தமிழ்நாடும் சாதிபடுத்தும் பாடும்!
ஒரு கலைப்படைப்பில் கூட இப்போது மக்கள்
சாதியின் குறியீடுகளைத் தான் தேடுகிறார்கள்.
- சேவியர் – தமிழ்நாடு
சதி செய்யும் சாதி!
சாதிகள் இல்லையடி பாப்பா ! எனும் பாரதியின் குரல் பாடநூல்களின் பக்கங்களில் கம்பீரமாய் இருக்கிறது. ஆனால் அதைப் படிக்கும் பாக்கியம் எல்லா சாதியினருக்கும் வாய்ப்பதில்லை என்பது எவ்வளவு துயரம். அடப் போடா, இந்த நூற்றாண்டில சாதியா ? என அப்பாவியாய்க் கேட்பவர்கள் தங்கள் மீதான தாக்குதலைக் கூட உணர முடியாத அப்பாவிகள் என்று சொல்லலாம்.
சதி எனும் உடன்கட்டை ஏறுதல் ஒழிந்தது போல, சாதி எனும் பேதமும் கட்டை ஏறி அழிந்து போனால் எவ்வளவு நன்றாய் இருக்கும் ? என எண்ணத் தோன்றுகிறது. ஒரு டைம் மிஷினில் காலத்துக்கு முன்னால் சென்று இந்த பிரிவினைக்கு வித்திட்டவர்களை முளைக்காமல் செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என அறிவியல் புனைக் கதை தோன்றுகிறது! என்ன செய்ய, மனுக்குலத்தின் சமத்துவ நேசத்தின் வேர்களில் வைக்கப்பட்ட கோடரியாய் இந்த சாதியின் கோரப்பற்கள் இன்று சிரிக்கின்றன.
சாதி வெறி என்பதை வெறுமனே ஒரு சில சாதியினருக்கு மட்டுமான ஒன்றாய்ப் பார்க்க முடியாது. எல்லா சாதினருக் குள்ளும் ஓடுகின்ற ஒரு வெறியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. சிலர் அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால் சிலவற்றை மிக எளிதாகச் செய்கிறார்கள். சிலர் அதிகாரத்தின் எல்லைக்குள் கூட நுழைய முடியாததால் அமைதியாய் இருக்கிறார்கள். மற்றபடி சாதி எனும் ஒரு விஷயம் இருக்கும் வரை இந்த வெறுப்பின் அரசியல் வெகுண்டெழுந்து கொண்டே தான் இருக்கும்.
அவ்வளவு எளிதாய் இந்த சாதியை உடைத்து விட முடியாது. இந்த இருபதாம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வீதிகளில் கூட சாதியின் சகவாசம் சகதியின் அழுக்கைப் போல உறைந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் என்ன, வெளியே வெள்ளையடித்து அதை உள்ளுக்குள் ஒளித்து வைத்திருப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.
அந்த சாதி தான் வன்முறை சாதி, இந்த சாதி மென்முறை சாதி என்றெல்லாம் ஒன்று கிடையாது. அந்த சாதிக்கு வாய்ப்பு இப்போது கிடைக்கிறது எனவே இப்படி இருக்கிறது. அடுத்த சாதிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் போது இதை விட அதிகமாய் வீரியம் காட்டும் என்பது தான் உண்மை. மற்றபடி சாதிகள் எனும் பிரிவினை வந்தாலே மனிதம் எனும் அடிப்படை நீர்த்துப் போய்விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மக்கள் எப்போதுமே உணர்வு ரீதியாக உந்தப்படுபவர்கள். அவர்களை அறிவு ரீதியாக இணைப்பது தான் கடினம், ஆனால் உணர்வு ரீதியாக இணைப்பது ரொம்ப சிம்பிள். அதனால் தான் மக்களை வைத்து லாபம் பார்க்க விரும்புபவர்கள் அவர்களை உணர்வு ரீதியாக இணைக்கிறார்கள்.
‘ஏய்.. எவன்லே என் சாதியை தப்பா பேசினது’ என்றாலோ, ‘எவன்லே என் மதத்தை கிண்டல் பண்ணினது” என்றாலோ உடனடியாக கூட்டம் கூடிவிடும். அது ஒரே கணப்பொழுதில் மிகப்பெரிய சண்டைக்கான விதையாக மாறிவிடும். ஒரே குழுவாய் இருந்து நட்பு பாராட்டுபவர்கள் கூட சாதி எனும் குரல் கேட்டால் உடைந்து பல துண்டுகளாகி, அவரவர் குழுவோடு இணைந்து கொள்வார்கள்.
இந்த உணர்வு ரீதியிலான இணைப்பு தான் அரசியல்வாதிகளுக்கான அறுவடை. உணர்வுகளைக் கொந்தளிக்க விட்டால் போதும், தேவையானதை அடைந்து விடலாம் என்பது தான் அவர்களது தேர்தல் நேரக் கணக்கு. அத்தகைய உணர்வுகளை ஊதி ஊதிப் பெருக்கிக் கொண்டே இருப்பார்கள்.
எந்த ஏரியாவில் எந்த சாதி அதிகம் இருக்கிறதோ, அந்த பகுதியில் அந்தச் சாதிக்கு ஆதரவாய் பேசுவது
எந்த ஏரியாவில் எந்த சாதி அதிகம் இருக்கிறதோ, அந்த பகுதியில் அந்தச் சாதிக்கு ஆதரவாய் பேசுவது அவர்களுடைய வாடிக்கையாய் இருக்கிறது. ஒரு ஏரியாவில் ஒரு சாதியை உயர்த்தி விட்டு, இன்னொரு ஏரியாவில் இன்னொரு சாதியை உயர்த்துவது அவர்களுக்கு மிக எளிது, ஆனால் பாவம் இதை அறியாத ஆட்டு மந்தைகள் தான் தலையாட்டிக் கொண்டே கழுவில் கழுத்தை வைக்கின்றன.
ஒரு கலைப்படைப்பில் கூட இப்போது மக்கள் கலைநயத்தைப் பார்ப்பதில்லை சாதியின் குறியீடுகளைத் தான் தேடுகிறார்கள். சமீபத்தில் வந்த ஒரு திரைப்படம் கூட இத்தகைய நேரடித் தாக்குதலை எதிர் கொண்டது. திரைப்படம் பேசுகின்ற சமூக ஏற்றத்தாழ்வின் சிந்தனையை மக்கள் கைவிட்டார்கள். அதை விட்டு விட்டு. அந்தப் படத்தின் போஸ்டரிலும், காலண்டரிலும், ஆடையிலும் சாதியின் அடையாளங்களைத் தேடுகின்றனர்.
எந்த ஒரு பிரச்சனையையும் வலுவாக்க இந்த சாதியை கொஞ்சம் கலக்கினால் போதும். ஒரு சண்டை நடந்தது என்பது சாதாரண செய்தி, ஒரு சாதிச் சண்டை நடந்தது என்பது மாநில பதட்டம் ! ஒரு கல்யாணம் என்பது நல்ல செய்தி, கலப்புத் திருமணம் என்பது பதட்டத்தின் செய்தி. இப்படி எல்லாவற்றிலும் கொஞ்சம் சாதியைக் கலந்தால் அது பெரிய வீரியமுடைய பிரச்சினையாய் மாறிவிடுகிறது.
நிலப்பரப்பு முழுதும் இந்த சாதிய ஏற்றத்தாழ்வு வியாபித்திருப்பதால் சாதிய ரீதியிலான அங்கீகாரங்களும் அவசியமாகின்றன. சாதியே இல்லாத சமுதாயம் தொடர்ந்திருந்தால் பூமியில் எல்லாருக்கும் எல்லாமே சமமான வகையில் கிடைத்திருக்கும். அந்த சமநிலை உடைக்கப்பட்டிருப்பதால் வலுவற்ற சாதியினருக்கான நியாயம் வென்றெடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
இந்த சாதியக் கட்டமைப்பை சமூகத்திலிருந்து கழுவிக் களையும் வாய்ப்பு இருக்கிறதா என்றால், இருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் அது ஒரு தேசம் தழுவிய சட்டமாக்கப்பட வேண்டும். சாதியே எங்கும் பதிவு செய்யப்படாத நிலை வேண்டும். ஆனால் அதற்கு முன் எல்லா சாதியினருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். என பல சிக்கல்கள் உள்ளன.
குறைந்த பட்சம் நமது அடுத்த தலைமுறையினருக்கு சாதி வெறியை ஊட்டி வளர்க்காமல், சாதிப் பாகுபாடே இல்லாத ஒரு மனநிலையை உருவாக்க வேண்டும். அதுவே மிகப்பெரிய மாற்றத்துக்கான துவக்கப் புள்ளியாய் இருக்கும்.
நான் கல்லூரி காலத்தை முடிக்கும் வரை சாதி எனும் விஷயத்தைப் பற்றியே அறிந்ததில்லை. சாதிகளிடையே வெறுப்பு, சண்டை, பகை, ஏற்றத்தாழ்வு போன்றவை உண்டு என்பதே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. காரணம் எனது பால்யம் அன்பின் மீது கட்டப்பட்டிருந்தது. எனது கிராமத்தின் எளிமையும், எனது பெற்றோரின் மனிதநேயப் பார்வையும் என்னை அப்படி வார்த்திருந்தது. இன்றைக்கும் சாதி அமைப்பின் மீது எனக்கு எதிர்ப்பு வளரக் காரணம் எனது பால்யம் தான். எனது குழந்தைகளையும் நான் சாதியின் நிழலற்ற ஒரு சூழலில் தான் வளர்க்கிறேன். இந்த மனநிலை ஒட்டு மொத்த மக்களிடமும் வந்தால் இந்த சாதியின் வேர்கள் நீர்த்துப் போய்விடும் வாய்ப்பு உண்டு.
பிறப்பு ஒரு மனிதனை இறைவனின் சாயலாகத் தான் படைக்கிறது. கள்ளமற்ற இறைவனின் இயல்புடன் தான் படைக்கிறது. வன்மம் அற்ற ஒரு வெள்ளை இதயத்தோடு தான் படைக்கிறது. அதில் வேறுபாடுகள் இல்லை. அந்த நிலை தான் தொடரவேண்டும். அந்த இயல்பை உடைக்கும் வேலையை சாதி செய்கிறது. மேலை நாடுகளில் சாதி இல்லை, அவர்களிடையே இத்தகைய வன்மம் வளர்வதும் இல்லை. ஆணவக் கொலைகள் எனும் பேச்சே எங்கே எழுவதில்லை. ஆனால் நாம் தான் வீழ்ந்து கிடக்கிறோம்.
எல்லோரும் இணைந்து உண்பது, எல்லோரும் இணைந்து படிப்பது, எல்லோரும் இணைந்து பயணிப்பது இவையே சமத்துவ சமுதாயத்தின் அடிப்படை. ஆற்றில் குளித்துவிட்டான் என அடித்துக் கொல்வதும், ஊருக்குள் நுழைந்து விட்டான் என வெட்டிக் கொல்வதும், நாகரீகம் முளைக்காத கற்காலத்தில் கூட நிகழ்ந்ததில்லை.
மனிதனை விலங்கை விடக் கீழாக இறக்கி விட சாதியால் முடியும். மனிதனை கற்காலத்துக்கும் முன்னே கடத்திச் செல்ல சாதியால் முடியும். மனிதனின் ஆறறிவுகளில் இரண்டை நறுக்கிச் செல்ல சாதியால் கூடும். சாதியற்ற சமுதாயம் என்பது பூங்காவைப் போன்றது, சாதிகளின் வரவு, பூங்காவுக்குள் அவிழ்த்து விடப்பட்ட பன்றிக் கூட்டம் போன்றது. பூக்களை பன்றிகள் ரசிப்பதில்லை. பூங்காக்களை விட சகதியே அவற்றுக்குச் சுகமாய் இருக்கிறது.
சாதியற்ற சமூகத்திற்கு, கல்வியின் தேவை மிக மிக முக்கியமாகிறது. கல்வியற்ற சமூகத்தைத் தான் சாதி மிக எளிதில் சாட்டையால் அடித்துக் காயப்படுத்தும். கல்வி ஒரு மனிதனுக்குத் தருகின்ற அங்கீகாரமும், அதிகாரமும், அடையாளமும், விழிப்புணர்வும் சாதியெனும் பள்ளத்தாக்கிலிருந்து கரையேற உதவும்.
டாக்டர் அம்பேத்கார் வழிகாட்டிய கலப்புத் திருமணங்கள் சாதியின் வெறியை மட்டுப்படுத்த உதவும். தலைமுறைகள் கடக்கும் போது அந்த சாதி அடையாளம் என்பது மாறி, குடும்ப உறவுகள் எனும் நிலை உருவாகும். சாதி சங்கங்கள் எல்லாம் கலைக்கப்பட வேண்டும். சாதி சங்கங்களில் யாரும் இணையாத நிலை வேண்டும். பெயரிலோ விலாசத்திலோ எங்கும் சாதியின் அடையாளங்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாக்கப்பட வேண்டும். இவை சாதியின் அங்கீகாரத்தை அழிக்கும்.
சாதி என்பதை எங்கும், எதற்கும் பயன்படுத்தக் கூடாது எனும் சட்டம் தேவை. எந்த மதத்தின் அடையாளத்தையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனும் உரிமையைப் போல, சாதியிலும் யார் வேண்டுமானாலும் எந்தப் பழக்கத்தை வேண்டுமானாலும் கொண்டிருக்கலாம் எனும் ஒரு சூழல் உருவாக வேண்டும். அப்போது சாதி எனும் பயன்பாடு, முக்கியத்துவமற்றதாய்ப் போய்விடும்.
சாதியை ஒழிக்க வேண்டுமெனில் முதலில் சாதி தீயது எனும் எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும். குறைந்த பட்சம் பெரும்பாலான மக்களுக்கு அந்த சிந்தனை வரவேண்டும். சாதியை தவிர்ப்போம், மனிதம் வளர்ப்போம்.
1,167 total views, 2 views today