கிழக்கு மாகாணத்தில் 1600க்கும் மேற்பட்ட இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

-இரா.சாணக்கியன்

தமிழர்களை துன்புறுத்தும் வகையில் வனஇலாகாவும் தொல்பொருள் திணைக்களமும் செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழர்களும் தமிழ் பௌத்தர்களாக இருந்துள்ளார்கள் என்பதை வரலாறு கூறுகின்றது.ஆனால் இன்று பௌத்தமதம் என்றால் பெரும்பான்மையினத்துக்கு மட்டும் சொந்தமானது என்று பார்க்கும் நிலையென்பது மிகவும் கவலைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அப்பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

மட்டக்களப்பு,போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கு முன்னெடுக்கப்படும் மண் அகழ்வு நடவடிக்கைகள் குறித்து நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் அது தொடர்பில் கிராம மக்களுடனும் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் அம்மன் குளம் கிராமத்தில் காணப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற புல்லுமலையிலல் அமையப்பெற்ற ஹீ சக்தி வேலாயுதர் ஆலய வளாகத்தில் திடிரென்று சென்ற தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் கிராம வாசிகளுக்கு தெரியப்படுத்தாமல் ” இவ்விடம் தொல்லியல் இடம்” பதாதையை நட்டு சென்றுள்ளனர.; இந்த மலையில் ஆதியாக முருக வழிபாடு இருந்ததாகவும் இந்த முருகன் ஆலயத்தில் நேர்த்தியாக பல பக்த அடியார்கள் வந்து பூசை செய்வதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக சில பௌத்த மத பிக்குகள் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் அதன் பின்னர் தற்போது இவ்வாறு தொல்லியல் இடமாக பதாதைகள் நடப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அப்பகுதியை பார்வையிட்டதுடன் அது தொடர்பில் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.

இதேபோன்று விவேகானந்தபுரம் பகுதியில் 35குடும்பங்கள் கல்குவாரிகளில் கல் உடைத்துவாழ்வாதாரத்தினை முன்னெடுத்துவந்த நிலையில் தற்போது அவை நிறுத்தப்பட்டு அந்த கல்குவாரிகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச அமைப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கடந்த காலங்களில் கல்குவாரி நடாத்திவந்த 35குடும்பங்களும் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,தொல்பொருள் திணைக்களம் என்று கூறிவிட்டு அதற்குள் மக்கள் வரக்கூடாது என்று சொல்வதன் நோக்கம் அப்பகுதிக்குள் விகாரைகளை அமைப்பதற்காக கூட இருக்கலாம்.

இன்று கிழக்கு மாகாணத்தில் 1600க்கும் மேற்பட்ட இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவையணைத்தையும் அரசாங்கம் கையகப்படுத்தும் நிலையேற்பட்டால் தமிழர்களின் அனைத்து வழிபாட்டு இடங்களும் பறிபோகும் நிலையேற்படும்.

ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் தமிழர்களும் தமிழ் பௌத்தர்களாக இருந்துள்ளார்கள் என்பதை வரலாறு கூறுகின்றது.ஆனால் இன்று பௌத்தமதம் என்றால் பெரும்பான்மையினத்துக்கு மட்டும் சொந்தமானது என்று பார்க்கும் நிலையென்பது மிகவும் கவலைக்குரியது.

அதேபோன்று இப்பகுதியில் வன இலாகா என்ற போர்வையில் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது.ஆனால் மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான வனலாகா காணியை அதற்குரிய அமைச்சர் 500பேருக்கு மூன்று ஏக்கர் வீதம் பிரித்து வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.இதனை நான் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இது தவறான விடயம் அவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று கூறியபோது மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சரும் மௌனமாக இருந்தனர். ஆனால் இன்று விவேகானந்தபுரத்திற்குள்ளேயே வந்து பரம்பரை பரம்பரையாக தோட்டம் செய்துவரும் காணிகளை வனஇலாகா அபகரிப்பு செய்யும்போது இவர்கள் மௌனம் காப்பது என்பது கவலையான விடயமாகும்.
இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது இந்த நாட்டில் தமிழர்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்குமாக வனஇலாகாவும் தொல்பொருள் திணைக்களமும் செயற்படுவது மிக கவலையான விடயம்.இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இன்று கிழக்கை மீட்கப்போகின்றோம் என்று வந்தவர்கள் எல்லாம் அதனை மீட்கமுடியாமல் மக்களின் வயற்றில் அடிக்கும் வேலையையே செய்கின்றனர்.அவ்வாறு கிழக்க மீட்கப்போகின்றோம் என்று வந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச அமைப்பாளருக்கு 35குடும்பங்களின் வாழ்வாதார தொழிலை முன்னெடுத்த கல்குவாரியை நிறுத்திவிட்டு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதேபோன்றுதான் வேற்றுச்சேனையில் மணல் அகழ்வு நடவடிக்கையிலும் குறித்த அமைப்பாளரே ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

767 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *