மீண்டும் அச்சுறுத்தும் வெள்ளை வான்கள்

கொழும்பிலிருந்து ஆர்.பாரதி

ஒரு தசாப்தத்துக்கு முன்னர் இலங்கையை அச்சுறுத்திய வெள்ளை வான்கள் இலங்கையில் மீண்டும் ஓடத் தொடங்கிவிட்டனவா என்ற கேள்வியை எழுப்பும் வகையிலான சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்கும்இ ஊடகத்துறையினரை அச்சுறுத்தி வாயை மூடச்செய்வதற்கும் இலங்கையில் வெள்ளை வான்கள் பயன்படுத்தப்பட்டமை சரித்திரத்தில் பதியப்பட்ட ஒன்று.

இவ்வாறு இரண்டு சம்பவங்கள் பெப்ரவரி மாதத்தில் இலங்கையில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவது – ஊடகத்துறையை இலக்கு வைத்த ஒரு சம்பவம் பெப்ரவரி நடுப்பகுதியில் இடம்பெற்றது.

வெள்ளை வானில் வந்த ‘இனந்தெரியாத’ ஒரு குழுவினர் கொழும்பின் புறநகர் பகுதி ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவருடைய வீட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள்.

தாக்குதலுக்குள்ளானவர் ஒரு பிரபலமான சிங்கள ஊடகவியலாளர். சமுத்ர சமரவிக்கிரம என்ற குறிப்பிட்ட ஊடகவியலாளர் இலங்கையின் பிரபலமான ஹிரு தொலைக்காட்சியில் பணிபுரிந்தாலும்இ அவர் மீதான தாக்குதலுக்கு அவர் செய்யும் யூ – ரியூப் சனல்தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலான பல கருத்துக்கள் – அரசை அம்பலப்படுத்தும் தகவல்கள் அதில் வெளிவந்திருக்கின்றது. ஆளும் தரப்பினருடைய ஊழல்கள் பலவும் அதில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனைவிட உட்கட்சி மோதல்களின் பின்னணிகள் பற்றியும் அவர் தனது நிகழ்ச்சிகளினூடாக வெளிக்கொண்டுவந்திருக்கின்றார்.

இந்தப் பின்னணியில்தான் அவரது வீட்டின் மீது நள்ளிரவைத் தாண்டி அதிகாலை நேரம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. எச்சரிக்கும் வகையிலான இந்தத் தாக்குதலுக்கு அவரைது யூ ரியூப் சனலில் வெளிவரும் தகவல்கள்தான் காரணம் என கொழும்பில் ஊடகத்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.

பெப்ரவரி 14 திங்கட்கிழமை அதிகாலை 2.00 மணியளவில்தான் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. ஊடகவியலாளர் வசிக்கும் பிலியந்தலையிலுள்ள வீடமைப்புத் தொகுதிக்குள் வெள்ளைநிற வானில் வந்த காடையர் குழு ஒன்றுஇ பாதுகாப்பு அதிகாரியை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திவிட்டுஇ ஊடகவியலாளரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

பின்னர் வீட்டின் மீது கற்கள்இ மலக்கழிவு போன்றவற்றை வீசி விட்டும் சரமாரி துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டும் அந்தக் குழு தப்பிச் சென்றுள்ளது. ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை இது என்பதில் சந்தேகமில்லை.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பிலியந்தலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைக்காக ஒன்பது பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. 90க்கும் அதிகமான அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள். 80 க்கும் அதிகமானவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இது குறித்த விசாரணைகளில் முக்கிய தடயமாக இருப்பது சி.சி.ரி.வி. கமராவில் சிக்கியிருக்கும் காணொளிகள்தான். ஊடகவியலாளரின் குடியிருப்பு அமைந்திருக்கும் பகுதிகளில் உள்ள சி.சி.ரி.வி. கமராக்களின் பதிவுகள் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைவிடஇ தாக்குதலுக்குப் பயன்படுத்திய பொருட்களில் கைரேகை அடையாளங்கள் இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. அவையும் தற்போது பரிசீலனைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால்இ இதுவரையில் விசாரணைகளில் முன்னேற்றமில்லை. தாக்குதல்தாரிகள் யார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.

இலக்குவைக்கப்பட்ட ஊடகவியலாளர் எரிவாயு கலவை பிரச்சினைஇ வெள்ளைப்பூண்டு மோசடி உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல்இ மோசடிகள் தொடர்பான தகவல்களை சமுதித தனது நிகழ்ச்சிகளில் அம்பலப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்இ அவர் இலக்குவைக்கப்பட்டமைக்கு அது மட்டும் காரணமல்ல என ஊடகத்துறை வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்தன.

12 ஆம் திகதி சனிக்கிழமை இரவு ஒளிபரப்பான பேட்டி நிகழ்ச்சி ஒன்றுதான் உடனடியாக அவர் இலக்குவைக்கப்பட காரணமாக இருந்திருக்க வேண்டும் என ஊடகத்துறை வட்டாரங்கள் சொல்கின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் ‘அபி ஜனபல பக்~ய’ என்ற பிக்குகளின் கட்சி போட்டியிட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தக் கட்சிக்கு தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்திருந்தது. அதற்கு யாரை நியமிப்பது என்பதில் உருவான சர்ச்சை இரண்டு பிக்குகளுக்கு இடையிலான மோதலாகி ஒரு பிக்கு கடத்தப்படும் அளவுக்கு இந்த அதிகாரப் போட்டி சென்றது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக சமன் பெரேரா என்பவர் அண்மையில் நியமிக்கப்பட்டார். பிக்கு அல்லாத ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை முக்கியமானது.

அந்த சமன் பெரேராவைத்தான் கடந்த சனிக்கிழமை தனது யூ ரியூப் சனலில் பேட்டிகண்டிருந்தார் சமுத்ர. பிக்குமாரிடையே உருவான மோதல் அதன் பின்புலம்இ அதன்போது இடம்பெற்ற பேரங்கள் என பல விடயங்களை சமுத்ர கிளறி – கிளறி எடுத்துள்ளார். அதன்போது சமன்பெரேரா பல இரகசியங்களை கக்கிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.

சனிக்கிழமை இரவு இந்த நேர்காணல் வெளிவர – ஞாயிறு நள்ளிரவைத் தாண்டிய பின்னர் திங்கள் அதிகாலையில் சமுத்ரவின் இல்லம் இலக்கு வைக்கப்பட்டது.

எது எப்படியிருந்தாலும்இ ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாகத்தான் இலங்கை தொடர்ந்தும் உள்ளது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கின்றது.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவது இது முதல்முறையல்ல. ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டும்இ காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள வரலாறு இலங்கைக்குள்ளது. அவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு எதிராகச் செயற்பட்ட யாருமே இதுவரையில் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவில்லை. குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிகின்றார்கள். தண்டனைகளிலிருந்து அவர்கள் எப்போதும் விலக்களிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

தற்போது சமுத்ர சமரவிக்கிரம இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் சி.சி.ரி.வி. கமரா பதிவுகள்இ கைரேகை அடையாளங்கள் என பல ஆதாரங்கள் சிக்கியுள்ளன. சூத்திரதாரிகள் கைதாவார்கள் அல்லது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய நிலை இலங்கையில் இல்லை. கடந்த கால சரித்திரம் உணர்த்துவது அதனைத்தான்.

ஊடகவியலாளர் இல்லம் தாக்கப்பட்டு நான்கு தினங்களிலேயே கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் நிசாந்தன் என்பவரைக் கடத்துவதற்கான முயற்சி ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. தம்மை அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக்கூறிக்கொண்டு வெள்ளை வானில் வந்த சிலர் நிசாந்தனை வியாழக்கிழமை இரவு வீதியில் வைத்து கடத்திச் செல்வதற்கு முற்பட்டிருக்கின்றார்கள்.

நண்பர்கள் உதவியுடன் அவர் ஓடித்தப்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கூட்டமைப்பின் மட்டக்களப்பு எம்.பி. சாணக்கியன் தனது ரூவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். அதன் இலக்கமும் படத்தில் தெளிவாகத் தெரிகின்றது. அதனால்இ சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை கண்டறிவது இலகுவானது.

பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனக் கோரும் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி முன்னெடுத்திருக்கின்றது. இந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டவர்களில் நிசாந்தன் முக்கியமானவர் என சாணக்கியன் தெரிவித்தார். இந்த கடத்தல் முயற்சிக்கும் அது காரணமாக இருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும் அரசியல் எதிராளிகளையும்இ அரசை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளாகளையும் அடக்குவதற்கு வெள்ளை வான்கள் மீண்டும் களத்தில் இறக்கப்பட்டிருப்பதைத்தான் இந்த இரண்டு சம்பவங்களும் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த காலங்களில் வெள்ளை வான்கள் மூலம் பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால்இ ஆதாரங்கள் சாட்சியங்கள் இருந்தும் இன்றுவரையில் யாருமே நீதியின் முன்பாக நிறுத்தப்படவில்லை. சட்டத்திலிருந்து அவர்களால் எவ்வாறு தப்பித்துக்கொள்ள முடிகின்றது என்பதும் இரகசியமானதல்ல.

ஆகஇ இப்போது வெள்ளை வான்கள் மீண்டும் களத்தில் இறக்கப்பட்டிருப்பது வெளிப்படையான ஒரு எச்சரிக்கைதான். கருத்துச் சுதந்திரம்இ ஜனநாயகம் என்பவற்றுக்கான ஒரு கடுமையான அச்சுறுத்தல்தான்.

அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவிருக்கும் நிலையில்இ ஒரு ஆபத்தான நிலை உருவாகிவருவதைத்தான் இந்தச் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. ஜெனிவாவில் இவை எதிரொலிப்பதையும் தடுக்கமுடியாதிருக்கும்.

875 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *