வாழ்த்துரை

பங்குனி மகளிர் தினத்தன்று வெற்றிமணிக்கு இன்னொரு வெற்றி தேடிவருகின்றது. தன்னுடைய பெயரிலேயே ‘வெற்றி’யைக் கொண்டுள்ள ஜெயபவானி சிவகுமாரன் வெற்றிமணியின் கௌரவ அசிரியராக வருகிறார். இதுவரை முகங்காட்டாது பெயர் பொறிக்காது வெற்றிமணி ஆசிரியர் கலாநிதி சிவகுமாரனுக்கு 28 ஆண்டுகளாகத் துணையாக இருந்தவர் அவர். அப்படி இருந்தவரை “எனது வெற்றிக்குப் பின்னால் யார் யார் என்பதில் என் மனைவியும் ஒருவர் என்பதை வெற்றிமணி வரலாற்றில் பதிவிட பங்குனி மாதம் திருமதி ஜெயபவானி சிவகுமாரன் அவர்களை கௌரவ ஆசிரியராக நியமித்து வெற்றிமணி கௌரவிக்கின்றது.’ என்று வெற்றிமணி அறிவிக்கின்றது.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியையாகிய திருமதி சிவகுமாரன் அவர்கள் 1984 வரை வவுனியா ரம்பைக்குளம் கொன்வென்ற் மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றியவர். பின்னர் யேர்மனியில் 28 ஆண்டுகளாக பின்னணிணியில் நின்று வெற்றிமணி வெளிவரவும், ஒவ்வோராண்டும் விழாக்கோலம் கொள்ளவும் பணிசெய்தவர். விழாக்கோல விருந்தினர்களை அவர் எவ்வாறு உபசரித்தார் என்பதை நாம் இருவரும் நேரடியாகப் பட்டறிந்துகொண்டோம்.
சிவகுமாரனுக்கும் எங்களுக்குமுள்ள தொடர்பு அவருடைய தந்தையாருடன் தொடங்கியது. அவர்தான் வெற்றிமணியைத் தொடக்கியவர். குரும்பசிட்டி பரமானந்தா கல்லூரியின் அதிபராக இருந்தவர் திரு. சுப்பிரமணியம் அவர்கள். அவர் ஒருதடவை என்னையும் மனோன்மணியையும் பரிசளிப்பு விழாவுக்கு பிரதம விருந்தினராக அழைத்துச் சிறப்புச் செய்தவர். அன்று தொடக்கம் அவருடன் தொடங்கிய நட்பு அவர் மகன் ஊடாக இன்னும் தொடர்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சிவகுமாரன் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். இதற்கு அச்சாணியாக உள்ள அவரது துணைவியார் ஜெயபவானி அக்குடும்பத்தின் அடையாளமான வெற்றிமணியை சிறப்புற வழிநடத்துவார். அவருக்கு எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
வாழ்நாள் பேராசிரியர் இலக்கிய கலாநிதி அ. சண்முகதாஸ்,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
பேராசிரியர் முனைவர் ச. மனோன்மணி,
முன்னாள் ஆய்வுப் பேராசிரியர்
கக்சுயின் பல்கலைக் கழகம், யப்பான்.