பெண்மை விலங்கில்

-கவிதா லட்சுமி நேர்வே

என்னிடம் பெண்மையில்லை
மன்னித்துவிடுங்கள்!

வளையல் குலுங்க
கொழுசொலியுடன் வளையவரும்
பெண்மை

காலை முழுகி
குங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும்
பெண்மை

நாற்சுவரில் தூசிதட்டி
நல்ல பெயர்வாங்க
முடியவில்லை என்னால்

கண்முடி நின்று
கணவனுக்கும் குழந்தைக்குமாய் மட்டும்
பிரார்திக்க விருப்பமில்லை எனக்கு
அதற்கும் மேலும் சிந்திக்க இருக்கிறது

சமுகத்தின் வக்கிர வார்த்தைகளை
வெல்ல
மொழியும் வழியும்
புரிந்து போனதில்
மௌணித்திருக்க மறுக்கிறது
அது தாயோ
என்னை தனதாக்கிக் கொண்டவனோ

தொங்கப்போடும் தாலியில்
எனது கண்ணியத்தையும்
பெண்மையையும் நிரூபிக்க
இஸ்டமில்லை

நிமிர்ந்தே நடக்கிறேன்.
எந்த ஆணிடமும்
சிரித்து பேச முடிகிறது என்னால்
அவர்களையும் சகமனிதர்களாகத்தான்
பார்க்க முடிகிறது.
மன்னித்து விடுங்கள்.

தாய்மை என்ற பாத்திரத்தில்
விழுவதில் பலதும்
எதிர்பாலின்
சோம்பேறித்தனமும்
சொற்பத்தனமும் என்பது
தெரிந்த பின்
எழுதுகிறேன்.

பலரின் சுகவாழ்விற்காய்
எமக்கு அளித்த கௌரவம்
தாய்மை

வெட்கத்தின் வரைமுறை
தெரியவில்லை எனக்கு
அடக்கம் என்பதன் பொருள்
வித்தியாசமாயிருக்கிறது
எனது அகராதியில்

பொறுமை என்பதன்
அளவுகோல்
அவர்களதும் எனதும்
ஒரே அளவில் இல்லை

மரபுகளை முறித்துக்கொண்டு
மனிதனாக இருக்கச் சொல்கிறது
எனது சுயம்

நீங்கள் நினைக்கும் பெண்மை
என்னிடம் இல்லை.
மன்னித்துவிடுங்கள்!

890 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *