மதிமயக்கும் போதைப்பொருள் அதைத் தவிர்ப்பீர்! தனக்கே அல்லாத ஒரு இன்ப அமைதி தேவையா?
-கரிணி.யேர்மனி
இன்று பல நாடுகளில் மோசமான விளைவைத் தரக்கூடிய போதைப்பொருட்களை வைத்திருத்தல்,விநியோகித்தல், கடத்தல் போன்றவற்றிற்கு மிக உச்சக்கட்ட தண்டனையாக மரணதண்டனையை விதிக்கிறது அந்தந்த நாட்டின் அரசு. அப்பேற்பட்ட கொடூர குற்றமாக இந்த போதை பாவனை ஏன் கருதப்படுகின்றது என ஆராய்ந்து பார்த்தால் உலகின் பல்வேறு குற்றச்செயல்களுக்கும் அடிப்படையாக போதைப் பொருட்களை உபயோகிப்பவர்களே காரணமாக உள்ளனர். ஒரு தேசத்திலே உலவவிடப்படுகின்ற இந்த கொடிய பொருள் அத்தேசத்தில் வளர்ந்து வருகின்ற இளைய சமுதாயத்தினர் கரங்களிலும் கிடைத்து அத்தேசத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியையும், மிகுந்த ஆபத்தான எதிர் விளைவுகளையும் ஏற்படுத்த கூடியதாக உள்ளது.
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் அதிக செய்திகளை இலகுவாக பார்க்கக் கூடியதாக உள்ளது. அவற்றில் சொந்த குடும்பத்தையே சுட்டுக் கொன்ற சிறுவர், பொது வெளியில் ஆடைகளை களைந்து எறிந்து தன்னிலை அறியாது விழுந்து கிடப்பவர்கள், பாடசாலையில் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திய மாணவர், தன்னைத்தானே கொடூரமாக தாக்கியோர், நெருங்கிய உறவுகளைக்கூட கொலை செய்வோர் இப்படி எத்தனை எத்தனையோ கொடூர சம்பவங்களுக்கும், சமூகபண்புகள் மீறப்படுவதற்கும் போதை பொருட்களின் பாவனை முதன்மை வகிக்கிறது.
இவ்வாறான போதைகளில் மிதப்பவர்கள் தமக்கு தாமே ஆபத்து விளைப்பவர்கள் என்பதை விட அவர்களால் பிறருக்கு ஆபத்து வரக்கூடிய வாய்ப்புக்களே அதிகம். உயர்ந்த பட்சம் மற்றவர்களின் உயிருக்கு கூட ஆபத்து விளைவித்து விடுவார்கள். இப்பேற்பட்ட சூழலில் தன் பிள்ளைகளென்ன, பிராணிகளென்ன, ஜடப்பொருளென்ன என்று கூர்ந்து காண முடியாத புத்தியின் மயக்க நிலையில் இருப்பார்கள்.
உடல் என்பது மிகப்பெரும் இரசாயன தொழிற்சாலை. ஒவ்வொரு வகை உணர்விற்கும் வெவ்வேறு இரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. மனித உடலில் சுமார் அறுபது இரசாயனங்கள் வரை காணப்படுவதாக ஆராய்ச்சி சொல்கிறது. உறக்கம் நன்கு வருவதற்கு ‘மெலரோனின்’ என்ற இரசாயனமும், மகிழ்ச்சியாக இருக்க ‘செரரோனின்’ என்ற இரசாயனமும்,பெண்மைக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்மைக்கு டெஸ்டோஸ்டிரோன் போன்ற பல்வேறு இரசாயனங்கள் உடலில் செயற்படுகின்றன. இவை சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன, மேலும் இவை உயிரியலின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்துகின்றன. வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பு முதல் வளர்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்கம் வரையில் இவற்றின் பங்களிப்புத்தான் அடிப்படை. இவை ஹார்மோன் என்று அழைக்கப்படுகின்றன. உடலின் மூளையோடு தொடர்புபட்டு தண்டுவடம் வழியாக உடலெங்கும் பரந்து விரிந்த நரம்புமண்டலம் மிகவும் அற்புதமானது. தூண்டல் துலங்கலின் பாதைகள் இவை. இவற்றில் எந்த தொந்தரவும் ஏற்படுத்தக் கூடாது.
