ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது!

— தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி

‘உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ”

  • முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

“அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக ஒருசில ஆங்கில, தமிழ், சிங்கள ஊடகங்களிலும், ஒருசில தமிழ் அரசியல் தரப்புகளாலும் வெளியிடப்பட்ட ஊகங்கள் இன்று பொய்த்தன.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அடுத்த மூன்று வருடங்களுக்கான தனது அரசாங்கத்தின் கொள்கை நோக்கை விளக்கி இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய நீண்ட உரையில், தேசிய இனப்பிரச்சினையை,பொருளாதார பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் தனது கொள்கை மாறவில்லை என்பதை தெளிவாக கோடிட்டு காட்டினார்.

ஜனாதிபதியின் உரை நிறைவு பெற்ற பின், முன்னாள் எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் எம்பி மிகவும் சலிப்புடனும், ஏமாற்றத்துடனும் இருந்ததை, அவருக்கு சமீபத்தில் அமர்ந்திருந்த நான் அவருடன் சற்று உரையாடிய போது அவதானித்தேன். அது எனக்கு மிகுந்த மனக்கவலையை தந்தது.

“ஜனாதிபதி இனப்பிரச்சினையை பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், கடலுக்கு அடியில் அமைக்க திட்டமிடும் டிஜிடல் தொழில்நுட்ப கேபிள்களை பற்றி அதிகம் பேசினார். உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” என அவ்வேளை என்னுடன் உரையாடிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேலியாக தெரிவித்தார், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையை அடுத்து கருத்து கூறிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது, “அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட ஊகங்கள் பொய்த்தன. கொழும்பின் ராஜதந்திர சமூகம் தவறாமல் வாசிக்கும் பிரபல வார இறுதி ஆங்கில பத்திரிக்கையின் அரசியல் ஆரூடம் பொய்த்தது.

அப்பத்திரிக்கை தனது ஏற்புடைமையை இழந்தது என்றும், அதை நம்பிய ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும் ஏமாந்தனர் என்றும், சற்று முன் என்னுடன் உரையாடிய பிரபல மேற்கு நாட்டு ராஜதந்திரி சொன்னார்.

“தேசிய இனப்பிரச்சினை” இருப்பதாக ஏற்க ஜனாதிபதி தன் உரையில் தெளிவாக மறுக்கிறார். இந்நாட்டில் நிலவும் பிரச்சினைகளை “பொருளாதார” பிரச்சினையாக மட்டுமே அவர் இருக்கமாக பார்க்கிறார்.மக்களுக்கு குடிநீர், நீர்பாசனம்,வீடுகள்,நெடுஞ்சாலைகள் ஆகிய வசதிகளை வழங்குவதே,நல்லிணக்கத்துக்கு அடிப்படை என்பதுவே தனது அரசாங்கத்தின் நல்லிணக்க கொள்கை என ஜனாதிபதி கூறி முடித்தார்.

மலையக தமிழர்கள், முஸ்லிம் ஆகிய இலங்கையின் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் விசேட பிரச்சினைகள் பற்றிய தீர்வுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அடுத்த மூன்றாண்டுக்கான கொள்கை உரையில் எதுவும் கூறப்படவில்லை. அதிகார பரவலாக்கல், 13ம் திருத்தம் ஆகிய விவகாரங்கள் பற்றி ஜனாதிபதி ஒரு வார்த்தையும் கூறாமல் இந்நாட்டு தமிழ் பேசும் மக்களை ஏமாற்றி உள்ளார் என நான் நினைக்கிறேன். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தனது அரசினால் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு வடகிழக்கு பிரதேசங்களில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்பீக்கள் “ஒத்துழைப்பு” வழங்க வேண்டும் என்பதுவே அவரது அதிகபட்ச கோரிக்கையாக இருந்தது.

அதேவேளை தான் நியமித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத குழுவினால் எழுதப்படும் புதிய அரசியலமைப்பிற்கான வரைபை தனது அமைச்சரவையில் சமர்பித்து, அதன்பின் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கூறினார். இந்த புதிய அரசியலமைப்பு வரைபில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது கானல் நீராகவே இருக்கும் என்பதை ஜனாதிபதியின் உரை கோடிட்டு காட்டுவதாகவே நான் நினைக்கிறன்.

1,243 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *