலங்கையில் 1975ஆம் ஆண்டு ஆரம்பமான எனது தீவிர நாடகப் பயணத்தில் ‘பிச்சை வேண்டாம்’, ‘மழை’, நட்சத்ரவாசி’, ;கண்ணாடி வார்ப்புகள்’ ‘கோடை’, ‘அவள் ஏன் கலங்குகிறாள்’ ஆகிய முழு நீள நாடகங்களைத் தொடர்ந்து 1978ஆம் ஆண்டு நான் நடித்த குறு நாடகம் ‘பசி’. இந்திய நாடக ஆளுமை பத்மஸ்ரீ பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய இந்த நாடகத்தை க.பாலேந்திரா நெறியாள்கை செய்திருந்தார்.
‘பசி’ நாடகத்தில் மேடையில் இரண்டு பாத்திரங்கள் மட்டும்தான். அவன். அவள். அவனாக பாலேந்திராவும் அவளாக நானும் நடித்தோம். மற்றொரு பாத்திரம், ஒரு குட்டி நாய். அது ஊமமாகத்தான் வரும். அது குரைக்கும்போது மேடையின் பின்னணியில் இருந்து ஒருவர் குரல் கொடுப்பார்.
நாய் குரைப்பது போல பின்னணியில் குரல் கொடுப்பதென்பது இலேசான காரியமல்ல. நாடகப் பிரதியில் எங்கெங்கு நாய் குரைக்கும் சத்தம் வரவேண்டுமென அடையாளமிடப்பட்டிருந்தாலும் மேடையில் நடிக்கும் எம்மையும் எமது அசைவுகளையும் பார்த்த வண்ணமும் குரல் கொடுக்க வேண்டும். குரைப்பும்கூட பல்வேறு ஏற்றத் தாழ்வுகளுடன் வரவேண்டும். குட்டி நாய் என்றபடியால் அனுங்கல், சிணுங்கல், பசியால் வரும் அழுகை பின்னர் ஆக்ரோஷம் எனப் பலவிதமாக இருக்கும். குரல் கொடுப்பவர் பல ஒத்திகைகளுக்கு வரவேண்டும்.
பொதுவாக எல்லோருக்குமே மேடையில் பார்வையாளர்கள் பார்க்கும் வண்ணம் நடிப்பதுதான் விருப்பம். முகம் தெரியாமல் குரலை மட்டும் கொடுப்பதற்கு பின்னிற்பார்கள். அதுவும் நாய் போல் குரைக்க வேண்டும் என்றால் யார்தான் வருவார்கள். ‘பசி’ நாடகத்தின் இலங்கை மேடையேற்றங்களின் போது பாலேந்திராவின் நெருங்கிய நண்பரும் அவருடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவருமான சுப்ரமணியம் பின்னணிக் குரல் கொடுத்தார். நாங்கள் புலம்பெயர்ந்த பின்னர் இந்த நாடக மேடையேற்றங்களின் போது குரல் வழங்கியவர்களில் ராஜ்குமாரை எனக்கு ஞாபகம் இருக்கிறது.
‘பசி’ நாடகம் ஒரு அபத்தப்பாணி நாடகம். இதன் நடிப்பு முறை யாதார்த்த நடிப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அந்தக் காலத்தில் இது முற்றிலும் புதிய முறை நடிப்பாக இருந்தது. மிகை நடிப்பு, முகபாவங்களை, உடல் அசைவுகளைக் கொஞ்சம் பெரிதாகக் காட்டல் என மாறுபட்ட விதத்தில் அமைந்திருந்தது. நான் ஏற்கனவே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு அபத்தப்பாணி நாடகத்தில் நடித்திருந்தேன். ‘நத்தையும் ஆமையும்’ என்ற இந்தப் பரீட்சார்த்த நாடகத்தை பி.விக்னேஸ்வரன் தயாரித்திருந்தார். இதிலும் இரண்டு பாத்திரங்கள் மட்டுமே. என்னோடு சி.நடராஜசிவம் நடித்தார். நான் நூற்றுக்கணக்கான இலங்கை வானொலி நாடகங்களில் நடித்திருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த நாடகம் இதுவெனக் கூறுவதுண்டு. வானொலி நாடகத்தில் நாம் குரலை மட்டுமே பாவிக்கின்றோம். ஆனால் மேடை நாடகத்தில் குரலுடன் உடல்மொழியும் இணைந்து வரும்.
‘பசி’ நாடகம் குறு நாடகமாக இருந்தபோதும் எனக்கு நடிப்பதற்குப் பெரும் சவாலாக இருந்த நாடகம். அப்போது பாலேந்திரா கொழும்பிலும் நான் யாழ்ப்பாணத்திலும் வசித்தோம். நாமிருவரும் மட்டுமே இந்த நாடகத்தில் நடித்த படியால்; யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக நிறைய ஒத்திகைகள் செய்ய முடிந்தது. பாத்திரவார்ப்பு, நடிப்புத்தன்மை, உடல்மொழி எல்லாவற்றையும் பாலேந்திரா எனக்கு நன்கு விளங்கப்படுத்தியிருந்தார். அவர் எல்லாவற்றையும் விளக்கிக் கூறுவாறே தவிர ஒரு நாளும் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நடித்துக் காட்டுவதில்லை. நடிகர்கள் எல்லாவற்றையும் உள்வாங்கி சுயமாகத் தமது நடிப்புத்தன்மையை வெளிப்படுத்தும் விதத்தில்தான் அவருடைய நெறியாள்கை அமைந்திருக்கும்.
நாம் பிறந்துவிட்டால் வாழ்க்கையில் எதையாவது ஒன்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. மொழி,சமயம்,அரசியல் என்று பல. நாம் தொங்கிக்;கொண்டிருக்கும் அது எம்மை ஆக்கிரமிக்கும்போது நிலைமை பரிதாபமாகிவிடுகிறது என்பதை ஆழமாக சிறிது நகைச்சுவையுடன் கூறும் நாடகம் இது.
‘பசி’நாடகத்தில் வரும் அவனுக்கும் அவளுக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி ஒரு சுழல் வட்டத்தில் போய்க் கொண்டிருக்கிறது. திடீரென ஒரு நாய்க்குட்டி வளர்க்க ஆசைப்படுகிறார்கள். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. நாய்க்குப் பசி எடுக்கிறது. பால் கொடுக்கிறார்கள். பின்னர் அதன் பசி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. அண்டா பால் கூட அதற்குப் போதவில்லை. அண்டாவையும் சாப்பிடுகிறது. அவன் சொல்கிறான் “இன்னும் பசி. இதற்கு இறைச்சி வேண்டும். ஆடு, மாடு, கோழி. அது போதாவிட்டால் மனித இறைச்சி. அது வேண்டுமென்றால் ஒரு போரையே தொடங்குவோம்.”
நாய் மேலும் பசி எடுத்துக் குரைக்கக் குரைக்க, இவர்களும் நாய் போல் குரைக்க ஆரம்பிக்கிறார்கள். இறுதியில் நாய் இறந்துபோகிறது. மீண்டும் வாழ்க்கை ஆரம்பித்த இடத்திற்குப் போகிறது, இன்னொரு விடயத்தை எதிர்நோக்கி. நாய் பாத்திரம் இந்த நாடகத்தில் ஒரு குறியீடாக வருகிறது.
மிகுதி அடுத்த இதழில்….
1,750 total views, 2 views today