காதல் செய்வீர் உலகத் தீரே!
-கலாசூரி திவ்யா சுஜேன்- இலங்கை
காதல் செய்வீர்;உலகத் தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்?
திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது போல பாரதியின் வரிகளுக்குள் இழையோடும் காதலில் துய்த்து துறந்து இன்புறாமால் எவரும் இருக்க முடியாது. அமைதியின் அடிவாரத்தில் குதூகலிக்கும் ஆடல் போல, அன்பின் வழியது உயிர்நிலையாகி வழிகிறது காதல்.
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.காதலின் மொழிக்கு முன்னால் உலகத்து மொழிகள் யாவும் அடங்கிச் சரணடையும். அங்கு பேசப்படுவதெல்லாம் இருவிழி ஜன்னல் வழி ஆத்ம நூலை பருகிக்கொண்டிருக்கும் ஏகாந்த மொழி.
குறிப்பினிலே ஒன்று பட்டு , கூட்டுக் களியினிலே பாட்டும் கூத்தும் என இன்ப புரிக்கு கூட்டிச் செல்லும் காதல் சுவையை சொற்களுக்குள் அடக்கும் வித்தை அறிந்தவர் பாரதி
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்?
காதலினர்ல் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.
காதல் கொள்வதே இவ்வுலகில் கிடைக்கப்பெறுகின்ற முதன்மையான மிகப் பெரிய இன்பம் என்று உணர்ந்து உரைக்கும் பாரதி அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தேவர்களுக்கு கூட மாதரின்பம் போல பிறிதொரு இன்பம் உண்டோ ? என்று சொல்லி வியக்கிறார்.
வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சதி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.
ஆம், உயிரினும் இந்த பெண்மை இனிதடா என்று கொண்டாடியவர் எப்போது மனைவிக்கு கடிதம் எழுதினாலும் எனதருமைக்காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம் என்று சொல்லித்தான் ஆரம்பிப்பார், ‛உனதன்பன்’ என்று கூறித்தான் முடிப்பாராம்.
தேடிக் கிடைக்காத சொர்ணமே உயிர்
சித்திரமே மட அன்னமே
கட்டியணைத் தொரு முத்தமே –
தந்தால் கை தொழுவேன் உனை
நித்தமே!’
மிக பெரிய அதிசயமாய் , எப்படி எவ்வாறு எங்கு எப்போது தோன்றியது என எண்ண எண்ண வியக்க வைக்கும் அரிய பொருளாய் இருக்கிறது முத்தம். ஆதலினால் இவ்வுலகில் பகைமை ஒழியும். காதல் களியில் கலி தீரும்.
காதலிலே இப்மெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணுவாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ?
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும் என்ற வள்ளுவன் வாசகத்திற்கு இணங்க ஆரத் தழுவி அமர நிலை காண்போம் என அடிக்கடி சொல்லி தன்னை இழக்கிறார் பாரதி
வனத்தின் வாசமும் வானத்தின் வண்ணமும் வீசிக்கொண்டு வரும் வரம் காதல். பிரபஞ்சத்தின் முழு நிலவு காதல். கடலலை நடுவே நாட்டியமாடும் வெண்திரை போல ஆத்மாவின் அமைதியில் கூத்தாடிக்கொண்டிருக்கிறது காதல்.
உவமையில் அரியாய், உயிரினும்
இனியாய் என்று மையல் கொள்ளும்
போது ஒரு பெண்ணின் காதலை
பெறக்கூடிய ஆண் தான் இப்புவியில்
மிகவும் அதிஷ்டசாலி ஆகிறான்.
ஒருவருடனான காதல், பலரோடும்,
பலவற்றோடும்,
இப்பிரபஞ்சத்தோடும் என விரியும்
போது தென்படும் வெளியில் வாழ்க
காதல் என்று கூத்தாடியவர் பாரதி.
காதலித்து பார் ” என்பதற்கும் காதலாகி கிடத்தல் என்பதற்குமான வித்தியாசாத்தை உணர்த்தவல்ல உன்னதமாய் ஜொலிக்கிறது பாரதியின் காதல்.
” பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா “
வாழ்தலை இனிதென ஆக்குவது காதல், ஆதலால் காதல் செய்வோம் வாழ்வோம். செவ்விது செவ்விது செவ்விது காதல் .
1,043 total views, 3 views today