“போற்றித்தாய் “
முதன் முறையாக இலங்கையில், தாய் சேய் இணைந்து பரதநாட்டிய அரங்கேற்றம் கண்ட வரலாற்றுப் பெருமை கொழும்பில் இயங்கி வரும் அபிநயக்ஷேத்திரா நடனப்பள்ளியையே சாரும்.
அன்பின் மொழி பயின்று ஆன்மாவின் வெளி காட்டி ஆடல் மந்திரம் அருளிய குருவைத் தாய் எனப் போற்றி தாள் பணிந்து , 20ஃ02ஃ2022 அன்று புதிய கதிரேசன் மண்டபத்தில் நித்யா, ஷ்ருதி இருவரதும் “போற்றித்தாய் ” அரங்கேற்ற நிகழ்வு இடம்பெற்றது
பிரபஞ்சத்தின் சக்தி அன்பு. இவ்வுலகில் பிறந்த உயிர்கள் யாவும் அன்பெனும் பெரும் பொருளை முதலில் பெறுவது தாயிடமே. அன்பே சிவம். அதுவே திருமந்திரம் அரங்கேற்ற நிகழ்வில் முதல் உருப்படியாக புஷ்பாஞ்சலியுடன் அலாரிப்பு இடம்பெற்றது. துவி இராகம், துவி தாளம் , துவி ஜாதி என மார்க்க உருப்படி அமைப்பின் உச்சம் முதல் உருப்படியிலேயே புலப்படட்டுவிட்டது
. ” அம்மா நம் இசைச் சொல் “
தொடர்ந்து நான்கு அட்சரப் பெயர் கொண்ட தாய் நித்யாவும் மூன்று அட்சரம் கொண்ட சேய் ஷ்ருதியும் இணைந்து தம் அங்க மலர் அர்ச்சனையை சமர்ப்பித்தால்
திஸ்ரம் , சதுஸ்ரம் இணை துவிஜாதி அலாரிப்பாக அமைத்துள்ளார் குரு திவ்யா சுஜேன்.
” அம்மா நம் மலர்ச்சொல் “
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே .
உள்ளும் புறமும் உள்ளதெல்லாம் ஒன்றாகி தன்மை எல்லாம் தானாகி தன்மை ஒன்றிலாததுவாய் காண்பார் தாம் காட்சியாய் எல்லாம் தானாகி இருக்கும் தாயுமானவரை அறியக் கூடியவர் மட்டுமே உண்மையை அறிந்தவராகின்றனர்.
தாய் ராகமான சங்கராபரணம் ராகத்திலும் மிஸ்ர சாபு தாளத்திலும் ஜதீஸ்வரம். அமைந்தது “அம்மா நம் திருச் சொல்.”
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை .
அன்னையெனும் ஆலயத்தில் சிலையாகி நிற்கும் குழந்தை ஒரு இன்ப வரம். தேவகி வயிற்றினில் பிறந்தாலும் கண்ணனுக்கு யசோதை தாய் தானே ? பிரிந்தே வளர்ந்தாலும் கர்ணனின் தாய் குந்தி தானே ? நெற்றிக்கண்ணில் பிறந்த முருகனை கார்த்திகை பெண்கள் வளர்த்ததும் தன் குழந்தையாய் பிறர் குழந்தையைக் கருதும் ஒவ்வொருவரும் தெய்வம் ஆகின்றனர் என்பதனை சுட்டிக்காட்ட உமை அம்மை திருஞானசம்பந்தருக்கு ஞான பால் கொடுத்ததும், என தானே சுமந்து பெற்றாலும், இல்லையெனிலும் தாய்மையின் பண்பில் மாற்றமில்லை என்பதனை கருவாக கொண்ட வர்ணனம் இராகமாலிகையாக இடம்பெற்றது.
அம்மா நம் களிச் சொல்.
சங்க இலக்கியத்தில் ஆய் , ஞாய் , அன்னை , நற்றாய் , ஈன்றாள் , என்ற பெயரில் தாய் அழைக்கப்படுகிறாள். அதிலும் செவிலித்தாயின் முக்கியத்தும் பெரிதும் பேசப்படுவது சங்க இலக்கியத்தில் தான். தவறான புரிதல் , உறவுச் சிக்கல் , முரண்பாடு , சிறிய சிக்கலுக்கும் பெரும் பிணக்கு இவையே இன்றைய நிலை. ஆனால் சங்க இலக்கியங்கள் உறவு ஓவியங்கள். நாம் என்னும் சிந்தையுடன் அன்பு பொங்க நுண்ணிய புரிதலை கற்றுத்தரவல்லன.
நாகரீக வாழ்வியலையும், நற்பண்பையும், மற்றவரை பாராட்டுவதையும், செவிலித்தாய் கூற்று நம் சங்க இலக்கியங்களை நாட்டியத்தினூடாக மீட்டிப் பார்க்கும் முயற்சியாகிறது. நற்தாய் செவிலித்தாய் இருவரதும் உரையாடல் தாய்மையின் மாண்பினை காண்பிக்கிறது. இன்றைய காலத்திற்கு அதிகம் தேவையான ஓர் அரும் பொருளாய் நம் தாய் மொழி தந்த சங்க இலக்கியம் இருப்பதாய் உணர்ந்து கூடலூர் கிழார் பாடிய அற்புதமான சங்கப்பாடல் குறுந்தொகை செவிலித்தாய் கூற்று ஆடல் வடிவம் பெற்றது.
அம்மா நம் ஆதிச் சொல்.
நாம் அச்சம் கொண்டோம் . தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள்
நாம் துயர் கொண்டோம் தாய் அதை மாற்றிக் களிப்பு தந்தாள்
குனிந்த தலையை நிமிர்த்தினாள்
சோர்ந்த விழியில் ஒளி சேர்த்தாள்
கலங்கிய நெஞ்சிலே தெளிவு தந்தாள்
இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள்
நவமெனச் சுடர் தரும் நல் அறிவு தந்து நவதுர்கையாக அருளியதை தத்ரூபமாக காட்சிப்படுத்திய ஆடல் அடுத்து இடம்பெற்றது
அம்மா நம் வண்ணச் சொல்.
சுருதியும் லயமும் இணைந்தால் பிறக்கும் திவ்யமான இசையை கருதி தேர்ந்தால் வாழ்வில் இன்பம் நித்தியமே என கோரக் கல்யாண் ராகத்திலும் ஆதி தாளம் துவி நடையிலும் அமைந்த தில்லானா போற்றிதாய் நாட்டிய மார்க்கத்தின் இறுதி நிகழ்வாக அமைந்தது.
அம்மா நம் நிறைவுச் சொல்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் கொள்ளு பெயரன் இசை மேதை டாக்டர் ராஜ்குமார் பாரதி ஐயாவின் இசையமைப்பில் பாடலாக்கத்தில் குரு திவ்யா சுஜெனின் நெறியாள்கையில் ஸ்ருதியும் நித்தியாவும் வழங்கிய ஆடலால் ஐம்புலனும் இன்புற்று நிறைய , அம்மா என்னும் அமுதச் சொல்லை போற்றித் துதித்து, மூதாய்களுக்கு சமர்ப்பணமாய் இனிதே நிறைவு பெற்றது போற்றிதாய்.
711 total views, 3 views today