தம்பட்டம்! நானும் எம்.ஜி.ஆரும்

மு.க.சு.சிவகுமாரன் 1965
105 வது பிறந்தநாள் 17.01.2022
1965 ஆண்டு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். எமக்கு பலாலி விமான நிலையம் குரும்பசிட்டியில் இருந்து கால்நடைத் தூரம்தான். விடியற் காலையிலே சென்றுவிட்டோம். எத்தனை மணிக்கு விமானம் வரும் என்று ஒன்றும் தெரியாது. கையில் கைத்தொலைபேசி, அப்போ இல்லை,நோண்டி நோண்டிப் பார்ப்பதற்கு. அங்கு எமக்கு நோண்டக் கிடைத்தவரோ எயாப்போட் கன்ரினில் வேலை பார்த்த நாகமுத்து மட்டுமே.
அவர் நினைத்தபாட்டுக்கு செய்தி சொல்வார், அது தீயாகப் பரவும். பின் சற்று நேரத்தில் புதுச்செய்தி கிளம்பும். அன்று அங்கு விமான நிலையத்தில், விமானம் நிறுத்த பெரிய கட்டிடம் அமைத்து வந்தனர். அரை வட்டமாக கம்பி கேடர்களால் அது அமைந்திருந்தது. நாம் புத்திசாலிகள் அல்லவா, புரட்சித்தலைவரை உயரத்தில் இருந்தால் எப்படியும் பார்த்திடலாம் என்ற நோக்கில் அதில் ஏறி அமர்ந்து கொண்டோம்.
மக்கள் திலகம் வந்து இறங்கி விட்டார். சனம் பெரிய இடத்துப் பெண் பட நோட்டிஸ் வாங்கவே காரை பின்னால் துரத்திக்கொண்டு இருந்த காலம், நேரில் வந்தால் விடுவார்களா?
எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் விமானத்தால் இறங்கும் முன்னம், மேல் படியில் நின்று கையசைத்துவிட்டு இறங்கினாகள்;. இறங்கியவர்கள் வாகனத்தில் ஏறி கையசைத்தபடி பலாலிவிதீயால் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டனர். எல்லோருக்கும் கையத்துச் சென்றார்கள்.
இவ்வளவும் அன்று பார்த்தவர்கள் சொன்னவையே. உண்மையில் மேல் கம்பி வளைவில் இருந்தபடியால் எம்மால் அசையமுடியவில்லை, மற்றவர்கள் எம்மை மறைக்க, மக்கள் திலகமும் கன்னடத்து பங்கிளியும்,பறந்தே சென்று விட்டனர். ஆனால் நாம் நண்பர்களுக்கு எல்லாம் பார்த்தாகவே சொல்லிவிட்டோம். மறுநாள் வீரகேசரி பார்த்தே சம்பவங்கள் யாவற்றையும் முழுமையாகக்கண்டு கொண்டோம்.
பலாலி வீதியில் நின்று இருந்தால்கூட ஒழுங்காப் பார்த்திருக்கலாம் என்ற கவலை இப்பவும் உண்டு. ‘எம்.ஜி.ஆர் நல்ல நிறமும்,அழகாவும் இருந்தார். ஒரு பக்கம் சரோஜாதேவியுடன் நின்றபடி எல்லோருக்கும் கையசைத்துக் கொண்டு சென்றார்’ என்று பார்த்தமாதிரி தம்பட்டம் அடித்தோம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சில அபூர்வமான படங்கள் கீழே!
1,234 total views, 4 views today