மௌனத்தின் கூப்பாடு
- கோகிலா மகேந்திரன் -இலங்கை
ஓவியம்:கண்ணா
”அண்ணை ஒரு சிகரெட் தாங்கோ” கேட்டவன் இளைஞன். பக்கத்திலுள்ள சாப்பாட்டுக்கடையில் வேலை செய் பவன்தான். கேட்டதும் விலை குறைந்த ஒரு பொருள். என்றாலும் குரலில் ஒரு அதிகாரம் இருந்தது. அவனுக்குக் கேட்டது உடனே கிடைத்துவிட்டது. அவன் காசு கொடுத்ததையும் தெருவில் நின்ற இவர் காணவில்லை. தனக்கு ”மிக அவசரம் ”என்ற தொனியை அழுத்தமாகப் போட்டிருந்தான். சமையல் அடுப்பிலாக இருக்கும்!
மழை தூறுகிறது. இவர் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்.
இன்னொரு மத்திய வயதுப் பெண். நீண்ட நேரமாகவே ”கவுண்டர் ”இல் முதலாளிக்கு மிக அருகில் நின்று ஏதோ கதைக்கிறாள். ஒரு மீட்டர் இடைவெளி பற்றிக் கேள்விப் பட்டிருப்பாளோ தெரியவில்லை. ஒரு வாடிக்கையாளர் போய் மற்றவர் தொடங்குவதற்கிடையில் ஒரு வசனமாவது கதைத்து விடுகிறாள்.
படித்த குற்றம் இவர் நின்று கொண்டிருக்கிறார்.
அடுத்தவர் புதிய காரில் வந்து இறங்கினார். இந்தக் கடை முதலாளி அளவு ”தொந்தி ”இல்லாவிட்டாலும் ”நானும் முதலாளி ”என்பதைக் கார்க் கதவு திறந்த முறையிலும் சாவியைச் சுழற்றிக்கொண்டு நடந்த வகையிலும் உறுதிப் படுத்தினார். எந்தக் கேள்வியும் இல்லாமல் -இது ”பூட் சிட்டி ”இல்லை என்பதை நினைவில் கொள்க -கையில் சில பொருள்களைத் தூக்கினார். முதலாளி பவ்வியமாய் எழுந்து வந்து அவற்றை வாங்கி ”பாக் ” இல் போட்டு காரில் வைத்தார். ஐயாயிரம் ரூபாத் தாள்!. மீதி வழங்கப் பட்டது. கார் ஸ்டார்ட் !.
இவர் ”பென்ஷன் ”எடுத்த மறு நாளில் ஒரு நாள் ஐயாயிரம் நீட்டி ”சில்லறை இல்லாமல் ஏன் கடைக்கு வாற னீங்கள்”என்று வாங்கிக் கட்டியது நினைவுச் சுவட்டில் ஓடி மறைந்தது. மழை வலுக்கிறது. தெருவில் வந்த பஸ்ஸ{க்கு வழி விட்டு கடைப்பக்கமாக ஒதுங்கி நிற்கிறார். இப்போது மத்தியவயதுப் பெண்ணின் குரல் கேட்கிறது
.”அப்ப பச்சை மிளகாய் ஆயிரத்து நூறு குறையாதோ ?”
”இல்லை ”
”ஐம்பது கிராம் போடுங்கோ ” ”ஐஞ்சு கிராம் போடுவம் ”முதலாளியின் குரலில் எரிச்சல் !.அவள் அசடு வழிந்தாலும் சிரிக்கிறாள்.
அடுத்தவர் ”மோ பைக் ”நிறுத்திய ”ஸ்டைலில் ” அவரது உயர் பதவி தெறித்துக் கிளம்பியது.
”அங்கிள் ஒரு மூடை மா எடுத்து வையுங்கோ வாறன் ” ”இப்பவே கொண்டு போங்கோவன். ஒரு மூடை ஒருத்தருக்கும் குடுக்கிறேல்லை —” முதலாளியின் குரல் சுவிங்கமாய் இழுபட்டது. ”அப்ப தாங்கோ ”அவர் வேகமாய் நுழைந்து வெளியேறினார்.
இவர் கடையின் ஒற்றையடிப் பாதைக்குள் உள்நுழையும் முடிவுபற்றிக் கடுமையாய் யோசித்தார்.
”முக க் கவசம்,சமூக இடைவெளி,காற்றோட்டமுள்ள இடம் –”எண்ணங்கள் தடுத்தன.
இவர் நின்றுகொண்டிருக்கிறார்.
மத்திய வயது தொடர்கிறது .”கத்தரிக்காய் என்ன போடுறியள்?”
”ஐந் நூறு தானப்பா ” ”குறைக்கமாட்டியளோ?”
காலைமுதல் மதியம் வரை தெருவில் காத்திருந்த கிழவர் உள்ளே இறங்கினார். முதலாளி தொலைபேசியில் !
”நான் பத்துக் கேட்டனான். ஐஞ்சாவது அனுப்படாப்பா !” வாயிலுள்ள பாக்கை மென்றவாறு மொத்த வியாபாரியுடன் சிரித்துக் கதைக்கிறார்.
இவர் படித்த அமைதியான சுபாவம் கொண்ட ஓய்வுபெற்ற கௌரவமான மனிதர். இன்னும் நிற்பார்!
யாழ்ப்பாணத்தில் 288 ஆவது ஆண்டாக
தொடரும் நெற்புதிர் அறுவடை விழா!
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா 17.01.2022 காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் செல்வார்கள்.
அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தப் புதிர் விழா 288ஆவது ஆண்டாக இந்த வருடமும் கடைப்பிடிக்கப்பட்டது.
812 total views, 3 views today