சீரியல் பார்க்கும் பெண்களைக் கொஞ்சம் மட்டமான கண்ணோட்டத்தில் பார்ப்பதா?
பெண்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று
யாராவது ஆழ்ந்து யோசித்துப் பார்த்திருக்கிறோமா?
பிரியா இராமநாதன் -இலங்கை
“விடிஞ்சா இரவு தூங்கிற வரைக்கும் சீரியல் பார்த்துகிட்டே இருக்கவேண்டியது” இது இன்றுவரைக்கும் பல பெண்களை நோக்கி வைக்கப்படும் குற்றசாட்டு. உண்மையிலேயே இந்தப் பெண்கள் ஏன் டிவி சீரியல்களில்; இப்படி மூழ்கித் திளைத்துப்போய் உள்ளார்கள்? இந்தக் கேள்வி நீண்ட நெடு நாட்களாகவே பலரது மத்தியிலும் இருந்துவருகிறது. ஊடகங்கள் மனிதத் தொடர்புகளை வலுப்படுத்தும் சங்கிலிகள். தொலைகாட்சி வழியிலான தொடர்புகள் சாமான்யரையும் சென்றடையும் வலிமையான ஓன்று. தொலைக்காட்சிகள் இன்று அதிகப்படியாய் குறிவைத்துப் பிடிப்பதென்னவோ இளகிய மனம் படைத்த பெண்களைத்தான் போலும்! அவை ஒவ்வொன்றும் வணிக ரீதியில் ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் வெவ்வேறு நேரங்களில் விதம் விதமான சீரியல்களை ஒளிபரப்பி பெரும்பாலான பெண்களது சிந்தனைச் சிறகுகளை கட்டிப்போடுவதுடன், அவர்களது உழைப்பினையும் நாசமறுத்து வருகிறது என்றால் அது மிகையில்லை அல்லவா ? அட, எடுத்த எடுப்பில் இப்படி பெண்கள்மீது குற்றம்சாட்டிவிட முடியுமா? சீரியல் பார்ப்பதொன்றும் பாரதூரமான குற்றம் அல்லவே … நாள்முழுதும் வெளிவேலைகளில் மூழ்கிவிட்டு, வீட்டுக்கு வரும் ஆண்களோஃ பெண்களோ சீரியல் பார்க்கும் பெண்களை கொஞ்சம் மட்டமான கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் யதார்த்தம்.
ஆனால், இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று யாராவது ஆழ்ந்து யோசித்துப் பார்த்திருக்கிறோமா ?
இதுதொடர்பாக அண்மையில் நான் இணையத்தில் வாசித்த ஓர் விடயத்தினை இங்கே பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன், கல்வி என்பது கல்யாணச் சந்தையில் முன்னணியில் நிற்கவேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு என்றாகிவிட்ட நிலையில், படித்த பெண் வேண்டும் என்று தேடிக் கட்டிக்கொள்பவர்கள்கூட, திருமணதிற்குப்பின் குடும்பப் பொறுப்பு என்ற ஒன்றை முன்னிறுத்தி சிலர் பெண்களை அவள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் பணியில் இருந்து நிறுத்திவிடுகிறார்கள். இலட்சக் கணக்கில் சம்பாதிக்கும் ஆண்களைக்காட்டிலும் திறமையான பல பெண்கள் தொலைக்காட்சிக்குள்; புதைந்துபோய் கிடக்கிறார்கள். சரி, இவர்கள் ஏன் இப்படி விழுந்தடித்துக்கொண்டு சீரியல் பார்க்கிறார்கள்? இங்கேதான் மறைந்துகிடைக்கிறது ஓர் உண்மை …
பெரும்பாலான பெண்கள் தங்களுடைய வாழ்வில் ஓர் பிடிப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்க்காகவே சீரியல் பார்க்கத் தொடங்கிவிடுகின்றார்களாம்! இது, அன்றைய நாளை எதிர்நோக்கிக் காத்திருக்க ஒரு காரணத்தை அவர்களுக்கு உண்டாக்கிக்கொடுக்கிறதாம்!? என்ன நம்ப மறுக்கிறதா மனம்? நம்பித்தான் ஆகவேண்டும்,9.30கு சீரியல் ஆரம்பித்துவிடும் என்று, திட்டம்போட்டு வீட்டு வேலைகளை அவசர அவசரமாய் முடிப்பது, சமையலை தயார் செய்வது என்று இது ஒருவகையான மனநிறைவினை அவர்களுக்குக் கொடுக்ககூடியதாய் இருக்கிறதாம். மதியம் செய்தியறிக்கையின்போது சமையலறைக்குள் பாய்ந்து சென்று சாப்பிடுவது அலுவலகத்தில் “டரnஉh டிசநயம” இல் சாப்பிடும் ஒரு உணர்வையும் அவர்களுள் ஏற்படுத்துகிறதாம்! நான் ஒன்றும் வெட்டியாக இல்லை எனக்கும் முக்கியமான வேலை இருக்கிறது என்ற மனோபாவம் இவர்களை இப்படிச் செய்யத் தூண்டுகிறது என்று அந்த இணையக் கட்டுரை நீண்டிருந்தது .
நானும் யோசித்துப்பார்க்கிறேன், இதில் உண்மை இல்லாமலும் இல்லை … வீட்டு வேலைகளை மட்டுமே தலையாயக் கடமையாகக் கொண்ட பெண்கள் தங்களுடைய மிகப்பெரிய ஆறுதலாக இந்த தொலைக்காட்சித் தொடர்களை நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். தங்களுடைய அன்றாடப் பிரச்சினைகளை மறக்க ஒரு வடிகாலாக பல பெண்களுக்கு இந்த சீரியல்கள் துணை புரிகின்றனபோலும். சீரியலில் தோற்றுப்போகும் கதாப்பாதிரங்களை தன்னுடைய மாமியாராகவோ,நாத்தனாராகவோ,பக்கத்துவீட்டுப் பெண்ணாகவோ நினைத்துக் கொண்டு, ஜெயிக்கும் கதாபாத்திரங்களை தன்னுடைய பிரதிபலிப்பு என்று இவர்கள் நினைத்துக் கொள்கிறார்களாம். பெரும்பாலும் அரசியல், பொருளாதாரம், அல்லது வேறு ஏதேனும் தலைப்புகள் பற்றியெல்லாம் பேசப் பிடிக்காத பெண்கள், தங்களுக்குள் சந்தித்துப் பேசும்போது இந்த “சீரியல்” என்பது பொதுத் தலைப்பாகிவிடுகிறதாம். ஏன், அலுவலகப் பெண்கள்கூட தங்களுக்குக் கிடைக்கும் இடைவேளையில் சீரியல் பற்றிப் பேச தவறுவதில்லையே …இங்கே ஓர் விடயம்தனை கட்டாயம் குறிபிட்டாகவேண்டும், சிறு வயதிலிருந்தே நாமெல்லாம் யாரோ ஒருவர் கதை சொல்ல அதைக் கேட்டு வளர்ந்தவர்கள் , அல்லது தொடர்கதைகளை படித்து வளர்ந்தவர்கள். அடுத்து என்ன? என்ற ஆர்வம் ஃ தெரிந்துகொள்ளும் சுவாரஸ்யம் ஆண்களைக் காட்டிலும் அதிகமாக பெண்களுக்கே அதிகம் பிடிக்கிறது. பிறர் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் இயல்பாகவே பெண்கள் ஆற்படுகின்றனர். இதனால்தான் சீரியல்களில் வரும் கதாப்பாதிரங்களை யதார்த்தநிலை கடந்து நிஜமாகவே ஒருகட்டத்தில் நம்ப ஆரம்பித்துவிடுகின்றனர், இதனால்தான் அவர்கள் அழும்போது தாங்களும் சேர்ந்து அழுகிறார்கள் … அவர்கள் இன்னல்களைச் சந்திக்கையில் தாங்களும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். இதில் சிலர் அதில் வரும் சம்பவங்களை தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த ஃ நிகழ்ந்துகொண்டிருக்கின்ற சம்பவங்களை பொருத்திப் பார்த்து துன்பப்படுவதும் உண்டு இல்லையா ? காலையில் தொடங்கும் அழுது வடியும் சீரியல்களை அழுது வடிந்துகொண்டே சமையல் முதலான வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்து, இரவு உறங்கச் செல்லும்போதுகூட பதினோரு மணிக்கு ஒளிபரப்பாகும் இறுதி சீரியலில் நடக்கும் கஷ்டங்களையெல்லாம் பார்த்துவிட்டு அழுதுகொண்டே உறங்கச் செல்லும் பெண்களைக்கூட நாங்கள் சந்தித்திருக்ககூடும்.கண்ணீர், சோகம்,அனுதாபம்,என் பெண்களை சுலபமாக உணர்ச்சி வசப்படவைக்கும் கதைகளையே ஒவ்வொரு அலைவரிசையும் தேர்ந்தெடுக்கிறது .
எல்லா சீரியல்களிலும், சினிமாவில் வரும் ஆண்களைவிட அதீத வில்லத்தனத்துடன் பெண்களின் கதாபாத்திரங்கள் படைக்கப்படுகின்றன என்பதை நாமறிவோம்,ஆள் கடத்தல், அடியாள் வைத்து கொலை செய்தல், அடுத்த பெண்களின் கர்ப்பத்தைக் கலைத்தல், குடும்பங்களை சதி செய்து பிரித்தல், மற்ற பெண்ணின் கணவனை அடைய முயற்சி செய்தல்,என்று இந்த சீரியல் வில்லிகள் செய்யும் குற்றங்களின் பாவப்பட்டியல் நீண்டுகொண்டே போகக்கூடியது. பெண்கள் என்றாலே எப்போதும் சோகமாக, பிரச்சினைகளை சுமந்து திரிபவர்களாக,அழுது வடிபவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது இந்த சீரியல்களில் எழுதப்படாத விதி போலும்!
சில சீரியல்களை கடக்கவேண்டி ஏற்ப்படுகையில்,”ஐயோ…இதை எந்த ஆணாவது பார்த்தால், பெண்கள் எல்லோருமே இப்படித்தான் சகுனி வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள்” என்று எத்தனை ஆண்களின் மனதில் எதிர்மறையான எண்ணம்தனை உருவாகக்கூடும் என்று நினைத்து நொந்ததுண்டு. சமூகத்தில் நடப்பதைத்தானே காட்டுகிறோம் என்ற சீரியல் இயக்குனர்களின் சப்பைக்கட்டு ஏற்றுக்கொள்ளகூடியதாய் இருக்கிறதா? இன்னொரு பெண்ணின் கணவனை அடைவதற்க்காக சதி செய்வதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட பெண்களின் வெறித்தனம், “அவனை என் காலில் விழுந்து கதற வைக்கிறேன் பார்” என்றும்,” அவ எப்படி வாழ்ந்துடறான்னு பார்க்கிறேன்” என்றும் சொடக்குப்போட்டு பேசும் கதாபாத்திரங்களும் வெறுமனே ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிக்கான பாத்திரங்களாகப் பார்க்கப்படுவதில்லை. மாறாக,உண்மையான வாழ்வியல் உறவுப் பாத்திரங்களிடையே பிரதிபலிக்க ஆரம்பித்து விடுகிறது என்பதுதான் கசப்பான உண்மை. அது பெண்களில் ஒருவிதமான உளவியல் தாக்கத்தினை ஏற்ப்படுத்துவது உறுதி. அநேகமான நெடுந் தொடர்கள் குடும்பப் பிரச்சினைகளை மையமாகக்கொண்டே எடுக்கப்படுகிறது. ஆண்டுக்கணக்கில் தொடரும் இந்த தொடர்களின் மகத்தான வெற்றிக்கு காரணமும் இதுவே.
தன்னுடைய குழந்தைகளுக்கோ,கணவனுக்கோ சீரியல் முடிந்ததும்தான் சாப்பாடு என்று சொல்லும் பெண்களைக் கண்டிருக்கிறேன். இதைவிடக் கொடுமை என்னவென்றால் நிலாவைக் காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டிய காலம்போய்,சீரியல்களைக் காட்டி, அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயரைச் சொல்லி உணவூட்டும் தாய்மார்களை கண்ணுறுவதுதான்! விபரம் புரியாமலேயே அம்மாவோடு அமர்ந்து சீரியல் பார்க்க ஆரம்பிக்கும் குழந்தைகள் வாய் பேசத் துவங்கும்போதே சீரியல்களில் வரும் டைட்டில் சாங்ஸைக் கேட்டதும், அந்தத் தொடரின் பெயரை சொல்ல ஆரம்பித்துவிடும், போதாக்குறைக்கு அந்தப் பாடலை பாடியும் காட்டும். இதைப் பார்க்கும் அன்னைக்கோ ஆனந்தம் … என் பிள்ளை எவ்வளவு புத்திசாலி என்று,அதன் பின்விளைவு புரியாமலேயே பெருமிதப்பட்டுக் கொள்வதுதான் வேதனை. இந்தக் குழந்தைகள் ஆயிரம் கொலைகள், பாலியல் வல்லுறவுகள், ஆள் கடத்தல், குண்டு வெடிப்புகள், சாதிச் சண்டை, மதச் சண்டை, கள்ள உறவுகள், மாமியார் மருமகள் பிரச்சினைகள்,என்று உலகின் சகல தீமைகளையும் கண்டுகொள்கின்றனர். மேலும், குழந்தை தான் செய்யும் தவறுகளுக்கு தான் கண்ணுறும் சீரியல் பெரியவர்களையே முன்னுதாரணமாகக் கொண்டுவிடகூடிய அபாயமும் உண்டு இல்லையா? மணிக்கணக்காக சீரியல் பார்க்கும்போது நம்முடைய மூளை சிந்திக்கும் திறனை இழந்து மழுங்கடிக்கப்பட்டுவிடும், எதிர்மறையான எண்ணங்களும்,வீண் கற்பனைகளும்தான் நமக்கு மிஞ்சகூடும். மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்து உடல் எடையினை அதிகரித்துகொள்வதுடன், பார்வைக்கோளாறு போன்ற நோய்களையும் வாங்கிக்கொள்ளத்தான் வேண்டுமா?
921 total views, 3 views today