‘முள்ளும் மலரும்’ திரைப்படம் – பிளாஷ்பேக்
கே.எஸ்.சுதாகர்
முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆயினும் 1980 மட்டில் தான் எனக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தெல்லிப்பழை துர்க்கா தியேட்டருக்கு அப்பொழுதுதான் முள்ளும் மலரும் வந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் மனதை ஒரு உலுப்பு உலுப்பி உறங்கவிடாமல் செய்த திரைப்படம் இது. இல்லாவிட்டால் துர்க்கா சினிமாத் தியேட்டரின் அருகேயிருந்த நூல்நிலையத்திற்கு ஒரு பைத்தியக்காரன் போல அடிக்கடி சென்றிருப்பேனா? நூல்நிலையத்தையும் தியேட்டரையும் பிரித்து நிற்கும் வேலிக்குள்ளால் பாய்ந்து வரும் பாடல்களையும், திரைக்கதையை நினைவூட்டும் இசைவெள்ளத்தையும் காது குடுத்துக் கேட்பதில் ஒரு அலாதி இன்பம் பிறக்கும். அடிக்கடி வேலிக்கருகே நின்றால் பைத்தியம் பிடித்துவிட்டதென ஆக்கள் நினைத்துவிடுவார்கள் என்பதற்காக இடையிடையே லைபிறறிக்குள் சென்று பேப்பரைப் புரட்டுவேன். ஆனால் மனம் திஜேட்டருக்குள் குதித்து நிற்கும். உறி அடிக்கும் காட்சி, விஞ் இயங்கும் காட்சி, உறக்கத்தில் இருக்கும் வள்ளிக்கு காளி மருதாணி இடும் காட்சி என இசைவெள்ளம் என்னை மீளவும் வெளியே கொண்டுவந்துவிடும். அது நடிகர்களின் தனித்தன்மை வாய்ந்த குரல், அவர்களின் தோற்றத்தை என் மனக்கண் முன் கொண்டுவந்துவிடும்.
ஹமுள்ளும் மலரும்’ கல்கி இதழ் நடத்திய வெள்ளிவிழா நாவல் போட்டியில் உமாசந்திரன் எழுதி முதல் பரிசு பெற்ற நாவல். இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் ரஜனிகாந்(காளியண்ணன்ஃதிரைப்படத்தில் காளி), சரத்பாபு(குமரன்), ஷோபா(வள்ளி), படாபட் ஜெயலட்சுமி(மங்கா) போன்றோர் முன்னணிக் கதாபாத்திரமேற்று நடித்தார்கள். நாவலில் முனியாண்டி, மாயாண்டி, அங்காயி என்ற பாத்திரங்கள் வருகின்றன. திரைப்படத்தில் குழப்பம் வருவதைத் தவிர்க்கும் முகமாக முனியாண்டிக்கு முருகேசன் என்ற பெயர் குடுக்கப்பட்டுள்ளது. முருகேசனாக வெண்ணிறாடை மூர்த்தி நடித்திருப்பர். படத்தை பாலு மகேந்திராவின் கமராவும், இளையராஜாவின் இசையும் உச்சிக்கு எடுத்துச் சென்றன.
ஒரு தடவை இயக்குனர் மகேந்திரன் படித்துக்கொண்டிருந்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு எம்ஜிஆர் வந்திருந்தார். அவர் முன்னிலையில் மேடையேறிப் பேசிய மகேந்திரன் அப்போதைய சினிமாவின் நாடகத் தனத்தை வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். அவரின் பேச்சில் கவர்ந்த எம்ஜிஆர், மூன்று நிமிடங்கள் மட்டுமே பேச நேரம் வழங்கப்பட்டிருந்த மகேந்திரனை அரைமணி நேரம் பேசச் செய்திருந்தார். பின்னாளில் தான் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தை எம்ஜிஆருக்கு பிரத்தியேகக் காட்சியாகக் காண்பித்தபோது, எம்ஜிஆர் அவரைக் கட்டித்ழுவி ஹஇதுவல்லவோ திரைப்படம்’ என்று பாராட்டினார்.
முள்ளும் மலரும் நாவலை பாதிவரை—காளி யண்ணன் ஒரு புலிக்கு கையை இழக்கும் அத்தியாயம் வரை—படித்த மகேந்திரன் அத்தோடு நிறுத்திவிட்டு திரைக்கதை எழுத ஆரம்பித்துவிட்டார். மேலும் தனது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப திரைக்கதையை முழுமையாக உருவாக்கினார்.
ரஜனிகாந்த் இந்தப்படத்தில் ஒரு வித்தியாசமான நடிப்பைக் குடுத்திருப்பார். அதே போல பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அவர் தொடர்ந்தும் நடித்திருந்தால், இன்று அவரின் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தைக் கண்டிருக்கலாம். சரத்பாபு, சோபா. படாபட் போன்றவர்களும் வெகு சிறப்பாக நடித்திருந்தார்கள். குறிப்பாக சோபாவின் குழந்தைத்தனமான நடிப்பு, முகபாவனைகள். அவரது அழுகை இன்னமும் மனதில் வலியைத் தரும்.
படத்தின் ஆரம்பக் காட்சிகள், பாத்திரங்களின் அறிமுகம் வெகு சிறப்பாக இருந்தன. ஒரு தொழிலாளியின் உழைப்புக்கு ஊதியம் குடுக்காமல் ஏமாற்றும் ஒருவரின் கார் விளக்கைக் கல்லால் உடைக்கும் காளி, அதைத் தூரத்தே நின்று பார்த்துவிடும் குமரன் ; ஆற்றின் கரையில் இருந்து மீன் வெட்டும் வள்ளி, ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் மங்கா தன் தாயுடன் எதிரே இருந்து மீனைப் பார்த்துச் சப்புக் கொட்டும் காட்சி ; காளி, மங்காவை தனது வீட்டிலே விடுத்து விடுத்துப் பார்க்கும்போது, ஹமுன்னபின்ன நீ ஒரு பெண்ணைப் பாத்ததில்லையா?’ என மங்கா காளியைப் பார்த்துக் கேட்கும் கேள்வி என – ஒரு திரைக்கதையின் இலக்கணமாக ஆரம்பத்திலேயே படத்தில் வரும் பாத்திரங்களைத் தெளிவாகக் காட்டி விடுகின்றார் மகேந்திரன். காளிக்கும் இஞ்சினியர் குமரனுக்கும் ஒருபோதும் ஒத்து வராது. கடைசிக் காட்சியில் கூட, “இப்ப என் தங்கைச்சியை உங்களுக்கு மனைவியாக்க சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கேல்ல சார்” எனக் காளி சொல்வான். அதுதான் காளி. இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது ஒரு சுவையான சம்பவம் நடந்ததாக மகேந்திரன் குறிப்பிடுவார். படப்பிடிப்பில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது திடீரென சரத்பாபு காணாமல் போயிருந்தாராம். அவரை மேட்டுப்பாளயம் ரயில் நிலையத்தில் இருந்து பிடித்து இழுத்து வந்தாராம் தயாரிப்பாளர். “அது எப்படி இப்பவும் என்னைப் பிடிக்கேல்ல என்று காளியால் சொல்ல முடியும்?” என்பதே அவர் கோபம். அந்த அளவிற்கு படத்துடன் ஒன்றிப் போயிருந்தார் சரத்பாபு.
படத்தில் வரும் ஹசெந்தாழம் பூவில்’, ஹஅடி பெண்ணே’ ஆகிய இரண்டும் அருமையான காட்சியமைப்புக் கொண்டவை, என்றும் இனிமையானவை. ஹசெந்தாழம் பூவில்’ பாடல் காட்சி பற்றிக்கூட ஒரு சுவையான சம்பவம் உண்டு. அந்தக் காட்சியை எடுப்பதற்கு படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மகேந்திரனுக்கு மறுப்புத் தெரிவித்திருந்தாராம். அந்தச் சந்தர்ப்பத்தில் கமலஹாசன் தலையிட்டு தன் சொந்தப் பணத்தில் கமரா ஒன்றை வாடகைக்கு எடுத்துக் குடுக்க, பாலுமகேந்திரா அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கினார். அந்தப் பாடல் இல்லாமலிருந்தால், படம் குறைப்பிரசவம் ஆகியிருக்கும் என்கின்றார் மகேந்திரன். உண்மைதான். அந்தக் காட்சி இல்லாமலிருந்திருந்தால் கதை நிகழும் களத்தை தெளிவாக ரசிகர்களின் முன்னால் கொண்டுவந்திருக்க முடியாது. வள்ளிக்கும் குமரனுக்குமிடையே துளிர்க்கும் காதலைக் காட்ட அந்தப் பாடல் காட்சி ஒன்றே போதும்.
‘அடி பெண்ணே’ என்ற பாடலில் ஹவானத்தில் சில மேகம் ஃ பூமிக்கோ ஒரு தாகம் ஃ பாவை ஆசை என்ன’ என்றொரு வரி வரும். அந்த வரிகள் இளம் வயதிலே தற்கொலை செய்துகொண்ட நடிகைகள் சோபா, படாபட் ஆகியோருக்கான ஹகட்டியம்’ கூறும் வார்த்தைகளாகவே பார்க்க முடிகின்றது.
சிறந்த கதை, இசையமைப்பு, ஒளிப்பதிவு, பாடல்களுக்காக ‘முள்ளும் மலரும்’ அன்றிலிருந்து இன்றுவரை என்னைக் கவர்ந்து கொண்டே வருகின்றது.
1,151 total views, 2 views today