இந்திய – சீன வல்லாதிக்க போட்டியை இலங்கை எவ்வாறு கையாள்கின்றது?

இலங்கை மீதான தனது பிடியை இறுக்குவதற்காக இந்தியா புதிய உபாயங்களை வகுத்துச் செயற்படுகின்ற அதேவேளையில், சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபடமுடியாத நிலையில் இலங்கை இருப்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. தற்போதைய நிலையில், தாம் எதிர்கொண்டிருக்கும் பாரிய பொருளாதார – நிதிப் பிரச்சினையை சமாளிப்பதற்கு சீனாவையும், இந்தியாவையும் பயன்படுத்தும் ஒரு உபாயத்தை இலங்கை பயன்படுத்துகின்றதா என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிராந்திய வல்லாதிக்கப் போட்டிக்களத்தில் இலங்கை எந்தளவுக்கு மாட்டிக்கொண்டிருக்கின்றது என்பதை சீன வெளிவிவகார அமைசதுர் வாங் யீயின் கடந்த வார இலங்கை விஜயத்தின் போது தெளிவாக உணர முடிந்தது. இந்தியாவின் அழுத்தங்களுக்காக இலங்கை மீதான தமது பிடியை எந்தளவுக்கும் விட்டுக்கொடுக்க தாம் தயாராகவில்லை என்பதை இதன்போது சீன வெளிவிவகார அமைச்சர் உணர்த்தியிருக்கின்றார். இதற்கு புதுடில்லி எவ்வாறு எதிர்வினையாற்றப் போகின்றது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

இலங்கைக்கு கடந்த வாரம் அதிரடியான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தனது விஜயத்தின் இறுதியில் தெரிவித்த கருத்துக்கள்தான் இராஜதந்திர வட்டாரங்களில் சர்ச்சையைத் உருவாக்கியிருக்கிறது. கொழும்பில் அவர் தங்கியிருந்தது ஒரேயொரு பகல் பொழுதுதான். ஜனவரி 8 இரவு கொழும்பு வந்த அவர், மறுநாள் பகல் பல்வேறு சந்திப்புக்கள், நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் தாயகம் திரும்பிவிட்டார். கொழும்பில் அவர் தங்கியிருந்தது 24 மணி நேரத்துக்கும் குறைவாகத்தான். ஆனால், அவரது விஜயம் முக்கியமாக அவதானிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

‘இலங்கை – சீன உறவுகளில் மூன்றாவது தரப்பு தலையிடத் தேவையில்லை’ என்பதுதான் இலங்கைப் பயணத்தின் இறுதியில் அவர் சொன்ன கருத்து. மூன்றாவது தரப்பு யார் என்பதை அவர் பெயர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்காத போதிலும், அவர் இந்தியாவுக்குத்தான் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையில், அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்தியா அச்சமடைந்திருப்பது இரகசியமான ஒன்றல்ல. அதனைக் கட்டுப்படுத்துவதற்கான சில திட்டங்களை புதுடில்லி முன்னெடுத்துவருவதும் தெரிந்ததுதான். இந்தப் பின்னணியில்தான் சீன வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் பாணியில் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கையில் சீனா முன்னெடுத்துவரும் திட்டங்களை இந்தியா நுணுக்கமாக அவதானித்துவருவது தெரிந்ததுதான். குறிப்பாக வடக்கில் சீன நிறுவனங்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து தமது அதிருப்தியை புதுடில்லி பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்திவந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் காற்றாலை மின்சக்தி நிலையங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வெளிவந்த செய்திகளையிட்டு, இந்தியா தமது அதிருப்தியை வெளிப்படையாகவே பதிவு செய்திருந்தது.

இதனையடுத்து இந்தத் திட்டத்தை சீனா கைவிடுகின்றது என வெளிவந்த செய்திகளை யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் மறுத்திருந்தார். இந்தத் திட்டங்களைக் கைவிடும் திட்டம் எதுவும் இல்லை எனவும், திட்டமிட்டபடி அதனைச் செயற்படுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு மேலாக மன்னாரிலிருந்து இராமர் பாலத்தின் இந்திய எல்லை வரை விரைவு படகு ஒன்றில் சென்று அவர் பார்வையிட்டிருந்தார். இவை அனைத்தும் இந்தியாவை சீண்டும் செயற்பாடுகளாகவே அமைந்திருந்தன.

இந்தநிலையில்தான் இலங்கை வந்த சீன வெளிவிவகார அமைச்சர், ‘இலங்கை – சீன உறவுகளில் மூன்றாவது தரப்பு தலையிடத் தேவையில்லை’ என்ற கருத்தை முன்வைத்திருந்தார். தனது 24 மணி நேர விஜயத்தின் போது இரண்டு முக்கிய சந்திப்புக்களை சீன அமைச்சர் மேற்கொண்டிருந்தார். முதலில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை அவர் சந்தித்தார். இரண்டாவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அவர் சந்தித்தார். மாலையில் சீனாவினால் உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுகர் நகரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டிருந்தார்.

ஜனாதிபதியுடனான அவரது சந்திப்பும் முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. காரணம் இந்தச் சந்திப்பின்போது இரண்டு முக்கியமான கோரிக்கைகளை ஜனாதிபதி முன்வைத்திருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கை, சீனாவின் பிடி இலங்கையில் மேலும் இறுகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்திருப்பதைத்தான் உணர்த்தியது.

முதலாதாக – கொவிட் தொற்று நோய்க்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தினால், அது நாட்டுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அதேபோன்று, சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளின் போது சலுகை வர்த்தகக் கடன் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தால், கைத்தொழிற்றுறையைத் தடையின்றி சீராக நடத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்த விடயங்களைக் கவனத்தில் எடுத்த சீன வெளிவிவகார அமைச்சர் எதிர்காலத்தில் அவை நிறைவேற்றப்படும் எனப் பதிலளித்தார்.

இந்த இரு விடயங்களும் இலங்கை மீதான சீனாவின் பிடி மேலும் இறுகுவதற்கான வாய்ப்புக்களைத்தான் சுட்டிக்காட்டுகின்றது. இந்தியாவுடனான தமது பேரம்பேசும் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கான தந்திரோபாயமாக கொழும்பு இதனைப்பயன்படுத்துகிறதா என்ற கேள்வியும் உள்ளது.

ஆக, இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினை சீனாவின் பிடியிலிருந்து அது மீளமுடியாத ஒரு நிலையில் இருக்கின்றது என்பதைத்தான் சீன வெளிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுக்கள் உணர்த்தியிருந்தன.

கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கும், வட்டியைக் கட்டுவதற்கும் இலங்கைக்கு நிதி அவசரம் தேவையாக இருக்கின்றது. இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தற்போது கொடுக்கவுள்ள நிதி உதவி இதற்காகத்தான் பயன்படுத்தப்படப்போகின்றது. அதாவது, சீனாவுக்கு வட்டியைக் கொடுப்பதற்காகவே சீனாவிடம் கடனைக் கேட்கும் நிலையில் இலங்கை உள்ளது என்பதுதான் பரிதாபகரமானது.

சீன வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி முன்வைத்த இரண்டு கோரிக்கைகளும் சீனாவின் பிடியிருந்து இலங்னையினால் மீளமுடியாதிருப்பதை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. அதேவேளையில், ‘இலங்கை – சீன உறவுகளில் மூன்றாவது தரப்பு தலையிடத் தேவையில்லை’ என சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருப்பது, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடரப் போகின்றது என்பதற்கான ஒரு முன்னறிவிப்பாகவே கருதப்பட வேண்டும்.

இலங்கையில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கம் தொடர்பில் அண்மைக்காலமாக இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றது. தம்முடைய பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தல் என்ற வகையில் இந்தியத் தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு சீனா தயாராகவில்லை.

இலங்கையில் தம்மால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் அனைத்தும், வர்த்தக நோக்கததைக் கொண்டமைந்தவை என்பதே சீனாவின் உத்தியோகபூர்வ கருத்தாக இருக்கின்றநது. ஊதாரணமாக – யாழ்ப்பாணம் தீவுப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட காற்றாலை மின்சாரத் திட்டத்தில் சீன அரசாங்கத்துக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனவும், சீனாவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றே அதனை ரென்டர் – கேள்விப் பத்திரம் மூலமாகப் பெற்றிருந்தது எனவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார்.

அவர் என்னதான் சொன்னாலும், இலங்கையில் ரென்டர் மூலமாக திட்டங்களைப் பெற்றுக்கொண்ட சீன நிறுவனங்கள் அனைத்துமே அந்த நாட்டு அரசின் ஆதரவுடன் செயற்படுபவை. அல்லது சீன அரசினால் உருவாக்கப்பட்டவை. ஆக, அதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என சீன அரச தரப்பில் சொல்லப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இவை செயற்படுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்தப் பின்னணியில் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த இடத்திலுள்ள இலங்கையைப் பயன்படுத்திக்கொள்வதென்பது சீனாவுக்கு தவிர்க்க முடியாத ஒன்று. ஏதோ ஒரு வகையில் இலங்கையை அது தனது வலைக்குள் வீழ்த்திவிட்டது என்பது தெரிகின்றது. அந்தப்பிடியை தொடர்ந்தும் பேணுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது சீன வெளிவிவகார அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கை போதுமானது.

அதேவேளையில், சீனாவின் திட்டங்களுக்குள்ள அச்சுறுத்தல் இந்தியாதான். ஆதற்குப் பதிலடியாகத்தான் ‘இலங்கை – சீன உறவுகளில் மூன்றாவது தரப்பு தலையிடத் தேவையில்லை’ என்ற கருத்து சீன வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஒற்றை வசனத்துக்குள் நிறைய அர்த்தங்கள் உள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை சீன – இந்திய ஆதிக்கப்போட்டியைப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய நலன்களை – குறிப்பாக பொருளாதார நலன்களைப் பெறுவவதற்கான உபாயங்களை வகுக்கின்றது. இது உடனடியாக பலனைத் தரலாம் அனால். நீண்டகால அடிப்படையில் ஆபத்தானதாகவே முடியம்!

946 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *