பதட்டங்களைப் பணமாக்க……
- பொலிகையூர் ரேகா – இலங்கை
இன்று அலுவலகம் ஒன்றிற்குப் பணம் கட்ட வேண்டிய தேவை ஒன்றின் காரணமாக முன்னரே பணத்தை எடுத்து வைத்திருந்தேன். வேறு சில இடங்களில் பணமாகக் கொண்டு வர வேண்டுமெனக் கூறியிருந்ததால் இங்கும் தேவையற்ற சிரமம் வேண்டாமெனப் பணம் செலுத்தும் அட்டையைத் தவிர்த்துப் பணமாக எடுத்து வைத்திருந்தேன்.
எடுத்துச் சென்ற தொகை தவிரக் கூடுதலாகக் கட்ட வேண்டி இருந்ததால் மொத்தமாக வைத்திருந்த பணத்தையும் கூடுதலாகக் கட்ட வேண்டிய பணத்தைத் தனியாகவும் கொடுத்திருந்தேன்.
காசுப் பொறுப்பாளராக இருந்தவர் தனியாகக் கொடுத்த 5000 ரூபாய் தாளை எண்ணுவதற்குச் சேர்த்துக் கொள்ளாமல் தனியே கீழே தள்ளிவிட்டு மீதிப் பணத்தை எண்ணித் தொகை குறைகிறது என்று என்னிடமே கொடுத்தார். கொடுத்துவிட்டேன் என்று கூறியதை ஏற்காமல் மீண்டும் தருமாறு கூறினார்.
அவர் கேட்டதற்காக நான் வைத்திருந்த பணத்தாளை என் கைப்பையினுள் மீண்டும் சரிபார்த்துவிட்டு;
சரியாக எண்ணி வைத்த தொகையோடு மேலதிக பணத் தாளைக் கொடுத்ததால் தெளிவாக அவரிடம் கூறினேன். 3 தாள்களில் 2 தாள்கள் மட்டுமே கையிலிருப்பதைக் காட்டி அவரிடம் பணம் கொடுத்துவிட்டதை உறுதிப்படுத்தினேன். சிறு முகமாற்றத்தோடு சில மணித் துளிகள் தேடுவது போல் பாசாங்கு செய்துவிட்டு கீழிருந்து எடுத்து இங்கே விழுந்திருக்கிறது என்றார். (கீழே விழுமளவிற்கு அவர் வேறு வேலையின் பின் பணத்தை எண்ணவில்லை.வாங்கிய கையோடு எண்ணத் தொடங்கியிருந்தார்.நான் கைப்பையை மூடிவிட்டுக் கையிலிருந்த கோப்பை எடுப்பதற்குள் நடந்திருக்கிறது.)
கூட்டம் அதிகமில்லாத நேரத்தில் கொடுக்கப்பட்ட பணத் தாளை இல்லை என்று சாதித்துக்கொண்டிருந்த ஒருவரிடம் அது தவறுதலாக நடந்திருப்பதற்கான வாய்ப்பில்லை என்பதையும், தனியே கொடுக்கப்பட்ட ஒற்றைப் பணத்தாள் குறித்துப் பதட்டத்தில் நானே மறந்து மீண்டும் கொடுத்திருப்பேன் என மீளப் பெற நினைத்தமை குறித்த அவர் திறமையையும் புன்னகையோடு கடந்து வந்திருந்தேன்.
அவர் இப்படிக் கல்லெறிந்து பார்த்ததற்கு ஒரு காரணம் நான் அங்கே சென்றபோது அந்த அலுவலக நடைமுறை குறித்தும் பணம் எப்போது கட்ட வேண்டும் என்பது குறித்தும் கேட்டிருந்தேன். அந்தக் கேள்விகள் நான் ஒன்றும் தெரியாமல் வந்திருக்கிறேன் என்பதாகவோ,எளிதில் ஏமாற்ற முடியும் என்றோ அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.ஏமாற்ற நினைத்து ஏமாந்திருந்தார்.
இங்கே சொல்ல வருவதெல்லாம் ஒன்றுதான். உங்கள் பதட்டத்தைப் பணமாக்கப் பலர் காத்திருக்கின்றனர். இவை இங்கே நடந்த ஒரு சம்பவத்தனடிப்படையில் நான் சொல்லவில்லை.நான் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சம்பவங்களில் இதைப் புரிந்துகொண்டிருக்கிறேன்.
அவர்கள் நம் பதட்டத்தின் மீது பணம் பார்க்கிறார்கள் என்பது புரிந்து;
அது குறித்து நாம் கேள்வி கேட்டால் எதிரியாகிவிடுவோம்.இல்லாதவற்றைக் கூட அதிகப்படியாக உருவாக்கி நம்மைத் தவறென்று கூறுவார்கள்.அவர்கள் பிழையென்பதை மறைத்தாக வேண்டுமே. ( எங்கும் தவறுகளைக் கேள்வி கேட்பது அதை உரியவர்களுக்குப் பிடிக்காததுதான்)
அதே இடத்தில் வேறு யாரேனும் ஒருவர் அந்த அலுவலகச் சூழலில்; மொழியோ,அங்கேயுள்ள நடைமுறைகளோ தெரியாதவராக இருந்திருந்தால் பதட்டத்தில் மீண்டும்அந்தப் பணத்தாளைக் கொடுத்திருப்பார்.
இது இங்கு மட்டுமல்ல. பணம் கையாளப்படும் இடங்களில் அதுவும் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் இடையே திரை, அலுவலக அமைப்புகள் காணப்படும் இடத்தில் தவறுதலாக ஒரு பெரிய தொகைத் தாளைக் கீழே விழுத்திவிட்டு நாம் கொடுக்காதது போலக் கூறி நம்மையே எண்ணிப் பார்க்கச் சொல்லிவிட்டுத் தொகை குறைவாக இருப்பதை நம் வாயாலேயே ஒத்துக்கொள்ள வைத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டு நாம் சென்றபின்பு கீழே வேண்டுமெனத் தவறவிட்ட பணத்தை எடுத்துக்கொள்வது நடைபெறுகிறது.
வேறிடங்களிலும் அவர்கள் சூழலுக்கேற்ப இந்தப் பண எடுப்பு நடத்தப்படுகிறது.தெருவோரக் கடை ஒன்றிலும் இவ்வாறாக நடந்தமை குறித்து இன்னொருவரின் பட்டறிவைக் கேட்டிருக்கிறேன். பெருந்தொகைகளைப் பணமாகச் செலுத்த வேண்டிய இடத்தில், விவரம் தெரியாமல் செல்லும் இடங்களிலும் கவனமாக இருங்கள். இங்கே நாம் ஏமாறத் தயராக இல்லாவிட்டாலும் நம்மை ஏமாற்றுவதற்கெனப் பலர் காத்திருக்கின்றனர்.
பி.குறிப்பு- உண்மையிலேயே சரியான தொகையைக் கொடுக்காமல் விட்டுவிட்டு அலுவலகங்களில் யாரேனும் முரண்பட்டிருந்தால்; அந்தப் பட்டறிவு வாய்க்கப்பெற்றவர்கள் இங்கிருந்தால் நான் பொறுப்பல்ல 🙂
1,502 total views, 3 views today