‘The House of Bernarda Alba’ “ஒரு பாலை வீடு”
இலங்கையில் 1975ஆம் ஆண்டு ஆரம்பித்த எனது மேடை நாடகப் பயணத்தில் 1980இல் நான் நடித்த எட்டாவது நாடகம் ‘ஒரு பாலை வீடு’. இப்பொழுது திரும்பிப் பார்க்கும்போது எனக்கே மிகவும் ஆச்சரியமாகவிருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது. தமிழ்ப் பெண்கள் மேடையில் ஏறி நடிப்பதற்குத் தயங்கிய ஒரு காலகட்டத்தில், அதுவும் யாழ்ப்பாணத்தில் வசித்துக்கொண்டு ஒரு இளம்பெண்ணாக இத்தனை நாடகங்களில் நடித்திருக்கிறேன். எல்லாமே முழுநீள நாடகங்கள். ‘பசி’ நாடகத்தைத் தவிர. இலங்கையின் பல பாகங்களிலும் கிட்டத்தட்ட 50 மேடையேற்றங்கள்.
நடிப்பின் மேல் உள்ள என்னுடைய ஆர்வத்துக்குத் தடை போடாமல், கேலிப் பேச்சுகளுக்கு அஞ்சாமல், எனக்கு முழுச் சுதந்திரம் அளித்து பக்கபலமாக இருந்த எனது பெற்றோரை மிகவும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். ஒருவேளை அவர்களும் அந்தக் காலத்து சாதாரண அப்பாக்கள், அம்மாக்கள் போல என்னை நடிக்க விட முடியாது என்று சொல்லியிருந்தால் சிலவேளைகளில் நான் எதிர்த்து சண்டையிட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். மிகச் சிறுவயதில் இருந்தே எனக்குப் பிடிவாதமும் துணிச்சலும் அதிகம் என்று பெற்றோர் சொல்லுவார்கள். நினைத்ததை எப்படியும் சாதிக்கும் பழக்கமும் இருந்தது.
தமிழ் நாடகங்களில் நடிப்பதற்கு ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பதே மிகக் கடினமாக இருந்த அந்தக் காலகட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் நடித்த நாடகம்தான் ‘ஒரு பாலை வீடு’. ஆச்சரியம்தான். இந்த நாடகத்தை க. பாலேந்திரா நெறியாள்கை செய்திருந்தார். பாலேந்திரா துணிச்சலோடு காரியமாற்றுவதில் வல்லவர். 20 பெண்களை வைத்து நாடகம் தயாரிப்பது என்பது இலேசான காரியமல்ல. அதுவும் யாழ்ப்பாணத்தில் தயாரிப்பு. ஆனாலும் அவர் துணிந்து விட்டார்.
ஸ்பெயின் நாட்டின் பிரபல கவிஞரும் நாடகாசிரியருமான பெடரீகோ கார்சியா லோர்கா எழுதிய ‘The House of Bernarda Alba’ என்ற நாடகத்தின் மொழிபெயர்ப்புத்தான் ‘ஒரு பாலை வீடு’. கார்சியா லோர்கா இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஸ்பானியக் கவிஞராகவும் நாடகாசிரியராகவும் கருதப்படுகிறார். இவர் கவிஞராகப் புகழ்பெற்ற பின்னர் நாடகத்துறையில் ஈடுபாடு காட்டினார். இவருடைய கவிதைகளும் நாடகங்களும் சாதாரண மக்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டவை. 1898இல் பிறந்த கார்சியா லோர்கா இந்த நாடகத்தை 1936இல் எழுதினார். அதே ஆண்டு ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரின்போது இவர் கைப்பற்றப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்பெயினின் கிராம வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாடகம் 80களில் எமது வாழ்க்கைச் சூழலுக்குப் பொருந்தியதாக இருந்தது. இந்த நாடகத்தைத் தமிழில் நிர்மலா மொழிபெயர்த்திருந்தார்.
‘ஒரு பாலை வீடு’ நாடகத்தை பாலேந்திரா 1979ஆம் ஆண்டு நெறியாள்கை செய்து மேடையேற்றியிருந்தார். நான் 80ஆம் ஆண்டு இதன் மீள் தயாரிப்பில்தான் நடித்தேன். முதல் தயாரிப்பில் முழுக்க முழுக்க யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பழைய மாணவிகளே நடித்திருந்தார்கள். பாடசாலை நிதிக்காக அப்பாடசாலை மண்டபத்திலேயே மேடையேற்றப்படது. 9 முக்கிய பாத்திரங்கள் உட்பட சுமார் 20 பெண்கள் நடித்தார்கள். இவர்கள் 70 வயதில் இருந்து 20 வயதுவரை இருந்தார்கள். நான் நினைக்கிறேன் அந்தக் காலத்தில் இத்தனை தமிழ்ப் பெண்கள் நடித்த முதலாவது மேடை நாடகம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
சுண்டுக்குளி நாடகத் தயாரிப்பிலும் மேடையேற்றத்தின்போதும் பாலேந்திரா என்னைத் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டு நானும் பல ஒத்திகைகளுக்குச் சென்றேன். அப்போது நான் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பாலேந்திரா கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தார். வார இறுதி நாட்களில் யாழ்ப்பாணம் வருவார். பின்னர் நீண்ட விடுமுறையில் வந்திருந்து ஒத்திகைகளைச் செய்தார். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மண்டபத்திலேயே ஒத்திகைகள் நடந்தன. இரண்டு மணித்தியால நாடகம் என்றபடியால் நீண்ட ஒத்திகைகள் மாலை வேளைகளிலும் சனி-ஞாயிறு தினங்களிலும் நடைபெற்றன. பாலேந்திராவின் கட்டுப்பெத்தை பல்கலைக் கழக நண்பர்கள் சிலர் அவருக்குக் கடைசிநேர ஒத்திகைகளில் உதவி செய்ய வந்திருந்தார்கள். பாலேந்திரா உட்பட எல்லோருமே இளைஞர்கள். பாடசாலை விடுதியில் தங்கியிருந்த உயர் வகுப்பு மாணவிகள் ஒத்திகைகளைப் பார்க்க வருவார்கள். அவர்களில் சிலர் நாடக ஒத்திகைகளை மட்டுமல்லாது இந்த இளைஞர்களைப் பார்க்க வருவதையும் நான் அவதானிக்கத் தவறவில்லை.
இந்தத் தயாரிப்பில் நடித்த பல பெண்கள் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் வசித்தபோதும் இவர்களில் சிலர் ஆங்கிலத்திலேயே பெரிதும் உரையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு ஆரம்பத்தில் தமிழில் பேசி நடிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. கடும் பயிற்சியின் பின்னர் பழகிக் கொண்டார்கள். ‘ஒரு பாலை வீடு’ நாடகத்தில் ஆண் பாத்திரங்களே இல்லை. முழுவதும் பெண்கள்தான். ஒரு ஆண் பாத்திரம், அவர் ஒரு இளைஞன். அவர்களுடைய உரையாடலில் அடிக்கடி வருவார். ஆனால் மேடையில் தோன்றமாட்டார்.
சுண்டுக்குளி மேடையேற்றம் மிக வெற்றியாக நடந்தது. பாலேந்திரா, நாடகங்கள் மீண்டும் மீண்டும் மேடையேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். அதனால் ‘ஒரு பாலை வீடு’ நாடகத்தை யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்திலும் கொழும்பு, பேராதனை போன்ற இடங்களிலும் மேடையேற்ற விரும்பினார்.
மிகுதி அடுத்த இதழில்….
756 total views, 3 views today