நரை வரும் பருவம்
ஜூட் பிரகாஷ் – மெல்பேர்ண்
கொஞ்சக் காலத்திற்கு முன்னர், இடது கண் இமையில் ஒரு நீட்டு வெள்ளை மயிர் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. ஒரு நாள் காலம்பற வெள்ளன ளாயஎந எடுத்திட்டு, மூக்குக் கண்ணாடியை போட்டுக் கொண்டு முகக் கண்ணாடியை பார்க்க, “Hello.. how are you” சொல்லிக் கொண்டு அந்த ஒற்றை நரை மயிர் கண்ணிமையில் அரியாசனம் போட்டு அமர்ந்திருந்தது.
ஆண்டவரை கூப்பிட்டு மனதுக்குள் அழுதுவிட்டு, பெடியளை காரில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில், கண்ணிமையில் துளிர்விட்ட ஒற்றை நரை மயிரின் சோகத்தை அவங்களிடம் பகிர, பக்கத்து சீட்டில் இருந்த சந்தோஷ், காதடியில், பிடறியில் என்று தடவி பார்த்து விட்டு “அப்பா.. you got grey hair in your head too” என்று ஆட்டிலெறியால் அடித்து மனதை நோகடித்தான். தலையும் நரைக்க தொடங்கி விட்டது, ஐயகோ என்று மனது அழத் தொட்கியது. யாழ்ப்பாணத்தில் எங்களோடு வாழ்ந்த அம்மப்பாவை பழசு என்று சின்ன வயதில் பகிடியாக கூப்பிட்டது அப்போது ஞாபகம் வந்தது. அப்படியென்றால் நானும் இன்னும் கொஞ்ச நாளில் “பழசு” ஆகிவிடுவேனா, இப்பத் தானே பரி யோவானில் பத்தாம் வகுப்பில் படித்து விட்டு வந்த மாதிரி இருக்கிறது , அதற்குள் நானெப்படி “பழசாக” முடியும், இது கொடுமை என்று மனது அரற்றியது.
பெடியளை பள்ளியில் இறக்கி விட்டு விட்டு, Signal lights ல் கார் நிற்க, காரிலிருந்த முகக் கண்ணாடியை இறக்கி விட்டு மீண்டும் அந்த கண்ணிமை ஒற்றை நரையை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்க, மனிசியிடமிருந்து வரும் வழமையான காலை நேர தொலைபேசி அழைப்பு காரை உலுக்கியது. “…என்ர கண்ணிமையில் ஒரு நரச்ச மயிர் வந்திட்டு” அனுதாபத்தை எதிர்பார்த்து கவலையை பகிர, “உமக்கு நீர் இன்னும் பெடியன் என்று நினைப்போ” மறுமுனையில் நக்கல் தொனித்தது. மௌனத்தையே விடையாக பகிர, “இன்னும் school Boys மாதிரி friendsஓட சேர்ந்து வயசு போனது தெரியாமல், கூத்தடிக்க நாடு நாடா trip போய்க் கொண்டிரும்..” மனிசியின் அன்றைய நற்செய்தி தொடங்கியது.
மனிசியோட கதைத்துக் கொண்டே “..இந்த நரைச்ச மயிரை பிடுங்கட்டோ..” அந்த கண்ணிமையின் ஒற்றை நரை மயிரை நகங்களைக் கொண்டு சுற்றி வளைக்க முயற்சி செய்து கொண்டிருக்க, பின்னால் இருந்த கார்காரன் horn அடித்து, signal lights ல் green light விழுந்ததை சுட்டிக் காட்டவும் சரியாக இருந்து.
“..பிடுங்காதேயும்..பிடுங்கினால் இன்னும் கனக்க வரும்..உதை விட்டு போட்டு.. பின்னேரம் வரும் போது மறக்காமல் பாலும் பாணும் வாங்கியாரும்.. மறக்காதேயும்.. உமக்கு வயசு போய்ட்டுது.. ஹா ஹா ஹா” மறுமுனையில் மனிசி மகிழ்ச்சியாக விடைபெற்றாள். “..பிடுங்கி தான் பார்ப்பமா.. அவா வேணுமென்டு சொல்லுறாவோ” என்று மனம் ஒரு புறம் மனிசையை சந்தேகித்தது. வேலைக்கு வந்ததும், முதல் வேலையாக GoogleI கேட்டால், அதுவும் மனிசி சொன்னது சரிதான் என்று சொல்லுது, ஒன்றை பிடுங்கினால் ஒம்பது முளைக்குமாம்.
ஊரில் வருடந்தோறும் நடக்கும் சம்சாரிகள் எள இளந்தாரிகள் கிரிக்கெட் ஆட்டத்தில், அப்பா சம்சாரிகள் அணிக்கு விளையாடும் போது அவருக்கும் நாற்பது சொச்ச வயசு தானிருந்திருக்கும். சம்சாரிகள் அணியை “பழசுகள் Team” என்று இளந்தாரி அண்ணாமார் நக்லடிக்கும் போது சிரித்ததும் ஏனோ இப்ப தான் நினைவில் வருகிறது.
பதினாறே பதினாறு வயதில் யாழ்ப்பாணம் வெலிங்டன் திரையிரங்கில் பார்த்த வருஷம் 16 படத்தோடு, குஷ்பூ கனவுக் கன்னியானாள். குஷ்பூவிற்கு வயதாகி சினிமாவை விட்டு விட்டு அரசியலில் நடிக்கத் தொடங்க, நாங்களும் நயன்தாராவின் கட்சியில் இணைந்தோம். நயன்தாராவின் கட்சியில் இணைந்தாலும், குஷ்பூவை என்றுமே மறக்க முடியவில்லை.
