தற்காக்கும் சகிப்புத்தன்மையின் அவசியம்
-கரிணி-யேர்மனி
“திறன் அல்ல தன் பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன் அல்ல செய்யாமை நன்று.”
நேர்மை அல்லாததைத் தனக்குப் பிறர் செய்யினும், மனம் வருத்தத்தால் தூண்டப்பட்டு அறன் அல்லாததைச் செய்யாமல் சகிப்புத் தன்மையோடு இருத்தல் நன்று. (திருக்குறள்)
சகிப்புத் தன்மை என்றால் என்ன? உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளல், இசைந்து போதல் இப்படி எடுத்துக் கொள்ளலாம். பொறுமை, அமைதி, நிதானம் போன்றவை சகிப்புத்தன்மையோடு ஒன்றிணைந்தவை என்றாலும் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்குமிடையே சிறு வித்தியாசம் உண்டு. சூழ்நிலை காரணமாக மனம் ஏற்றுக் கொள்ளாமல் கடைப்பிடிக்கப்படும் பொறுமை அழுத்தமாக மாறும், ஏற்றுக்கொண்ட பொறுமை சகிப்புத்தன்மையாக மாறும்.
எந்தவொரு பாகுபாடுமின்றி, ஏற்றத்தாழ்வு இன்றி, பெரியவர், சிறியவர் என்ற வயது வித்தியாசமின்றி சக மனிதனை மதித்து நடந்துகொள்ளும் போது சகிப்புத்தன்மை எமக்கு மட்டுமல்ல எதிரில் உள்ளவருக்கும் உருவாகும், அதனைவிட பிறர் மரியாதையற்று நடந்துகொள்ளும் போதும் எமக்கான நற்பண்புகளிலிருந்து மீறாமல் அத்தகையவருக்கும் மதிப்பு வழங்கும் போது சகிப்புத்தன்மை வளருகின்றது. ஒருவர் எவ்வாறு உள்ளாரோ அதில் எம் எதிர்பார்ப்புகளைத் திணிக்காது அவ்வாறே ஏற்றுக் கொள்வதும், முடியாதவிடத்து அமைதியாக விலகியிருப்பதும்கூட சகிப்பு தன்மையாகும். மன்னிக்கும் மனப்பாங்கும், தியாகமான உள்ளமும் அதி உச்சநிலையில் சகிப்புத் தன்மையை வளர்க்கும். தாக்குவதற்காக வருபவரை கூட இன்முகத்தோடு அன்பாக எதிர்கொள்வதால் எதிராளியின் மனநிலையோடு அந்த சூழ்நிலையே மாறிவிடும். தன் கருத்தை, தன் இடத்தை தக்கவைக்க வேண்டும் என்ற பயமே கோபத்தின் வெளிப்பாடாகும். கோபத்தின் அடிப்படை பயம். தன்பக்கம் நியாயம் இருப்பினும் இல்லாது விடினும் கோபத்தின் அடிப்படை பயமாகும். குடும்பத்தில் கூட அகங்காரமாக நடந்து கொள்பவர்கள் தன் கட்டுப்பாட்டை மற்றவர்கள் மீறிவிடக்கூடாது என்ற பயம் உடையவர்கள்.
பயம் மற்றும் மன உளைச்சல் என்பது சகிப்புத் தன்மையின் எதிர்மறையான விடயங்களாகும். அவை பார்வைக்கு அமைதியாக தெரிந்தாலும் அகத்தே பெரும் சுழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். தனக்கே தன்னை விரோதியாக்கிவிடும். வெறுமனே வாழ்வை சாட்சிபாவமாக கவனித்து அமைதி பேணாதவிடத்து எண்ணங்களும் செயல்களும் பெருகிக்கொண்டே விரிந்து செல்லும்.
ஒரு பலூனுக்குள் எவ்வளவு காற்றை நிரப்ப வேண்டும் என்ற அளவு உண்டு மேலதிகமானால் அது வெடித்துவிடும். அது போலவே சகித்துக்கொண்டு கடந்துவிட முடியாத விடயங்கள் பலமான அழுத்தங்களை ஏற்படுத்தி மிகப்பெரும் சிதைப்பை ஏற்படுத்தும். வருவது வரட்டும் என்று அமைதியாக இருந்து ஒவ்வொரு விடயங்களிலும் புதுப்புது அனுபவங்களைப் பெற வேண்டும். மன அழுத்தங்கள் ஏற்படுத்தும் வகையில் ஆழமாக எண்ண ஓட்டங்களை சுழல விடாது சம்பவங்கள் ஒவ்வொன்றையும் ஏற்றுக்கொள்ளும் போது துயரப்பட வைக்கும் மனநிலை அமைதியாகிவிடும். அங்கு பயம் நெருங்கவே முடியாது.
இரும்பை எந்தவொரு பொருளாலும் அழிக்க முடியாது
தானே துருப்பிடித்து அழிந்தாலொழிய. சுய பச்சாதாபம் என்பது தன்னை தானே கூறு போடும் முட்டாள்த்தனம். தன் சினம் மற்றும் தன் எதிர்பார்ப்பும் கண்டுகொள்ளப்படாமல் போகும் போது வருவது சுய பச்சாதாபம். தான் வஞ்சிக்கப்படுகிறேன் என்ற மனநிலையானது எப்போதுமே ஏற்படுமாயின் வாழ்வில் எதன் மேலும், யார் மீதும் நம்பிக்கை ஏற்படாது. உண்மையில் தனது மனமானது தனக்கே எதிராக செயற்படுவதால் தன்னால் தானே பலமாக வஞ்சிக்கப்பட்டு இயல்பு வாழ்வினையே வாழ முடியாத பயந்த சுபாவத்துடன் இரவையும் பகலையும் கழிக்க நேரிடும். இத்தகைய மனமானது பகலில் தனக்கெதிரான எண்ணங்களை கொண்டிருப்பதை போல இரவுக் கனவுகளில் அத்தகைய கொடிய காட்சிகளையும் கொண்டிருக்கும். அங்கு தோன்றும் சாத்தான்கள் கல்லறைகளில் இருந்து எழுந்து வந்தவையல்ல. நிச்சயமாக எதிர்மறை எண்ணங்களிலிருந்து தோன்றி வந்தவையேயாகும்.
மூளையில் சேர்த்து வைத்த நினைவுப்பதிவுகள் அப்படியே உறைந்து இருந்துவிடப் போவதில்லை, அவை எம்மில் சக்தியை உறிஞ்சிக் கொண்டு எம்மோடு பேசி செயல்வடிவம் பெறத் துடிக்கும். விழித்திருக்கும் தருணத்தில் அசைபோட்டும் உறங்கும் தருணத்தில் கனவுகளாகவும் பேசி கனவிலாவது செயல்வடிவத்தில் நிகழ்த்திவிடும். அத்தகையது மனம். இந்த மனதில் எதிர்மறையான எண்ணப்பதிவுகளை சேமித்து வைத்தல் என்பது சொந்தச் செலவில் தனக்கே சூனியம் வைத்துக் கொண்டமைக்கு சமம்.
காத்திருத்தலே காலத்தின் கனிகளைப் பெற்றுத்தரும். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்னதாகவே எடுத்தெடுத்து உண்ணும் பழக்கம் போன்றவற்றை குழந்தைகளுக்கு சொல்லித்தர கூடாது. அவர்களை காத்திருக்க அனுமதிக்க வேண்டும். பழக்கப்படுத்த வேண்டும். அது சகிப்புத் தன்மையை வளர்க்கும். காத்திருக்க பழகிவிட்டாலே வாழ்வில் ஏற்படும் இக்கட்டான துயர சமயங்களில் கூட அதற்கான தீர்வு உண்டாகும் என்ற பொறுமையோடு சகிப்புத்தன்மை வளர்ந்துவிடும். அதி வேதனையில் முரட்டுத்தனமாக தன்னைத் தானே வஞ்சித்து செய்யும் தற்கொலையை கூட சகிப்புத்தன்மை தடுத்துவிடும்.
மாற்றவே முடியாத விடயங்களை சகித்துக் கொள்ளுதல் வேண்டும். எதிராக போராடினாலோ அல்லது மனதில் போட்டு அழுத்தினாலோ பாதிப்பு மட்டுமே உருவாகும். சகித்துக் கொள்ளுமிடத்து அதன் முடிவு இன்பமயமானதாக இருக்கும். ஒரு கருவினை சுமக்கும் தாயின் சகிப்புத்தன்மையினை போல, அத்தகைய தாய் தன் குழந்தை அடிக்கடி தொந்தரவு செய்தாலும் அன்போடு ஏற்றுக் கொண்டு சேவை செய்வதைப்போல, அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தன்னை சிலுவையில் அறைந்தவர்களையே மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்த இயேசுவைப்போல, சிறைச்சாலையில் தன் நெஞ்சில் தினம் உதைத்த காவலனுக்கு அந்த வடுவின் அடையாளம் எடுத்து அழகிய பாதணி தன் கையால் தைத்து கொடுத்த காந்தியடிகள் போல. இப்படி வீட்டில் உள்ளவர்கள் முதல் நாட்டின் தலைமைகள் வரை உதாரணங்கள் பல கூற முடியும். இதனால் பெறுமதியான எதையும் இழப்பதற்கு இல்லை. ஆணவம், அகங்காரம், மமதை போன்ற தீய விடயங்களே இழக்கப்படுவதால் அத்தகைய மனிதனாலேயே முழுமை பெறமுடியும். இதுவே அகச்சுத்தம். இங்கு அன்பு இயல்பாகவே குடிகொண்டிருக்கும்.
கிடைத்திருக்கும் வாழ்வையும், எம் சூழலையும் சகித்துக் கொண்டால் அந்த சூழலை மேலும் அழகாக்கிவிட வாய்ப்புக்கள் அமையும். ஏற்றுக்கொள்ளாவிடத்து அந்தச்சூழலோடு உடல், மன அகச்சூழலும் பாதிப்புக்குள்ளாகும். எதுவாயினும் கடந்து விடும். எனவே எந்த விடயத்தாலும் காயப்படுத்த முடியாத சுதந்திர காற்றைப் போல் திகழ வேண்டும். இந்தக் கணம் மட்டுமே உண்மை மற்றவை எல்லாம் நினைவுகளும் கற்பனைகளுமே. நாம் வாழ்வதற்கு சிரமப்படும் இந்த வாழ்க்கை பலருக்கு எட்டாக்கனியாகவும் கனவாகவும் இருக்கிறது. வாழ்க்கை என்பதே சவால் தான். அது மனிதனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிரினங்களுக்கும் அவ்வாறே அமைந்துள்ளது. எல்லாம் எம்பக்கம் சாதகமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தால் அது எத்தனையோ உயிரிகளுக்கு பாதகமாகவும் இருக்கலாம். எனவே இயற்கை தன்னை சமநிலைப்படுத்துவதில்தான் கவனம் கொள்ளும். வருவது எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதால் இலகுவில் அதை கடந்து விடலாம். இன்பமோ, துன்பமோ பிடித்துவைக்க முடியாது. அடுத்த கணம் எமக்கானதாககூட மாறிவிடும் எவர் அறியக் கூடும்.
முக்கியமானது என்னவெனில் எவ்வாறு துன்பத்தை சகித்துக் கொள்கின்றோமோ அவ்வாறே இன்பத்திலும் சகிப்பு வேண்டும். இன்பத்தை கொண்டாடும் மனநிலையானது துன்பம் வரும்போதும் துவண்டுவிடும். எனவே சமநோக்கு பார்வையில் இருநிலையிலும் சலனமுறாமல் சகித்துக் கொண்டால் அதுவே அற்புதமான யோக நிலையாகும். அந்நிலையில் திருப்தி படுத்தவே முடியாத ஆவலும், நாவுக்கு சுவையும், மனதுக்கு ஆசையும், அகங்காரத்துக்கு தீனியும் தேடி அலைவது நின்றுபோய் அர்த்தமுள்ள வாழ்வானது அகத்தேயும், புறத்தேயும் அழகாக மலரும்..
1,101 total views, 3 views today