‘உங்களுக்கான வாழ்க்கைத் துணைவர் எப்படியானவராக இருக்க வேண்டும்.’

இந்தக் கேள்வியை ஒரு பையனிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

இன்றைய நிலை

பெரும்பாலனவர்களிலிருந்து பெருமூச்சுத்தான் விடையாகக் கிடைக்கும். குடைந்து குடைந்து கேட்டால் “ஓலை பொருந்த வேணும், சீதனங்கள் சரிவர வேணும். பெட்டையும் லட்சணமாக இருக்க வேணும்'”என்ற விடை கிடைக்கலாம்.

பெண் பிள்ளைகளிடம் கேட்டால், “அப்பா அம்மா சொல்லுறதைத்தானே கேட்க வேண்டும்” என்பார்கள்.

மறுதலையாக பதின்மங்களிலேயே கண்டதும் காதல் எற்படுகிறது. பருவக் கிளர்ச்சிகள் சிந்தையில் முந்துகின்றன. பாலியல் கிளர்ச்சியை வாழ்க்கைத் துணை தேடுவதிலிருந்து பிரித்தறிந்து புரிந்து கொள்ளாத வயதில் “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?..” என்று சிந்திப்பது மறுபுறம் நடக்கின்றன.

ஓலைப் பொருத்தம் அறிவியலுக்கு ஒவ்வாதது

காதல் திருமணங்கள் அதிகமாகிவிட்ட காலகட்டம் இது. இருந்தபோதும், சாத்திரமும், சாதி, சமூக, பொருளாதார அம்சங்களும்தான் திருமணப் பொருத்தத்தின் மிகப் பெரிய அம்சமாக எமது சமூகத்திலிருப்பதை கவலையோடு ஏற்க வேண்டியிருக்கிறது.

ஆனால் அவ்வாறு மந்தை ஆட்டு மனப்பான்மையில் தொடர்ந்து இருப்பது சமூக முன்னேற்றதிற்கோ தனிப்பட்ட ரீதியான நிறைவான வாழ்விற்கோ பொருத்தமானதாகத் தெரியவில்லை.

தேர்ந்தெடுப்பதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் அது வெறுமனே உணர்வு பூர்வமானதாக இல்லாமல் அறிவு பூர்வமாகவும் இருக்க வேண்டும்.

பேசுங்கள் பழகுங்கள் அவதானியுங்கள்

உங்களுக்கான துணைவரைத் தேடுவதின் முதல் அம்சம் அவருடன் பேசுவதுதான். இதுவே பரஸ்பர புரிதலுக்கான முதற்படி. பேசுவது மட்டுமின்றி சற்றுப் பழகினால் மேலும் நல்லது. தெளிவாகவும் திறந்த மனத்துடனும் பேசுங்கள்.

பேசுவதற்கு மேலாக அவனையோ அவளையோ நன்கு அவதானியுங்கள். மகிழச்சியானவனா, சிடுமூஞ்சியா, சந்தேகப் பேர்வழியா, சகசமாகப் பழகக் கூடியவரா, தெளிவாகத் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்பவரா அல்லது அமுசடக்கியா போன்றவற்றை அவதானியுங்கள். அந்தக் குணாதசியங்கள் உங்களது இயல்புகளுடன் இசைந்து போகக் கூடியவையா என்பதை அனுமானித்துக் கொள்ளுங்கள்.

கலந்து பேசுவாரா?

கலந்து பேசக் கூடியவராக இருப்பது அவசியம். உங்கள் இருவரிடையோ அல்லது குடும்பத்திற்குப் பொதுவானதாகவோ ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அது பற்றிக் கலந்துரையாடி முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பது அவசியம். ஒற்றைப் போக்கில் தானே திடீர் முடிவுகள் எடுப்பராயின் பின்னர் பல பிரச்சனைகள் தோன்றலாம்.

அதே போல உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட பிரச்சனை சஞ்சலம் போன்றவை ஏற்படுமாயின் அவற்றிக்குக் காது கொடுத்துக் கேட்பராக இருக்க வேண்டும். துயர் மேவி கண்ணீர் சிந்தும்போது தோள் கொடுத்து ஆதரவு அளிப்பவாராக இருப்பவராக இருக்க வேண்டும்.

அன்பு ஆதரவு விட்டுக் கொடுப்பு

மனதில் அன்பும் ஆதரவும் நிறைந்தவரா என்பதைக் கண்டறிய முயலுங்கள். அவரது குடும்பச் சூழல் எவ்வாறானது. பெற்றோர் மற்றும் சகோதரங்களுடன் சுமுகமான உறவு இருக்கிறதா, விட்டுக் கொடுப்புடன் பழகக் கூடிய தன்மையுள்ள குடும்பச் சூலிலிருந்து வந்தவரா போன்றவற்றை கதையோடு கதையாகத் தெரிந்து கொள்ளுங்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மறைந்து போய்விட்டபோதும் குடும்ப மற்றும் உறவினர்களது தொடர்புகளும் தலையிடுகளும் குறைந்துவிடாத எமது சூழலில் குடும்பப் பின்னணி முக்கியமானது.

கருத்து ஒருமையும் புரிந்துணர்வும்

சில அடிப்படையான விடயங்களில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.

குழந்தைகள் விடயம் முக்கியமானது. குழந்தைகள் வேண்டுமா, எவ்வளவு காலத்தின் பின் வேண்டும் போன்றவற்றில் ஓரளவேனும் புரிந்துணர்வு வேண்டும்.

அதேபோல மத நம்பிக்கைகள், மொழி, இனம், சாத்திர சம்பிரதாய பழக்க வழக்கங்களில் கடுமையான பற்றுக் கொண்டராக நீங்களோ அவரோ இருந்தால் அதில் நிச்சயம் ஒருமைப்பாடு வேண்டும். இல்லையேல் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல, மண முடித்த புதிதில் இல்லாவிட்டாலும் பிற்பாடு முரண்பாடுகள் தோன்றவே செய்யும்.

இருந்தபோதும் உங்கள் இருவரிடையேயும் சிற்சில வேறுபாடுகளும் இருப்பதும் வாழ்வைச் சுவார்ஸமாக்கலாம். உணவு உடை நிறம் போன்ற பல சாதாரண விடயங்களில் விருப்பு வேறுபாடுகள் இருப்பதானது விட்டுக் கொடுப்பு மனப்பான்மையை வளர்க்க உதவும். அத்தோடு தினமும் விடிந்தால் பொழுதுபட்டால் வாழ்க்கை ஒரே விதமாக அமைந்து சலிப்பு அடையாமல் இருப்பதற்கும் உதவும்.

நகைச்சுவை உணர்வு

நகைச்சுவை உணர்வு உள்ளவர் விரும்பத்தக்கது. வாழ்க்கைப் பயணத்தின் தடங்கல்களையும் சலிப்புகளையும் சுலபமாகத் தாண்ட வல்ல வலுவானது நகைச்சுவைக்கு உண்டு. தமது வாழ்க்கையைத் தாங்களே கிண்டலாக விமர்சித்;துச் சிரிப்பவர்கள் வாழ்வில் கவலையே அண்டாது. தான் மட்டும் சிரிக்காமல் உங்களையும் சிரிக்க வைக்கக் கூடியவராயின் வாழ்க்கை ஓடம் சிலிர்ப்புடன் மிதந்தோடும்.

சொற்களால் மகிழ்வதும் மகிழ்விப்பதும் நல்லதுதான். ஆயினும் ஸ்பரிசமும் தொடுவகையும் ஆதரவான வருடலும், தோளில் முகம் புதைத்தலும் பலருக்கு தங்கள் மீதான மற்றவரது அன்பை உணர்த்துவதாகவும், தங்களின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்துவதாகவும் உணர்வர். மாறாக சிலர் ஒருவர் மீது மற்றவர் முட்டுவதே வெட்கக் கேடான செயல்பாடாக எண்ணுவர். நீங்கள் எந்த ரகம். உங்களுக்கு ஏற்றவரைத் தேர்ந்தெடுங்கள்.

புகைப்பவரை அறவே ஒதுக்குங்கள். புகைப்பவராயின் வாழ்;க்கைப் பயணத்தில் அரை வழியில் உங்களை விட்டுவிட்டு நோயோடும் மரணத்தோடும் போராடி அவர் விடைபெற நேரலாம் என்பதை மறவாதீர்கள்.

கல்விப் பொருத்தம்

சோடிப் பொருத்தத்திற்கு கல்வித் தகமை மிக முக்கியமானது அல்ல. இருந்தபோதும் அது உங்களிடையே போட்டி பொறாமைகளுக்கு இடம் அளிப்பதாக இருக்கக் கூடாது. மிக உயர்ந்த கல்வித் தகமையுடையவர் மிகக் குறைவான கல்வி அறிவுள்ளவரை மணக்கும்போது தான் உயர்ந்தவர் மற்றவர் ஒன்றும் தெரியாத மக்கு என்ற மேலாண்மை உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு. இது நாளடைவில் பல மனக்கசப்புகளை வளர்க்கும்.

தொழில் ரீதியாக

அதேபோல ஒரே விதமான வேலையும் சிலரிடையே போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தலாம். இருந்தபோதும் புரிந்துணர்வுள்ள சோடிகளிடையே ஒரே விதமான கல்வியும், ஒரே விதமான தொழிலும், ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் ஊடாக இருவருக்குமே நன்மை பயக்கக் கூடும். தொழில் ரீதியான சந்தேகங்களைத் தீர்;க்கவும் பரஸ்பரம் உதவி செய்து மேம்பாடடைய கைகொடுக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை..

ஒரே இடத்தில் தொழில் புரிபவரைத் தேர்ந்தெடுப்பது உகந்ததல்ல. அதுவும் ஒருவர் அதிகாரி தரத்திலும் மற்றவர் பல ஊழியர்களில் ஒருவராகவும் தொழில் புரியும்போது மண உறவு ஏற்படுமேயாயின் சக ஊழியர்களிடையே தவறான அபிப்பிராயங்களுக்கு வித்திடும். அவர் மேல் அதிக கரிசனை காட்டுவதாக அல்லது அதீத சலுகைகள் கொடுப்பதான குற்றச்சாட்டுக்கள் ஏற்படும்.

புதிய ஒருவரைப் புரிந்து கொள்வதற்கு ஓரிரு சந்திப்புகள் போதாது. ஒரு சில மாதங்களாவது பழகிய பின்னர் தான் அவர் எப்படிப்பட்டவர் என்று கணிக்க முடியும். அதன் பின்னரே அந்த நட்பு திருமணம் மட்டும் போகலாமா எனத் தீர்மானிக்க முடியும்.

ஆனால் எமது சமூகச் சூழல் இன்னமும் அந்தளவு பரந்த மனப்பான்மையுடன் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளவே வேண்டும். ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தாலே முடிச்சுப் போட்டுப் பேசுவார்கள்.

தரகர்களும் தாய் தந்தையரும் மட்டுமே பேசி முடிவெடுக்கும் நிலமைதான் பெரும்பாலும் இருக்கிறது. கிராமப் புறங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

கால அவகாசம்

எவ்வாறாயினும் யாராவது உடனடியாக திருமணத்தை முடிக்க வேண்டும் என்று சொன்னால் சற்று அவதானமாக இருங்கள். கபடமான உள் நோக்கம் இருக்கக் கூடும். சுற்றுக் கால அவகாசம் கேட்டு அவதானித்து முடிவிற்கு வருவதே நல்லது.

உங்கள் பார்வைக்கு எல்லாம் சரிபோலத் தோன்றினாலும் பிற்பாடு புதிய தகவல்;கள் வெளிப்படலாம். எனவே திடீர் முடிவு எடுக்காதீர்கள்.

அப்படியால்லாமல் நீங்கள் தேர்ந்தெடுத்தவர் உண்மையிலேயே பொருத்தமானவராக இருந்தாலும் கூட, கால ஓட்டத்தில் ஏதாவது புதிய பிரச்சனைகள் தோன்றலாம். ஆனால் அது எதிர்பாராதது. அந் நேரத்தில் ஏமாற்றிப் போட்டாய் என்று குற்றம் சாட்டாமல் புரிந்துணர்வுடன் சிக்கலைத் தீர்க்க வேண்டும்.

மருத்துவ ரீதியாக

மருத்துவ ரீதியாக மிக நெருங்கிய சொந்தத்தில் மணம் முடிப்பது நல்லதல்ல. பரம்பரை நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும். மச்சான் மச்சாள் திருமணங்கள் இங்கு பரவலாக இருந்தாலும் இப்பொழுது குறைந்து வருகின்றன. நெருங்கிய உறவினர் திருமணத்தால் பல விதமான பரம்பரை அலகு தொடர்பான நோய்கள் வரலாம். பிறவியிலேயே வரும் இருதய நோய்கள், அங்கக் குறைபாடுகள், மூளை மற்றும் நரம்பியல் நோய்களே அத்தகையவை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

984 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *