பெண்கள் நேற்று! இன்று!! நாளை!!!
“பெண்கள் வீட்டின் கண்கள்”
இது ஒரு அதரப் பழசான ஒரு மொழியாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும் மாறாத மொழி ! சகோதரிகளோடு வாழ்ந்த, வாழ்கின்ற அனைத்து ஆண்களும் இதை கண்ணை மூடிக்கொண்டு ஒத்துக் கொள்வார்கள்.
ஒரு வீட்டில் சகோதரிகள் இருந்தால் அந்த வீடு அன்பினால் கட்டமைக்கப்படுகிறது. அந்த வீடு மகிழ்வினால் கட்டமைக்கப்படுகிறது. அந்த வீடு சிரிப்பினால் நிரப்பப்படுகிறது. அந்த வீடு மதிப்பீடுகளால் உருவாக்கப்படுகிறது. இவையெல்லாம் மிகைப்படுத்தலுக்காகச் சொல்லவில்லை, எனது வாழ்வின் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
சகோதரிகள் இல்லாத இல்லம் உண்மையிலேயே எதையோ இழந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சகோதரிகளோடு பிறந்தவர்கள் சமூக வெளியில் மிக சகஜமாக பெண்களை தங்கள் சகோதரிகளாகப் பாவிக்கக் கற்றுக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மங்கையர் தினம் வரும்போது பெண்களைப் பற்றிய சிந்தனைகளும் தலைதூக்கும். பெண்களைப் பற்றிய கவிதைகள் ஸ்டேட்டஸ்களை நிரப்பும், பெண்களைப் பற்றிய பொன்மொழிகளும் கட்டுரைகளும் இணைய தளங்களை நிரப்பும். பெண்களைப் பற்றிய பாடல்கள் இண்ஸ்டாவிலும், யூடியூபிலும் குவியும். அவை மட்டும் போதுமா ?
பெண்களுடைய வாழ்க்கை நேற்று எப்படி இருந்தது ? இன்று எப்படி இருக்கிறது ? நாளை எப்படி இருக்கும் ? என்பதைப் பற்றிய சிந்தனைகள் பல வேளைகளில் நமக்கு உற்சாகத்தையும், சில வேளைகளில் நமக்கு சோர்வையும் தருகின்றன.
இன்னும் பெண்கள் அடைய வேண்டிய தூரம் மிக அதிகம் எனும் உண்மையை நமக்கு காலம் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
சொல்லப் போனால் தமிழ் இன வரலாற்றில் பெண்கள் மிக உயர்ந்த இடத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறார்கள். தாய் வழிச் சமூகம் தமிழ் வரலாற்றில் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது. தாயை முன்வைத்தே தலைமுறை அட்டவணைகள் உருவான வரலாறுகள் உண்டு.
பெண்களைத் திருமணம் முடிக்கும் ஆண்கள், பெண்ணின் வீட்டிலேயே தங்கி வாழ்கின்ற ஒரு சமூக அமைப்பு முறையும் அன்று இருந்தது. சொத்து பெண்களுக்குச் செல்கின்ற ஒரு மாபெரும் புரட்சியும் அந்தக் காலத்திலேயே இருந்தது.
பெண் கவிஞர்களின் சிறப்புகளைப் பற்றி நாம் அறிவோம், பெண்களை மையமாக வைத்து எழுதப்படும் நூல்களைப் பற்றி நாம் அறிவோம், பெண்களை தெய்வமாகவும் அறத்தின் வடிவமாகவும் பார்க்கின்ற புதினங்களையும் நாம் அறிவோம். இவையெல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் தமிழினத்தின் தலை நிமிர் வடிவங்களாய் இருந்தார்கள் என்பதற்கான சான்றுகள்.
எனவே பெண்கள் அன்று விழுந்து கிடந்தார்கள், இன்று பறந்து திரிகிறார்கள் என கவித்துவமாய் சொல்வதில் அர்த்தமில்லை.
உண்மையில் இன்றைக்கு பெண்கள் அப்படியொன்றும் பெரிய உயரிய நிலையை எட்டிவிடவில்லை. பெண்கள் வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்பதை கணவன் முடிவு செய்ய வேண்டும் எனும் சட்டம் உலக நாடுகள் 18ல் இன்றும் இருக்கிறது !
உலக நாடுகள் 39 ல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான சொத்துரிமை என்பது கிடையாது ! பெண்களை வன்முறையாளரின் கையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் சுமார் 49 நாடுகளில் கிடையாது !
உலக அளவில் சுமார் 20 சதவீதம் பெண்கள் திருமணமான ஒரு ஆண்டுக்குள்ளாகவே கணவனாலோ, கணவன் வீட்டாராலோ துன்புறுத்தப்படுகிறாள் என்கிறது ஒரு புள்ளி விவரம். அத்தகைய நிலையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற சரியான சட்டம் இன்னும் சுமார் 49 நாடுகளில் இல்லை.
சர்வதேச அளவில் அரசியல் களத்தைப் பார்த்தால் பெண்களின் பங்களிப்பு 23.7 விழுக்காடு நிலையில் தான் இருக்கிறது. உலக அளவிலுள்ள நில உடமைகளில் வெறும் 13 விழுக்காடு மட்டுமே பெண்களின் பெயரில் இருக்கிறது.
இப்படி உலக அளவில் தெரிகின்ற புள்ளி விவரங்கள் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பதை நமக்கு விளக்குகிறது.
ஆனால் பெண்களின் வாழ்க்கைத்தரம் கடந்த சில பத்தாண்டுகளில் பெருமளவு வலுவடைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. பெரியார் போன்ற பல சமூகத் தலைவர்களின் எழுச்சி மாபெரும் மாற்றத்தை கல்வித் தளத்தில் உருவாக்கியது. ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் கடந்து பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற அது உதவியது.
கல்வி, வேலை, அரசியல் பங்களிப்பு, நிர்வாகம், தொழில், இலக்கியம் என எல்லா இடங்களிலும் பெண்களின் இருப்பும், பெண்களின் பங்களிப்பும் இனி வரும் காலத்திலும் வளரும் என்பதில் சந்தேகமில்லை.
பெண்களுக்கு என சில இயல்புகள் உண்டு அவை ஆண்களுக்குக் கிடையாது. உதாரணமாக குடும்பத்தைக் கட்டியெழுப்பவும், பிள்ளைகளைப் பாதுகாக்கவும், உறவுகளைப் பேணவும் பெண்களுக்கு இருக்கின்ற லாவகம் ஆண்களுக்கு கைவராத கலை. அதனால் தான் பெண்கள் பெரும்பாலும் குடும்பத்தின் பின்னால் இருந்து இயக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
ஆண்கள் சமூகத்தின் முன்னால் நின்றார்கள். அவர்களுடைய பங்களிப்பு உடல் உழைப்பு சார்ந்தும், அதிகாரம் சார்ந்தும் இருந்தது. அதனால் அவர்கள் மேலானவர்கள் என முடிவு செய்யவும் கூடாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள உடல், உளவியல் சார்ந்த இயல்பு அவர்களை இயக்குகிறது என வைத்துக் கொள்ளலாம்.
இதயம் வெளிப்பார்வைக்குத் தெரியவில்லை எனவே அது குறைந்த மதிப்பு கொண்டது, கரம் வெளிப்பார்வைக்குத் தெரிகிறது எனவே அது அதிக மதிப்பு கொண்டது என சொல்ல முடியுமா என்ன ?
பெண்கள் எல்லா இடங்களிலும் நுழைவதில் எந்தத் தவறும் இல்லை. அதே போல அவர்கள் வீடுகளை ஒரு சின்ன சொர்க்கமாக மாற்றும் பணியை மட்டும் செய்கிறார்கள் என்றால் அதில் எந்த இழிவும் இல்லை என்பதே புரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.
“இப்படி வாழ்ந்தால் தான் மதிப்பு” , “இப்படிப் பேசினால் தான் மதிப்பு”, “இப்படி நடந்து கொண்டால் தான் மதிப்பு” என பல பெண்கள் தவறான உதாரணங்களைக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை அமைக்கப் பார்க்கிறார்கள். அதனால் பல வேளைகளில் நிராசையும், மன உளைச்சலும் அவர்களை நிரப்புகிறது.
நாம் நாமாக இருப்பதே மிகச் சிறப்பானது ! நமது வாழ்க்கை மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. அதற்குத் தேவையானவற்றை நாம் செய்ய வேண்டும்.
பெண்கள் அன்பினால் கட்டமைக்கப்பட்டவர்கள் அவர்கள் இருக்கின்ற இடத்தில் மகிழ்வும் அன்பும் நிரம்பியிருக்கும். அத்தகைய பெண்களுக்கு எதிராக வன்முறைகள், கொடுமைகள் போன்றவை நடப்பது ஆண்களுடைய இயலாமையின் வெளிப்பாடு. சமூகத்தில் ஒரு பெண் அல்லல் படுகிறாள் என்றால், அந்த சமூகத்திலுள்ள ஆண்கள் தான் அதற்காக வெட்கப்பட வேண்டும். சமூகத்தில் பெண் தலைகுனிகிறாள் என்றால் அது ஆணின் தோல்வி என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் நேற்று எப்படி இருந்தார்கள், இன்று எப்படி இருக்கிறார்கள் என்பதெல்லாம் வரலாற்றுக் குறிப்புகளே. நாளை எப்படி இருக்க வேண்டும் என்பதே தேவையான சிந்தனை !
பெண்கள் ஒரு சமத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்பும் கருவிகளாக இருக்க வேண்டும். அவர்களால் மட்டும் தான் அது முடியும். காரணம் அவர்கள் தான் வீடுகளைக் கட்டமைக்கிறார்கள். வீடுகளில் அவர்கள் விதைக்கின்ற விதைகள் தான் சமூகத்தில் விளையும். எனவே மிகச் சிறந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் அறைகூவலை அவர்கள் எடுக்க வேண்டும்.
பெண்கள் அடுத்த தலைமுறையை அன்பினால் கட்டியெழுப்ப வேண்டும். ஒரு உயிரிலிருந்து உயிரை வெளியே எடுத்தால் பிணம் என்பார்கள். பெண்களையோ தாய் என்பார்கள். அந்தத் தாய் குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களை அவர்கள் செய்யப் போகும் பணியை நோக்கி வளர்த்தாமல், அவர்கள் வாழப்போகும் வாழ்வை நோக்கி வளர்த்த வேண்டும்.
குழந்தைகளின் குணாதிசங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். மதிப்பெண்களை நோக்கிய ஓட்டம் அல்ல, மதிப்பீடுகளை நோக்கிய ஓட்டமே முக்கியமாய் இருக்க வேண்டும். மனிதனாய் வாழ்வதே முக்கியம் என்பதை உணர வேண்டும். அதை பெண்கள் மட்டுமே செய்ய முடியும்.
பெண்கள், தங்கள் தன்னம்பிக்கையை பெருமளவு வளர்த்த வேண்டும். பெண்களை பின்னுக்கு இழுப்பவை தேவையற்றவற்றில் அவர்கள் செலவிடும் நேரம் தான். அது சீரியலாகவும் இருக்கலாம், கிசு கிசுவாகவும் இருக்கலாம், அல்லது அது போன்ற ஏதோ ஒன்றாகவும் இருக்கலாம்.
முறத்தால் புலி விரட்டிய பெண்மை, அறத்தால் நாடாண்ட பெண்மை , திறத்தால் தமிழ் வளர்த்த பெண்மை, தங்கள் தன்னம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது. சமூக வெளியில் தாங்கள் சம உரிமை படைத்தவர்கள் எனும் சிந்தனை இருக்க வேண்டும்.
பெண்கள் மகிழ்வாக இருக்கும் குடும்பம் செழிக்கும்.
பெண்கள் மகிழ்வாக இருக்கும் சமூகம் செழிக்கும்.
பெண்கள் மகிழ்வாக இருக்கும் தேசம் செழிக்கும்
பெண்மையைப் போற்றுவோம்! பெண்மையைப் போற்றுவோம்
1,061 total views, 3 views today