பயத்துடன் பயணிக்கிறது பொழுதுகள்
-பிரியா.பாலசுப்பிரமணியம்-இலங்கை
சர்வதேசரீதியில் பாரிய பிரச்சினைகள் தலையெடுத்துள்ளன.நோய்த் தொற்று,பொருளாதார வீழ்ச்சி,உணவுத் தட்டுப்பாடு,குடும்பப்பிரச்சினைகள்,அரசியல் பிரச்சினைகள்
எனப் பல சிக்கல் சூழ் வாழ்வியலுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
கொரோனா மிகப் பெரும் அச்சுறுத்தலாக இப்போது உருவெடுத்திருக்கிறது.இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான மிகப் பெரும் சவாலாக இந்நோய்த் தொற்று உருமாறியிருக்கிறது
இந்நோய்த் தொற்று அரசியல் சமூக பொருளாதார கட்டமைப்பில் குழப்ப நிலைகளை உருவாக்கியுள்ளது
நோய்த் தொற்றுக் காலப்பகுதியில் நோய்ப் பரவலை கட்டுப் படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பிரயத்தனங்கள் யாவும் உள்நாட்டு சமூக பொருளாதார நடவடிக்கையில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டைமுடக்குதல், ஊரடங்கு,மட்டுப் படுத்தப்பட்ட பொதுச்சேவைகள், வெளிநாட்டுப் பயணங்களில் தடை,துறை முகங்களை மூடுதல் எனப் பல முடக்கங்களால் மக்கள் முடங்கிப் போனார்கள்.
நோய்த்தொற்றை சமாளிப்பதா,பொருளாதார மாற்றத்தை சமாளிப்பதா,குடும்பப் பிறழ்வை சமாளிப்பதா,மன அழுத்தம் நிறைந்த சூழலுக்குள் எல்லோரும் இருக்கையில் யார் யாருக்கு ஆதரவாக தோள் கொடுக்க முடியும்.
போர்ச்சூழலில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் அடுத்த பாதிப்பு.திரும்பும் இடமெல்லாம் ஏதோ ஒரு பீதி தொற்றிக் கொள்கிறது.சமையல் எரிவாயு பற்றி சிந்திக்கவே பயமாக இருக்கிறது.செறிமானத்தின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் பல வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறுகின்றன.சமையலறைப் பக்கம் போகவே அச்சமாக இருக்கிறது.
முன்னர் மக்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட முடிந்தது.தமது அன்றாட உணவுத் தேவைக்கான தெரிவுகளை நேரில் சென்றே பார்த்து வாங்கிக் கொண்டனர்.ஆனால் தற்போது முற்றிலும் மாறி இணையத்தினூடாக தெரிவு செய்து பெற்றுக் கொள்கின்றனர்.இதனால் தரம் விலை பற்றிய அதிருப்திகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
சமூகத்தில் நிகழ்கின்ற நல்லதோ கெட்டதோ எதுவாயினும் ஒன்று கூடி நிகழ்த்த முடியாத நிலை. ஒன்று கூடினால் நோய் தொற்றும் என்ற அபாயம் ஒரு பக்கம். போகா விட்டால் என்ன நினைப்பார்களோ என்ற மனப் போராட்டம் மறு பக்கம்.
மாணவர்களின் கல்வி நிலையிலும் கற்பித்தலிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.வீட்டிலிருந்தபடியே கற்கின்றனர். இதனால் தொலைபேசியின் பாவனை அவர்களிடையே அதிகமாகியுள்ளது.இணையவழிக் கல்வியின் நன்மை ஒருபக்கமிருக்க தீமையும் இருக்கிறது.பெற்றோரின் கவனம் பிள்ளைகளில் இருந்து சிதறும் தருணத்தில் அவர்களின் பாதை தடம் மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக காணப்படுகின்றன.
குடும்பப் பிரச்சினைகள் மிக அதிகமாக இக் காலப்பகுதியில் நிகழ்கின்றன.வீட்டுக்குள்ளேயே நாட்களை கடத்தும் சூழல் அதிகமாக காணப்படுவதனால் குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் மன அழுத்தம் ஏற்பட்டு குடும்ப அமைதி குலைந்து விடக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
அரசியல் மீதான நம்பிக்கையின்மையையும் மக்களின் கருத்துக்களில் இருந்து உணரமுடிகிறது. மக்களால் மக்களுக்கான ஜனநாயக ஆட்சியில் உரிமைகள் மீறப்படுவதும் அநீதிகள் நடந்தேறுவதும் சர்வசாதாரணமாகி விட்டது. கேள்வி கேட்கத் துணிவின்றி பேச்சுச் சுதந்திரமற்று பயத்தோடு வாழ்கின்றனர். இது முடிவல்ல தொடர்.
1,077 total views, 3 views today