பெண்களின் தோளில் கை போடலாமா?
- சேவியர்
ஆண்கள் பெண்களின் தோளில் கை போடுவது ஆணாதிக்கத்தின் அறிகுறி என பிரபல நடிகை ஹெலன் மிரான் கொளுத்திப் போட்ட திரி ஆங்காங்கே அன்று பற்றி எரிந்து கொண்டிருந்தது.
மனித வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஆணாதிக்கத்தின் கூறுகள் எல்லா இடங்களிலும் பரவிக் கிடப்பதைப் பார்க்கலாம். சமூக அந்தஸ்து, கருத்து மரியாதை, பணியிட நிராகரிப்புகள், தலைமை மறுப்புகள், சமநிலையற்ற ஊதியம் என பெண்களுக்கு எதிரான நிலைப்பாடுகள் பல இடங்களில் இன்றும் தொடர்கின்றன.
பெண்களுக்கு சமூகத்தில் சமமான அந்தஸ்து வேண்டும் என்று கேட்பது கூட ஒருவகையில் ஆணாதிக்கம் தான். காரணம், பெண்கள் ஆண்களை விட அதிக அந்தஸ்து பெறுவதிலும் எந்தத் தவறும் இல்லையே ? ஏன் சமமான அந்தஸ்துடன் நின்று விட வேண்டும் ? தொடர்ந்து மேலே செல்லலாமே !
அதே நேரத்தில் அன்பின் வெளிப்பாடுகளாய் செய்கின்ற செயல்களைக் கூட ஆணாதிக்கம் எனும் கூட்டில் இட்டு அடைப்பது நேசத்துக்கு எதிராக எறியப்படும் ஆயுதம் என்றே நான் நினைக்கிறேன். பெண்களின் தோளில் கைபோட்டு நடக்கும் தம்பதியரில் நூற்றுக்கு 99 சதவீதம் பேர் இப்படி ஒரு கோணத்தின் யோசித்திருக்கவே மாட்டார்கள். இனிமேல் அத்தகைய அன்னியோன்யத் தம்பதியரின் மனதில் இப்படி ஒரு விஷ எண்ணம் முளைக்கும். ஒருவகையில் சமூக அன்னியோன்யத்தின் வேர்களில் ஒரு சந்தேகக் கோடரியை வைத்திருக்கிறார் ஹெலன்.
ஆண்கள் சாதாரணமாகவே சற்று உயரமானவர்கள், பெண்களின் தோளில் கை போடுவது அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது. பெண்கள் ஆண்களின் இடையில் கை போட்டு நடப்பதோ, கை கோர்த்து நடப்பதோ இயல்பாக வருகிறது. ‘இடையில் கை போடுவது, இடையிடையே சண்டை போடுவேன் என்பதன் அறிகுறி’ என யாரும் சொல்வார்களோ என்று பயமாக இருக்கிறது.
கணவன் மனைவி அன்பு, அல்லது ஆண் பெண் அன்பு என்பது சில வரையறைகளுக்குள் அடக்கி விட முடியாதது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். தனது காதலன் தோளில் கைபோட்டு நடக்க வேண்டும் என விரும்பும் பெண்கள் உண்டு. தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும் என விரும்பும் காதலர்கள் உண்டு. மனம் என்ன விரும்புகிறதோ, அதையே செயல்கள் செயல்படுத்துகின்றன.
ஹெலனுடைய ஆழ் மனதில் ஆணாதிக்கத்தின் ஏதோ ஒரு பாதிப்பு தன்னையறியாமல் உறைந்திருக்கலாம். அத்தகைய எண்ணங்கள் வலுவடைந்து இத்தகைய சிந்தனைகளாய் வெளிவரலாம். உளவியல் இதைத் தான் சொல்கிறது.
திருமண உறவு வலுவடைய தீண்டல் மிகவும் அவசியம். கைகோர்த்து நடப்பதோ, அரவணைத்துக் கொள்வதோ, தோளில் கைபோடுவதோ அத்தகைய அன்னியோன்யத்தை பாச நீர் ஊற்றி வளர்க்கின்றன. உரையாடல்கள் எனும் காற்றில் அவை பச்சையம் தயாரிக்கின்றன. புரிதல் எனும் பின்னணியில் அவை கனிகளை விளைவிக்கின்றன. பேசுதல், செவிமடுத்தல், தொடுதல், பகிர்தல், புரிதல் இவையெல்லாமே திருமண உறவை உறுதிப்படுத்தும் அன்பின் கிளைகளே.
குறிப்பாக தொடுதல் என்பது உறவுகளில் மிக முக்கியமானது. அதனால் தான் எத்தனை தான் நெருக்கமாய் நினைத்துக் கொண்டாலும் டிஜிடல் உறவுகள் நிலைப்பதில்லை. அம்மாவின் வியர்வை விழுந்த இன்லன்ட் லெட்டரைப் போல எந்த மின்னஞ்சலும் நமது உயிரின் கதவைத் திறப்பதில்லை.
குழந்தை வளர்ப்பில் இந்த தொடுதலை மிகவும் முக்கியப்படுத்துகிறார்கள். கமலஹாசனின் வசூல்ராஜா எம்பிபிஎஸ் சொன்ன ‘கட்டிப்புடி வைத்தியம்’ அறிவியல் பூர்வமானது. ஒரு குழந்தையை பெற்றோர் பன்னிரண்டு முறை கட்டியணைப்பது அவர்களுடைய உடல், உளவியல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்கின்றன ஆய்வுகள்.
கணவனின் கைகள் தொடவே இல்லை என்று கவலைப்படும் பெண்கள் இருப்பார்களே தவிர, கணவன் தீண்டுகிறான் என பதறும் பெண்கள் இருக்க மாட்டார்கள். காரணம், தொடுதல் என்பது காதல் வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சம். தொடுதல் என்பது பிரியாத பிரியத்தின் வெளிப்பாடு. முதிர் தம்பதியர் பூங்காக்களில் கைகளைக் கோர்த்தபடி மணிக்கணக்கில் அமைதியாய் அமர்ந்திருப்பார்கள். அது அவர்களுடைய அதிகபட்ச அன்பின் பரிமாற்ற நிமிடங்கள் என்பதில் சந்தேகமில்லை.
அன்பு என்பது இதயத்தில் வேர்விட்டுக் கிளைவிடும் விஷயம். அருகருகே அமைதியாய் இருக்கும் தம்பதியர் இதயத்தால் ஆயிரம் மைல் தொலைவில் இருக்கலாம். அல்லது ஆயிரம் மைல் இடைவெளியில் இருக்கும் தம்பதியர் இதயத்தால் இணைந்தும் இருக்கலாம். இரண்டு இதயங்கள் ஒன்றாய் இருப்பதில் தான் காதல் வாழ்க்கை அர்த்தப்படுகிறது. எனவே இதயத்தால் ஒன்று படுங்கள் என்பதே முதலாவது தேவை.
“இவர் என் கணவன்”, “இவர் என் மனைவி” என்று சொல்வது ஒருவரை அடிமைப்படுத்தும் செயலல்ல. இவர் எனது ஆதிக்கத்தில் இருக்கிறார் என்பதன் அடையாளமுமல்ல. நாங்கள் இணைந்து பயணிப்பவர்கள். எங்களுக்கு இடையே இடையூறு விளைவிக்க யாரேனும் வந்தால் இணைந்தே சந்திப்போம் என சொல்லும் ஒரு உத்தரவாதம்.
ஆணும் பெண்ணும் சமமெனச் சொல்லவே ஆண்டவர் ஆணின் விலா எலும்பிலிருந்து பெண்ணைப் படைத்தார் என்கிறது கிறிஸ்தவம். சிவனில் பாதியை சக்திக்குக் கொடுத்து, இருவரும் ஒருவர் என விளக்குகிறது இந்துமதம். அதற்காக இருவரும் ஒரே வேலையைச் செய்ய வேண்டுமென்பதில்லை. மிருதங்கமும், புல்லாங்குழலும் ஒரே இசையைத் தருவதில்லை. தாழம்பூவும், தாமரைப் பூவும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதைப் புரிவதில் தான் இருக்கிறது வாழ்க்கையின் அழகும், அர்த்தமும்.
தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அந்தவகையில் ஹெலன் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.ஹெலனின் சிந்தனையுள்ள சகோதரிகளுக்கு எனது வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். கணவனிடம் சற்றே குனிந்து நடக்கச் சொல்லுங்கள். அவர்கள் தோளில் கைபோட்டு நடங்கள். இது பெண்ணாதிக்கம் அல்ல, பாசத்தின் பகிர்ந்தல் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
986 total views, 6 views today