“புறநானூறு படைத்த புலிகள்” 1986
-யூட் பிரகாஷ் அவுஸ்திரேலியா
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் போராட்டத்தில் பங்கெடுத்த ஆளுமை மிக்க இளைஞர்கள் அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் எடுத்த உடனடி முடிவுகள் தான் என்று பின்னர் அறிய வரும்போது மெய்சிலிர்க்கும்.
12 ஒக்டோபர் 1986ல் அடம்பனில் இலங்கை ராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீரமரணம் அடைகிறார். அந்தச் சமரில் விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள ராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்களையும் கைபற்றுகிறார்கள். சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் ஒன்பது ராணுவத்தினரின் உடலங்களும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு நல்லூரில் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரும் புலிகள் தங்களை கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் அழுது புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
அந்தக் காலப்பகுதியில் யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் தளபதியான கப்டன் கொத்தலா வலவுக்கும், மும்மொழிகளிலும் பரிச்சயமான புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரஹீமிற்கும் இடையில் தொலைபேசி தொடர்பாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. யாழ் வைமன் வீதியில் இருந்த டொக்டர் ஒருவரின் வீடு அப்போது புலிகளின் பாசறையாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த தொலைபேசியே இந்த சம்பாஷணைகளிற்கு பயன்பட்டது.
விடாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த இரு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கினை தாங்க முடியாமல், அவர்களின் அழுகையை நிறுத்த, புலிகளின் ரஹீம் கப்டன் கொத்தலாவலவிற்கு நல்லூரடியில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவரின் சகோதரியின் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைப்பெடுக்கிறார். கப்டன் கொத்தலாவல சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரஹீமிடம் கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் சடலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்கின்றார்.
“உங்களுக்கு வேணும் எண்டா கொண்டு வந்து தாறன்” என்று ரஹீமும் சும்மா பகிடியாகவே சொல்ல, கப்டன் கொத்தலாவல சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மேலதிகாரியை கேட்டு விட்டு வருகிறேன் என்கிறார்.
கப்டன் கொத்தலாவலவின் மேலதிகாரி கேணல் ஆனந்த வீரசேகர. இந்த கேணல் ஆனந்த வீரசேகர தற்பொழுது கோத்தாவின் அமைச்சராக இருந்து கொண்டு இனவாதம் கக்கும் சரத் வீரசேகரவின் அண்ணன். கேணல் ஆனந்த வீரசேகர இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் புத்த பிக்குவாக துறவறம் பூண்டு அம்பாறையில் வாழ்கிறார் என்பது தனிக்கதை அன்று பின்னேரம் ஆறுமணியளவில் சடலங்களை கோட்டை இராணுவ முகாம் வாசலில் கொண்டு வந்து தந்தால் தாங்கள் அவற்றை பொறுப்பேற்பதாக கேப்டன் கொத்தலாவல ரஹீமுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிக்கிறார்.
கோட்டைக்கு சென்று சடலங்களை ஒப்படைப்பது தேவையில்லாத வேலை என்றும், இதில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக புலிகள் முதலில் கருதுகிறார்கள். புலிகளை கிட்ட அழைத்து கொலை செய்து பழி தீர்க்க இராணுவம் தீட்டியிருக்கும் சதித் திட்டமாகவே புலிகள் நோக்குகிறார்கள். அப்படியானால் தான் தனி ஒருவனாகவே சென்று அந்த ஒன்பது சடலங்களை இராணுவத்திடம் ஒப்படைக்க முன்வருவதாக, யாழ்ப்பாண மாவட்டத் தளபதி கிட்டுவிற்கு ரஹீம் அறிவிக்கின்றார்.
அந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரச்சார முகமாக செயற்பட்ட ரஹீமை சிறைபிடிக்க இராணுவத்தின் சதித் திட்டமாக இந்த சடலங்கள் ஒப்படைப்பு அமைந்துவிடும் என்று புலிகளின் இளநிலைத் தலைவர்கள் தளபதி கிட்டுவை எச்சரிக்கிறார்கள். தளபதி கிட்டு ரஹீமிடம் மீண்டும் பேசுகிறார், இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்து கிட்டுவிற்கு நன்றாக புரிந்திருந்தது. ரஹீமோ மனிதாபிமான நோக்கத்துடன் எப்படியாவது சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டுவும் அரை மனதுடன் ரஹீமின் திட்டத்திற்கு சம்மதிக்கிறார்.
ரஹீம் மீண்டும் கப்டன் கொத்தலாவலவை தொடர்பு கொண்டு சடலங்களை கையளிக்கத் தானே வருவதாக தெரிவித்து விட, இருவரும் சடலங்களை ஒப்படைப்பதற்கான ஒழுங்கு முறைகளை இறுதி செய்து கொள்கிறார்கள்.
ஒன்பது இராணுவத்தின் சடலங்களும் சவப்பெட்டிகளில் போடப்பட்டு, ஒரு சிறிய ட்ரக்கில் ஏற்றப்படுகிறது. இராணு வத்தின் சடலங்களை சுமந்த ட்ரக் பிரதான வீதி வழியாக கொண்டு வரப்பட்டு யாழ் மத்திய கல்லூரி அருகாமையில் இருந்த புலிகளின் முன்னனி காவலரணிற்கு அருகாமையில் நிறுத்தப்படுகிறது.
நேரம் பின்னேரம் ஆறு மணி இருக்கும்… பண்ணைக் கடலில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்க, யாழ் நகரை இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. யாழ் நகரில் அரங்கேறப் போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை காண வரலாற்றின் கண்கள் மட்டும் அந்த இருட்டும் வேளையிலும் விழித்திருந்தன.
இராணுவத்தின் சடலங்கள் ஒப்படைப்பை ஆரம்பிக்க தாங்கள் தயாராகி விட்டதை கோட்டை இராணுவத்தினருக்கு அறிவிக்க, முன்னர் இணங்கியபடி, மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து புலிகள் பரா வெளிச்சம் ஒன்றை வானில் பாய்ச்சுகிறார்கள். கோட்டைக்குள் இருந்து இராணுவமும், பதிலுக்கு ஒரு பரா வெளிச்சத்தை ஏவ விட்டு சடலங்களை ஏற்கத் தாங்களும் தயார் என்பதை புலிகளிற்கு அறிவிக்கிறார்கள்.
சடலங்களை சுமந்த ட்ரக்கை மத்திய கல்லூரியடியில் விட்டு விட்டு, தன்னிடம் இருந்த சயனைட் வில்லைக்கு மேலதிகமாக பக்கத்தில் நின்ற போராளியொருவரின் சயனைட் வில்லையையும் வாங்கி அணிந்து கொண்டு, சடலங்களை ஒப்படைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க, ரஹீம் தனியனாக கோட்டை வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறார்.
இரண்டு சயனைட் வில்லைகள் கழுத்தை சுற்றியிருக்க, இடிந்தழிந்த யாழ் மாநகர சபைக் கட்டிடத்தையும், ஷெல்லடியிலும் சரியாமல் நின்ற தந்தை செல்வாவின் தூபியையும் தாண்டி, ரஹீம் கோட்டை வாசலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருக்க, கோட்டை இராணுவ முகாமருகில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது, ஆனால் புலிகளின் அணிகளோ அமைதி காக்கிறார்கள். புலிகள் சடல ஓப்படைப்பை தாக்குதல் திட்டமாக பயன்படுத்த போகிறார்களா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனே இராணுவம் அந்த வெடிப்பை செய்திருக்கலாம் என்று ரஹீம் ஊகிக்கிறார்.
கோட்டை முகாம் வாசலின் இராணுவ காவலரணை நெருங்கி விட்ட ரஹீம், தான் தனியவே வந்திருப்பதாக சத்தமிட்டு கத்துகிறார். இராணுவ முகாம் பக்கமிருந்து பதிலுக்கு கேணல் வீரசேகரவின் குரல் ஒலிக்கிறது. கோட்டை வாசலடியில் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் கீழ் தன்னை நிலைபடுத்தி, தான் நிராயுதபாணியாகவே வந்திருப்பதை கேணல் வீரசேகரவிற்கும் கப்டன் கொத்தலாவலவிற்கும் ரஹீம் தெரியப்படுத்துகிறார்.
ஒன்பது சடலங்களையும் தாங்கிய சவப்பெட்டிகள் ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து தரவா என்று முகாம் வாசலில் நின்றிருந்த இராணுவத் தளபதிகளிடம் ரஹீம் சத்தமாகவே கேட்கிறார். சடலங்கை ஒவ்வொன்றாக கொண்டுவரத் தேவையில்லை, சடலங்களைத் தாங்கியிருக்கும் ட்ரக்கை இராணுவ முகாமுக்கு அருகில் கொண்டு வருமாறு சற்றுத் தொலைவில் இருந்தே இராணுவத் தளபதிகளும் ரஹீமிற்கு சொல்கிறார்கள்.
மீண்டும் நடந்து புலிகளின் பகுதிக்கு வரும் ரஹீம், இராணுவத்தினரின் சடலங்களைத் தாங்கிய ட்ரக்கை முகாம் அருகில் கொண்டு வருமாறு கேணல் வீரசேகர கூறியதை தளபதி கிட்டுவுக்கு கூறுகிறார். கிட்டுவிற்கு இராணுவத்தில் மீதிருந்த சந்தேகம் இன்னும் முற்றாக விலகவில்லை.
ட்ரக்கை சநஎநசளந ல் மெல்ல மெல்ல ஓட்டிச் செல்லுமாறும், தானும் புலிகளின் அணியொன்றும் சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்து இருப்பர் என்றும் ரஹீமிற்கு கூறப்படுகிறது. இராணுவத்தினர் ரஹீமின் ட்ரக்கை தாக்கினால், புலிகளின் அணி திருப்பித் தாக்கத் தொடங்க, ரஹீம் டர்க்கை புலிகளின் பகுதிக்கு வேகமாக ஓட்டி வந்து விடலாம் என்பதே கிட்டரின் திட்டம்.
ஒன்பது இராணுவத்தினரின் சடங்களை தாங்கிய வாகனம் பிரதான வீதி வழியாக மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்குகிறது. கோட்டை முகாம் வாசலில் டரக்கின் நகர்வை இராணுவத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், இராணுவத்தின் அசைவுகளை சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த புலிகள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மெது மெதுவாக பின்னோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்த ட்ரக், கோட்டை இராணுவ முகாமின் முன்னரங்கில் இருந்த இரும்புக் கம்பித் தடுப்பில் மோதி நிறுத்தத்திற்கு வரவும், ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் பாய்ந்தடித்து ஏறி, வாகனத்திற்குள் புலிகள் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்யவும் சரியாக இருக்கிறது.
ட்ரக்கில் இருந்து இறங்கி வந்த ரஹீமை நோக்கி கேணல் வீரசேகரவும் கப்டன் கொத்தலாலவலவும் சிப்பாய்கள் சகிதம் இராணுவ முன்னரங்குகளைத் தாண்டி வருகிறார்கள். ரஹீம் தனது கழுத்தை சுற்றியிருந்த இரண்டு சயனைட் வில்லைகளை தடவிப் பார்த்துக் கொள்கிறார்.
ரஹீமிற்கு அருகில் வந்ததும் கேணல் வீரசேகர ரஹீமிற்கு கைலாகு கொடுத்து விட்டு, கட்டியணைத்துக் கொள்கிறார். கோட்டை முகாமை சுற்றி யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்புக்களை போரில் இறந்த இராணுவத்தினரின் சடலங்களை கையளிக்க, பகைமையை சில கணங்கள் மறந்து விட, அந்தக் கணங்களில் மனிதாபிமானம் மேலோங்குகிறது.
கைப்பற்றிய இராணுவத்தின் சடலங்களை கையளிக்க புலிகள் ஏன் முனவந்தார்கள் என்று தனக்கிருந்த சந்தேகத்தை கேணல் வீரசேகர ரஹீமிடமே நேரடியாக கேட்கிறார்.
வீரமரணமடைந்த போராளிகளின் வித்துடல்களை களத்தில் விட்டு வராத தங்களின் மாண்பை சுட்டிக் காட்டி விட்டு, தான் இறந்தாலும் தனது வித்துடலை கடைசியாக பார்க்க எவ்வாறு தனது அம்மா ஆசைப்படுவாவோ, அதே போல தானே இறந்த இந்த இராணுவத்தினரின் தாய்மாரும் விருப்பப்படுவார்கள், அதனால் தான் இந்த சடலங்களை கையளிக்கத் தாங்கள் முன்வந்ததாக ரஹீம் பதிலளிக்கிறார்.
வீரசேகரவும் கொத்தலாவலவும் ரஹீமுடன் அளவளவாவிக் கொண்டிருக்க, வாகனத்தில் இருந்த ஒன்பது சவப்பெட்டிகளையும் இராணுவ சிப்பாய்கள் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவின் இருள் அந்தப் பிரதேசத்தை கவ்வத் தொடங்கி விட்டது. சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த தளபதி கிட்டு தலைமையிலான புலிகளின் அணி சடலங்களை ஒப்படைக்க சென்ற ரஹீம் இன்னும் திரும்பாததை எண்ணி கவலை கொள்கிறது.
வோக்கி டோக்கியை கொண்டு வராமல் வந்திருந்த ரஹீமை, சுப்ரமணிய பூங்காவிற்குள் நின்றிருந்த புலிகள் சத்தமாக கத்தி கூப்பிடுவதை முன்னரங்கில் இருந்த இராணுவ வீரனொருவன் ஓடோடி வந்து தெரியப்படுத்துகிறான். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரஹீம், புலிகளின் அணி நின்றிருந்த சுப்ரமணிய பூங்கா அருகில் சென்று, ஒரு பிரச்சினையும் இல்லை, தான் கெதியில் திரும்பி விடுவேன் என்று தனது தளபதிக்கு அறிவிக்கிறார்.
பின்னர் இராணுவத் தளபதிகளுடனான தனது உரையாடல்களை முடித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, சடலங்களை கொண்டு போன டரக்கில் ஏறி மீண்டும் புலிகளின் பகுதிக்கு வர, ரஹீமை தளபதி கிட்டு ஆரத் தழுவி வரவேற்கிறார். அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான உதயன் பத்திரிகையில், முதல் நாளிரவு அமைதியாக நடந்தேறிய வரலாற்று சம்பவத்தை பற்றிய செய்தி பின்வரும் தலையங்கத்தில் பதிவாகியது.
“யாழ்ப்பாண நகரில் புதிதாக புறநானூறு படைத்த விடுதலைப் புலிகள்”
1,494 total views, 3 views today