அவள் ஆட்டம் போடுகிறாள்
-மாதவி.
(படங்கள். திவ்யகுமாரி. சின்னையா.)
பல ஆண்களுடன் பேசினால், பயணங்களில் ஆண்துணயுடன், சென்றால், மட்டுமல்ல!
ஒரு பெண் எதற்கும் அஞ்சாமல், எவர்க்கும், அடங்காமல், தனக்கு சரி எனப்பட்டதை, செய்தாலோ, சொன்னாலோ போதும்! இந்தச் சமூகம் அவள் ஆட்டம் போடுகிறாள் என்றுதான் சொல்லும்.
ஒரு பெண்ணின் வாழ்வை இன்னொருவர் வாழத்தலைப்படுவது இந்த சமூகத்தில் இன்றும் அதிகமாகவே காணப்படு கிறது.
ஒரு அன்னை மகள் வேலைக்கு போகும் போது, கண்ட கண்ட ஆண்களுடன் கதைக்காதே, அந்த வேலையை விடு, உனக்கு உது சரிப்பட்டு வராது, இப்படி பல பயத்தின் நிமிர்த்தம் மகளின் வாழ்வை தான் வாழத் தலைப்படுகிறாள். தந்தை அவள் என்ன உடை உடுக்கவேண்டும் என்று அவள் உடுப்பை அவர் தெரிவு செய்கிறார். தந்தை மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற எண்ணமே! அவரை மகளின் வாழ்வை தான் வாழத் தலைப்பட வைக்கிறது.
திருமணமானால், கணவன் நான் அவளுக்கு எல்லாச்சுதந்திரமும் கொடுத்து இருக்கிறேன் என்று, கொடுக்கும் அந்தஸ்த்து இன்னும் தனக்கே உண்டு என மறைமுகமாக சொல்கிறார். மாமியாரோ அதுதான் அவள் இந்த ஆட்டம் போடுகிறாள் என்று தீர்ப்பும் சொல்லிவிடுகிறாள்.
இத்தனையும் மீறி தனது வாழ்வை தான் வாழ முற்படும் போது, அவள் ஆட்டம் போடுகிறாள் என்றாகிவிடுகிறாள்.
ஒரு பெண் தாயாக, தாரமாக, மகளாக, சகோதரியாக, இருந்து தனது பணியை, தன் வேலைக்கு மத்தியிலும் இன்றும், அழகாகச்செய்யும் பெண்கள்கூட, தனக்கு மனநிறைவைத்தரும், பிறருக்கு மகிழ்வைத்தரும், கலையோ, பொதுச் சேவையோ செய்தாலும், வீட்டு வேலையும், சமையலும் செய்தே, தனது விருப்புகளை வாழ் நாளில் செய்கின்றாள். வேலைக்கு சென்று கணனியில் உலகையே நெறிப்படுத்திவிட்டு, வீட்டில் காய்கறி நறுக்குகிறாள், சிலர் நடனத்தில் ஆர்வம் என்று தான் தானாக வாழ முற்பட்டாலும், எழுதாத சட்டங்களாக இருக்கும், பெண்ணுக்குகான வேலைகளை முடித்து, அல்லது அதற்கு அவளே மாற்று வழிகண்டே நடக்க வேண்டி உள்ளது.
அவன் ஆட்டம் போடுகிறான் என்ற சொல்லில்,அவள் ஆட்டம் போடுகிறாள் என்ற சொல்லில் உள்ள வன்மம், இருப்பதில்லை.
காதல் என்ற பெயருக்குள் காமமும், மனைவி என்ற பெயருக்குள் சமையலும், மகள் என்ற பெயருக்குள் பொறுப்புகளும், நேற்றும், இன்றும், மட்டுமல்ல நாளையும் இருந்து கும்மியடிக்கவே செய்யும்.
838 total views, 3 views today