எங்களிற்கு வயது போவதை மறக்கவும் மறைக்கவும், நாங்கள் இளமையான நடிகைகளை பின் தொடர்ந்தாலும், வயது எங்களையும் அவளவையையும் கலைத்துக் கொண்டு தான் வருகிறது. எங்களைப் போல் குஷ்பூவிற்கும் தலைமயிர் நரைத்திருக்கும் என்று நினைக்க கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. நாளைக்கு நயன்தாராவிற்கும் தலைமயிர் நரைக்கும் என்று நினைக்க ஒரு நமுட்டுச் சிரிப்பு இதழோரத்தில் எட்டிப் பார்த்தது.
அலுவலகத்தில் கோப்பி போட போனால், Office குசினியில் இருக்கும் கண்ணாடியிலும் இடக்கண் இமையில் நரைத்த மயிர் தெரியுது. என்ன இழவிற்கு எல்லா இடமும் கண்ணாடி வைக்கிறாங்களோ என்று பொருமிவிட்டு, Phoneஐ எடுத்து முகத்தை ஒரு ளநடகநை எடுத்து, ஒற்றை நரையரின் தாக்கத்தை ஆராயத் தொடங்கினேன். இப்பக் கொஞ்ச காலமாக ஒவ்வொரு நாள் காலம்பறயும் பல் மினுக்கி, shave எடுத்து விட்டு, மூக்கு கண்ணாடியை மாட்டினால், முகக் கண்ணாடியை ஆக்கிரமிப்பது, இடது கண்ணிமையில் கோலோச்சும் அந்த ஒற்றை நரைமயிர் தான். ஒற்றை நரையரை பிடுங்கவா.. விடவா என்று விவாதத்தை மனம் ஒரு பக்கம் நடாத்திக் கொண்டிருக்க, தலையில் கொஞ்சம் கொஞ்சமாக நரைமயிர்கள், முல்லைத்தீவில் அரங்கேறும் சிங்களக் குடியேற்றங்களைப் போல், ஊடுருவத் தொடங்கிவிட்டன.
எவ்வளவு தான் மயிர் நரைத்தாலும் கடைசி வரை hair dye அடிப்பதில்லை, என்று ஏதோ வேகத்தில், ஏதோ அவசரத்தில், சமஷ்டி கேட்ட தமிழரசுக் கட்சியைப் போல, சபதம் வேறு எடுத்து விட்டேன். கன்னத்தில் கறுப்பு மை வழிய வழிய, எனக்கு நானே தலைக்கு கறுப்படிக்கும் காட்சியை முகக் கண்ணாடியில் காண, உண்மையிலேயே பயமாக இருக்கிறது.
எண்பதுகளில் நீட்டு காற்சட்டை போட்ட இயக்க அண்ணமார், எங்களது அரசியல் எதிர்காலத்தை, வேட்டி கட்டிய அரசியல்வாதிகளிடமிருந்து, பிடுங்கி எடுத்த காலத்தில், வயதானவர்கள் எல்லோரையும் ஏளனமாக பார்த்த இழிவான காலங்கள் இன்றும் நினைவில் நிழலாடுகின்றன. ஊரில் ஓடித்திரிந்த Honda Chaly மோட்டார் சைக்கிள்களின் C50,C70 மொடல்களை வைத்து, ரோட்டில் போகும் வயதானவர்களை பார்த்து C50 என்றும், C70 என்றும் கத்தி விட்டு ஓடிய தலைமுறையல்லவா நாங்கள்?
வயதில் முதிர்ந்த, அரசியல் அனுபவத்தில் நிறைந்த, வயதான அந்த பரம்பரையை ஒதுக்கி விட்டும், அழித்து விட்டும், நாங்கள் பயணித்த பயணத்திற்கு நடந்த கதை வரலாறாகி விட்டது. இன்றைய இளம் தலைமுறை அன்றைய இளம் தலைமுறையை போல இல்லை என்று, அன்று களமாடிய இன்றைய வயதானவர்களின் கவலைக் குரல்களும் சத்தமாகவே கேட்கின்றது.
இன்று காலை எழுந்து, பல்லு மினுக்கி, shave எடுத்து விட்டு, மூக்கு கண்ணாடியை மாட்டிக் கொண்டு முகக் கண்ணாடியை பார்த்தால், அதே இடதுகண் இமையில், நெட்டையாய் முளைத்திருந்த அந்த ஒற்றை நரை மயிருக்குப் பக்கத்தில், கட்டையாய் இன்னுமொரு கெட்ட நரை மயிர் ஒன்று குட்டியாய் முளைத்திருக்கிறது. கண்ணிமையில் முளைத்த ஒற்றை மயிரோடு மல்லுக் கட்டிக் களைத்தவனுக்கு, இரட்டையரை ஆண்டவன் பரிசாக அளித்திருக்கிறான். மறுபடியும் மீசையும் குறுந்தாடியும் வளர்க்கத் தொடங்கினால், மீசையும் நரைக்கிறது, தாடியும் நரைக்கிறது, ஆனால் ஆசை மட்டும் இன்னும் நரைக்கவேயில்லை
1,100 total views, 2 views today