விடயத்துக்கு வருவோம். ஒருவர் சித்தப்பிரமை பிடித்து பாதிப்புக்கு உள்ளாகியிருந்தால் அத்தகைய நிலையை மருத்துவத்தில் இரசாயன சமநிலையற்ற (chemical imbalance ) நிலையாகவே பார்க்கப்படுகிறது. இது உடல் மற்றும் உளம் சார்ந்த பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. அதிகமாக உள்ள இரசாயனத்தை குறைத்தும் தேவைப்படும் இரசாயனத்தை அளவாக கொடுத்தும் உடல், மன கோளாறுகளை கட்டுப்படுத்த முடியும், உடல் தானாகவே இவற்றை உற்பத்தி செய்யக்கூடியது என்பதால் அதற்கான தூண்டுதல்களை இனங்கண்டு ஏற்படுத்த முடியும். இந்த உடலியல் இரசாயனங்களை நம்பி உடலியக்கம் இருந்தாலும் அவற்றிற்காக மூளை முக்கிய பங்கினை ஆற்றுகிறது. கண்மூடித்தனமான போதைப் பாவனை இந்த சமநிலையில் குழப்பத்தை ஏற்படுத்தி சீரான தன்மைக்கு திரும்ப முடியாதபடி அதன் உடல் பங்களிப்பிலிருந்து தடுமாற்றமடைய செய்கிறது. போதை எனப்படுவது விழிப்புணர்வு நிலையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தி கீழ்நிலைக்கு கொண்டு செல்வது.
தாவர வகைகளில் இனிய சுவை தரும் உண்ணக்கூடிய தாவரங்கள் முதற்கொண்டு திசைமாற்றி, மதிமயக்கி, ஆட்கொல்லி வரை ஏராளமான வகைகள் உண்டு. இயற்கையானது தானே என கண்மூடித்தனமாக எதையும் உபயோகிக்க கூடாது. மருந்தும் விருந்துமே அளவோடு இருக்க வேண்டும் எனப்படுகின்ற போது இத்தகைய அபாயமான விடயங்களிலிருந்து விலகியிருத்தலே நலம். இந்த போதை ஏற்படுத்தும் தாவரப் பகுதிகள் மிக மிக சிறிதளவு மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப் படுகிறது. அதுபற்றி கற்றுணர்ந்தவர்களுக்கே அதன் அளவீடு தெரியும். போதைப் பொருள் என்றால் கஞ்சாவும், அபினும் தான் மதுபானம் அவற்றில் அடங்காது எனப் பொருள் கொள்ளக் கூடாது. விழிப்புணர்வு நிலையில் அதனை முறியடித்து மதிமயங்க செய்யும் அத்தனை வகையும் போதைதான், புகை வழி உள்ளிழுக்கப்படுவது, உண்ணப்படுவது, அருந்தப்படுவது இவை அனைத்தும் உள்ளடக்கம். அவற்றின் செறிவுகளின் தன்மை தான் வேறுபட்டவை. உதாரணமாக உறங்குவதற்காக உபயோகிக்கப்படும் உறக்க மாத்திரை கூட அளவுக்கு அதிகமாகிவிடக் கூடாது. உணவுப் பொருளில் சுத்தமான தேனினை அளவுக்கு மீறி அருந்திவிட்டால் கூட போதையினை ஏற்படுத்தும் ஆனால் தேன் சித்த பிரமையினை ஏற்படுத்துவதில்லை, மற்றையவை நிரந்தர சித்தப்பிரமையினைக்கூட ஏற்படுத்தக்கூடியன.
மகிழ்ச்சியாக இருக்கவும், அமைதியாக இருக்கவும் மது போன்ற போதைப்பொருள் தேவைப்படுகிறது எனில் நிர்ணயிக்கும் தன்மை அற்ற நிலையில் ஒருவருக்கு கிடைக்கும் அந்த அமைதியும், மகிழ்ச்சியும் நிச்சயமாக அவருடையது அல்ல. அதனை அனுபவித்து நினைவு வைத்துக் கொள்ள முடியாத நிலையிலான அனுபவம். இதனை எவ்வாறு தனக்கானதாக கொள்ள முடியும். தனக்கே அல்லாத ஒரு இன்ப அமைதி அனுபவத்திற்காக ஏன் தன் உடல் மற்றும் மனநிலையை சீரழிக்க வேண்டும். இதனால் எமக்கும் எம் சமூகத்திற்கும் கிடைக்கும் நன்மை என்ன?
நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை. துன்பமோ, இன்பமோ இவை என்னை கட்டுப்படுத்திவிட முடியாது என்ற இலகுத்தன்மையோடு எங்கும் பரந்து விரிந்து சுதந்திரக் காற்றைப்போல் வாழ வேண்டும். அதுவே விழிப்புணர்வுடன் கூடிய பேரானந்தப் போதை தரும். அதுவே நலம் தரும் போதை. அப்போது அந்த புத்துணர்வை கட்டிப்போடக்கூடிய இத்தகைய போலியான மாயையினை ஏற்படுத்தும் போதைகள் தேவைப்பட மாட்டாது.
1,281 total views, 2 views today